சிறப்புக் கட்டுரைகள்

ஆன்மிக அமுதம்- பாரதம் போற்றும் பாஞ்சாலி!

Published On 2022-08-11 10:04 GMT   |   Update On 2022-08-11 10:04 GMT
  • திரவுபதியை புனிதமான ஐந்து பெண்களில் ஒருத்தியாகப் போற்றுகிறது ஒரு சமஸ்கிருத சுலோகம்.
  • மாபெரும் மகாபாரதப் போருக்கு வழிவகுத்து எண்ணற்ற படைவீரர்கள் இறக்கக் காரணமாக இருந்தது திரவுபதி சிரித்த ஒரே ஓர் ஏளனச் சிரிப்புத்தான் என்றால் ஆச்சரியம் ஏற்படும்.

ஒரு பெண்ணுக்கு ஐந்து கணவரா என்ற கேள்வி எழுந்தது. காந்தி ஓர் அருமையான விளக்கம் தந்தார். இந்து மதக் கதைகள் உருவகக் கதைகளே என்று சொன்ன அவர், பாஞ்சாலி குறித்துச் சொன்ன கருத்து என்ன தெரியுமா?

அவள் ஆன்மா. பஞ்ச பாண்டவர்கள் மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்புலன்கள். ஆன்மா ஐம்புலன்களோடு இணைந்து வாழ்க்கை நடத்துகிறது.

வாழ்க்கை என்ற சூதாட்டத்தில் நூற்றுக்கணக்கான தீய சக்திகளால் தாக்கப்பட்டு ஐம்புலன்களும் தங்களை இழந்துவிடுகின்றன. ஆன்மா கையறு நிலையில் இறைவனை அழைத்ததும் இறைவன் அதன் மானத்தைக் காத்துக் கரை சேர்க்கிறார். இந்தத் தத்துவத்தின் உருவகமே மகாபாரதம் என விளக்குகிறார் காந்தி அடிகள்.

* திரவுபதியை புனிதமான ஐந்து பெண்களில் ஒருத்தியாகப் போற்றுகிறது ஒரு சமஸ்கிருத சுலோகம். இந்த சுலோகத்தை அதிகாலையில் எழுந்தவுடன் சொல்வது நல்லது என்றும் ஒரு நம்பிக்கை நிலவுகிறது. சுலோகம் இதுதான்:

`அகல்யா திரவுபதீ சீதா தாரா மண்டோதரி ததா பஞ்ச கன்யா ஸ்மரேந் நித்யம் சர்வ பாப விநாசனம்' நாள்தோறும் அகலிகை, திரவுபதி, சீதை, தாரை, மண்டோதரி ஆகிய ஐந்து பேரை நினைத்துக்கொண்டால் எல்லாப் பாவங்களும் அகலும் என்பது இதன் கருத்து. திரவுபதியை ஐந்து கணவர்களைக் கொண்டவள் என்கிற வகையில் கொச்சையாகப் புரிந்துகொள்வது எத்தனை தவறு என்பதை இந்த சுலோகம் உணர்த்தும். அம்மனாக வழிபடப்படும் புனிதவதி திரவுபதி.

* பாஞ்சால நாட்டு அரசனான துருபதன் செய்த வேள்வித் தீயில் ஒரு பெண்ணும் ஓர் ஆணுமாக அடுத்தடுத்து இருவர் தோன்றினர். திருஷ்டத்யும்னனும் திரவுபதியுமே அவர்கள்.

பேரழகியான திரவுபதி வேள்வி நெருப்பில் உதித்ததால் யாகசேனி என்று அழைக்கப்பட்டாள். கரிய நிறத்தவள் என்பதால் கிருஷ்ணை என்றும் பெயர் பெற்றாள். கிருஷ்ண என்ற சொல் கருமை நிறத்தைக் குறிப்பது.

பாஞ்சால இளவரசி என்பதால் பாஞ்சாலி என்றும் அவளைக் குறிப்பிடுவதுண்டு. அந்தப் பெயரில்தான் `பாஞ்சாலி சபதம்` என்ற காவியத்தைப் படைத்தார் பாரதியார்.

* நிலத்தில் இருந்து பிறந்தவள் சீதை. ஜனகர் பொன்னேர் பிடித்து உழுதபோது ஏர்முனையில் ஒரு பெட்டி தட்டுப்பட அதைத் திறந்து பார்த்தபோது, அதனுள்ளிருந்து மலர்ந்து சிரித்தாள் சீதைக் குழந்தை.

நிலத்தில் இருந்து பிறந்த சீதைக்குத் தனிக்கோவில்கள் கிடையாது. அவள் இருக்கும் ஆலயங்களில் எல்லாம் கணவர் ராமபிரானுடனும் மைத்துனர் லட்சுமணனுடனுமே காட்சி தருகிறாள்.

ஆனால் நெருப்பிலிருந்து பிறந்த பாஞ்சாலிக்குத் தனி ஆலயங்கள் உண்டு. ஏராளமான ஊர்களில் திரவுபதி அம்மன் ஆலயங்களில் அவள் தனித்தே அருளாட்சி நடத்துகிறாள்.

* மாபெரும் மகாபாரதப் போருக்கு வழிவகுத்து எண்ணற்ற படைவீரர்கள் இறக்கக் காரணமாக இருந்தது திரவுபதி சிரித்த ஒரே ஓர் ஏளனச் சிரிப்புத்தான் என்றால் ஆச்சரியம் ஏற்படும். சிரித்தது மட்டுமல்ல, இளக்காரமாக ஒரு கேள்வியையும் கேட்டாள் பாஞ்சாலி என்கின்றன சில கதைகள். அந்த சம்பவம் இதுதான்:

பாண்டவர்கள் இந்திரப் பிரஸ்தம் என்னும் நகரை தேவதச்சன் மயன் மூலம் நிர்மாணித்தார்கள். அந்நகரில் புதிதாக ஓர் அரண்மனை கட்டப்பட்டது. பளிங்கால் இழைத்த அந்த அரண்மனையின் எழிலை விவரிக்க வார்த்தையில்லை.

துரியோதனன் அந்த அரண்மனைக்கு அழைக்கப்பட்டான். அதை அவன் சுற்றிப்பார்த்துக் கொண்டிருக்கும்போது தண்ணீரோ என நினைத்துத் தரைமேல் உடையைக் கையில் தூக்கிப் பிடித்தவாறு மெல்ல நடந்தான். இன்னோர் இடத்தில் தரைதான் என நினைத்துக் கவனமில்லாமல் காலை வைக்க அவன் தண்ணீரில் விழுந்தான்.

இந்த அமர்க்களத்தையெல்லாம் உப்பரிகையிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த பாஞ்சாலி கிளுக் எனச் சிரித்தாள். தன்னை எள்ளி நகையாடும் சிரிப்பொலி கேட்டு துரியோதனன் அண்ணாந்து பார்த்தான். திரவுபதி `உன் தந்தை திருதராஷ்டிரர்தான் பார்வையற்றவர் என்றால், நீயுமா?` எனக்கேட்டு மறுபடியும் கலகலவென நகைத்தாள்.

அந்த ஏளன நகைப்பும் எள்ளி நகையாடிய கேள்வியும் துரியோதனன் மனத்தில் விஷத்தை விதைத்தன. தீராத அவமானமடைந்த அவன் மனத்தில் வஞ்சம் கொண்டான். அதன் விளைவே மகாபாரதப் போர் என்கிறது மகாபாரதம்.

* பாரதியார் பாஞ்சாலி சபதத்தில் சட்டபூர்வமான ஒரு கேள்வியை எழுப்புகிறார். தன் துகிலை உரிய வந்த துச்சாதனனிடம் `பாண்டவர்கள் சூதாட்டத்தில் தம்மை இழந்தபின் என்னைப் பணயம் வைத்தார்களா, இல்லை என்னைப் பணயம் வைத்து இழந்தபின் தங்களை இழந்தார்களா?` என்று வினவுகிறாள் பாஞ்சாலி.

உண்மையில் தருமபுத்திரர் தம்மை வைத்து இழந்தபின்தான் இறுதியாக வேறு வழியின்றி திரவுபதியைப் பணயம் வைக்கிறார்.

`தம்மையே இழந்து அடிமையானபின் அடிமைகளுக்குத் தாரமேது? எனவே நான் துருபதன் மகள். என்னைப் பணயமாக வைக்கும் உரிமை பாண்டவர்களுக்கு இல்லை` என வாதிடுகிறாள் பாஞ்சாலி.

பாரதியின் வரிகள் இதோ:

`நாயகர் தாம்தம்மைத் தோற்றபின் - என்னை

நல்கும் உரிமை அவர்க்கில்லை

தாயத்திலே விலைப் பட்டபின் - என்ன

சாத்திரத்தால் என்னைத் தோற்றிட்டார்? -அவர்

தாயத்திலே விலைப் பட்டவர் - புவி

தாங்கும் துருபதன் கன்னிநான் - நிலை

சாயப் புலைத்தொண்டு சார்ந்திட்டால் - பின்பு

தாரமுடைமை அவர்க்குண்டோ?`

இந்த நியாயமான வாதம் அநியாயக்காரர்கள் கூடியிருக்கும் சபையில் எடுபடவில்லை. `மாதவிலக்கு ஆதலால் ஓராடை தன்னில் இருக்கின்றேன்` என்று தன் அன்றைய நிலையை அவள் சொல்லியும் துச்சாதனன் மனம் இரங்கவில்லை. பிறகு நடந்த துகிலுரிதல் நிகழ்வு தொடர்பாக ஓர் அழகிய நாடோடிக் கதை இருக்கிறது.

கண்ணன் கொடுக்கக் கொடுக்க திரவுபதியின் சேலை வளர்ந்துகொண்டே இருக்கிறது. பல வண்ணங்களில் அழகழகாக அந்தச் சேலை நீண்டு செல்கிறது. அது கடவுள் கண்ணன், தறியில் தன் கைப்பட நெய்த சேலையல்லவா? அதன் எழில் அபாரமாக இருப்பதில் என்ன வியப்பு?

கவுரவர்களின் மனைவியரான நூறு பேரும் கண்ணைக் கவரும் புதிய சேலைகளைப் பார்த்து அவற்றைத் தாங்கள் உடுத்திக் கொள்ள ஆசைகொள்கிறார்கள். சேலைகள் வளரும் போதே அவசர அவசரமாக அதைக் கிழித்தெடுத்துத் தங்களது சேலையாக ஆக்கிக் கொள்கிறார்கள்.

அந்தப்புரம் சென்று ஏற்கெனவே உடுத்தியிருந்த பழைய சேலையைக் களைந்து புதிய சேலைகளை அணிந்து கொண்டு ராஜசபைக்கு வருகிறார்கள். புதிய சேலை தந்த பெருமிதத்தோடு ஆனந்தம் பொங்க நிற்கிறார்கள்.

திருப்பூர் கிருஷ்ணன்

 ஒரு கட்டத்தில் துச்சாதனன் கை ஓய்ந்து துகிலுரிவதை நிறுத்துகிறான். துவாரகையில் இருக்கும் கண்ணன் நகைத்தவாறே இனி இந்த விளையாட்டு தேவையில்லை எனத் தன் கையைத் தட்டுகிறான்.

அடுத்த கணம் திரவுபதி ஏற்கனவே உடுத்தியிருந்த அவள் பழைய சேலையைத் தவிர ஏனைய புதுச் சேலைகள் எல்லாம் மறைகின்றன!

பாஞ்சாலியை நிர்வாணப்படுத்த முயன்ற கவுரவரின் மனைவியர் அத்தனை பேரும் துரியோதனன் சபையில் நிர்வாணமாக நின்றனர் என்கிறது `தன் வினை தன்னைச் சுடும்` என்ற கருத்தை விளக்கும் அந்த நாடோடிக் கதை.

* தன் முடியைப் பிடித்து இழுத்துவந்த துச்சாதனன் கொல்லப்படும் வரை தன் கூந்தலை முடியமாட்டேன் எனச் சபதம் செய்தாள் பாஞ்சாலி. அன்றிலிருந்து மகாபாரதப் போரில் பாண்டவர்கள் வெற்றிபெறும் வரை அவிழ்ந்த கூந்தலோடு தலைவிரி கோலமாகவே காட்சி தந்தாள். கூந்தலை முடியமாட்டேன் எனச் சூளுரைத்ததே பாஞ்சாலியின் சபதம். பாரதியார் உணர்ச்சி பொங்க அந்நிகழ்ச்சியை எழுதுகிறார்:

`தேவி திரவுபதி சொல்வாள் - ஓம்

தேவி பராசக்தி ஆணையுரைத்தேன்

பாவி துச்சாதனன் செந்நீர் - அந்தப்

பாழ்த் துரியோதனன் யாக்கை ரத்தம்

மேவி இரண்டும் கலந்தே - குழல்

மீதினில் பூசி நறுநெய் குளித்தே

சீவிக் குழல் முடிப்பேன் யான் - அது

செய்யுமுன்னே முடியேன் என்றுரைத்தாள்..

ஓமென்றுரைத்தனர் தேவர் - ஓம்

ஓமென்று சொல்லி உறுமிற்று வானம்

பூமி அதிர்ச்சி உண்டாச்சு - விண்ணைப்

பூழிப் படுத்தியதாம் சுழல் காற்று

சாமி தருமன் புவிக்கே - என்று

சாட்சி உரைத்தன பூதங்கள் ஐந்தும்

நாமும் கதையை முடித்தோம் - இந்த

நானிலம் முற்றும் நல்லின்பத்தில் வாழ்க!`

* பாண்டவர்கள் ஐவர் மூலமாகவும் ஐந்து குழந்தைகளைப் பெற்றாள் பாஞ்சாலி. அவர்கள் உப பாண்டவர்கள் என அழைக்கப்பட்டார்கள். குருட்சேத்திரப் போரின் இறுதி நாளான பதினெட்டாவது நாளில் நடு இரவில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த உப பாண்டவர்களைப் பாண்டவர்கள் என்றே நினைத்து இரக்கமின்றிக் கொன்று குவித்தான் அசுவத்தாமன். தன் குழந்தைகள் ஐவரையும் இழந்த துயரத்தைப் பாஞ்சாலி அனுபவிக்க வேண்டியிருந்தது.

* வால்மீகி ராமாயணத்தை மூல நூலாகக் கொண்டு கம்பர் கம்பராமாயணம் படைத்தது போலவே, வியாச பாரதத்தை ஆதாரமாகக் கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆழ்வார் படைத்ததுதான் வில்லி பாரதம்.

பின்னாளில் ராஜாஜி `வியாசர் விருந்து` என்ற தலைப்பில் மகாபாரதத்தை எளிய முறையில் சுருக்கித் தந்தார். நாவலாசிரியரான தீபம் நா. பார்த்தசாரதியும் மகாபாரதத்தை `அறத்தின் குரல்` என்ற தலைப்பில் உரைநடையில் எழுதியுள்ளார்.

பாஞ்சாலியை மையமாக வைத்து இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் புதிய கண்ணோட்டங்களில் நாவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நாவல்களில் பாஞ்சாலி இன்றைய பெண்ணியக் கண்ணோட்டத்திலும் அணுகப்படுகிறாள்.

பெண்கள் ஒன்றை நினைத்தால் அதைக் கட்டாயம் நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கையின் வடிவம் பாஞ்சாலி. மன்னர்கள் கூடியிருக்கும் சபையில் பெண்சிங்கம் போல் கர்ஜித்தவள். எதற்கும் அஞ்சாத வீராங்கனை. மனிதர்கள் கைவிட்ட நேரத்தில் கடவுளிடமிருந்தே நேரடியாக உதவி பெற்ற பெருமைக்குரியவள். பாரதத்தின் பெருமிதம் பாஞ்சாலி.

தொடர்புக்கு:

thiruppurkrishnan@gmail.com

Tags:    

Similar News