சிறப்புக் கட்டுரைகள்

தன்னை உணர்தலே தவ வாழ்க்கை!

Published On 2024-04-27 10:33 GMT   |   Update On 2024-04-27 10:33 GMT
  • நாம் இந்த உலகத்திற்கு வந்த நோக்கம் மிகவும் உன்னதமானது.
  • எதிர்காலத்தை பற்றி சிந்திக்கும் போது பயம் ஏற்படுகிறது.

அன்பார்ந்த வாசகர்களே, கடந்த வாரம் துறவு என்பது எதையும் விட்டு விடுவது அல்ல, இருப்பதை அப்படியே ஏற்று கொண்டு வாழ்வது என்பது உண்மையான துறவின் இலக்கணம் ஆகும். இதை நிஷ்காமிய கர்மம் என்கிறது கீதை. இதை இன்னும் நாம் எளிமையாக புரிந்து கொள்ளும் விதமாக வேதாத்திரி மகரிஷி அவர்கள் "உறவிலே கண்ட உண்மை நிலை தெளிவு துறவு" என்கிறார்.

எனக்கு எது எப்படி, எங்கு, எவ்வாறு அமைந்ததோ, அது இறைவன் சித்தம். அதை நான் ஏற்று கொள்கிறேன் என்கின்ற மன பக்குவத்தோடு வாழ வேண்டும். ஏனென்றால் நாம் யாரும், இந்த உலகத்திலே, நான் இந்த தாய், தந்தைக்கு மகனாகவோ, மகளாகவோ பிறக்க வேண்டும் என்று ஆசைப்படவில்லை. இதில் இருந்து என்ன தெரிகிறது? பிறப்பு என்பதே நம் கையில் இல்லை. அப்படி என்றால் எதுவும் நம் கையில் இல்லை. அது, அது நடக்க வேண்டிய நேரத்தில் தானாக நடக்கிறது.

எனவே, இந்த உலகில் யாரையும் மாற்றுவதற்காக நான் பிறக்கவில்லை. என்னை நானே முதலில் மாற்றி கொள்ள வேண்டும். என் மாற்றத்தை பார்த்து தான் நம் குடும்பத்தில் உள்ளவர்கள் மாறுவார்கள். ஆனால் நாம் மாறாமல், மற்றவர்களுக்கு உபதேசம் செய்து கொண்டு இருக்கிறோம். இதனால் குடும்பத்தில் சிக்கல்கள் வருகிறது.

ஒன்றை நாம் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். நம் வாழ்க்கையானது, பிறக்கும் போது நம்மோடு சேர்ந்து வந்தது இன்பம், துன்பம் என்கின்ற இந்த இரண்டு உணர்வுகள். அதை அப்படியே ஏற்று கொள்வது தான் ஞான வாழ்க்கை. உண்மையான சந்நியாசம், இந்த நிலையில் இருந்து நாம் அறியப்படும் பொருளை அதாவது ஆன்மாவை அறிய முற்பட வேண்டும்.

நாம் சாதாரண மனிதர்கள் அல்ல, நாம் மனம் கொண்ட ஈசனாய் இருப்பதால் தான் நமது பெயர் மனுசன். அந்த ஈசனுக்கு உடல் இல்லை. இந்த மனிதர் என்கின்ற ஈசனுக்கு உடல் உண்டு. எனவே, இந்த பிரபஞ்சம் என்பது ஒரு பிரம்ம பீடம்.

நாம் இந்த உலகத்திற்கு வந்த நோக்கம் மிகவும் உன்னதமானது. நாம் இங்கு வந்திருக்கிறோம் என்றால், நம்மிடம் அதற்கான தகுதியும், தரமும் இறைவன் கொடுத்து தான் நம்மை ஒரு தாயின் வயிற்றில் கருவிலே உருவாக்கி இருக்கிறான். அந்த தகுதி நமக்கு இல்லையென்றால், நாம் இன்னும் பல பிறவிகள் ஓரறிவு தாவரம் முதல் ஐந்தறிவு விலங்காக தான் பிறவியில் இருப்போம்.

எனவே நாம் ஒவ்வொருவரும் இறை தன்மை பெற்றவர்கள். இதை நாம் உணர்வதே, ஞான வாழ்வின் நோக்கம். இதை தான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், மனித வாழ்வின் நோக்கம் அறநெறி படி வாழ்ந்து இறையுணர்வு பெறுதல் என்கிறார். இதற்கு முதல் வழி, தன்னையறிதல் ஆகும்.

வாழும் காலத்திலே தன்னையறிதலுக்கு இரண்டு வழிகள் உண்டு. ஒன்று தவம் மற்றொன்று மவுனம் ஆகும். தவத்தின் வழியாக (தியானம்) புலன்களின் மூலமாக மனதை அறிய முடியும். ஆனால் மவுனத்திலே, மனதின் எஜமானாகிய ஆன்மாவை அறியமுடியும். இதை தான் திருமூலர் அவர்கள்,

"தன்னை அறிந்தால் தனக்கொரு கேடில்லை

தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்

தன்னை அறியும் அறிவை அறிந்த பின்

தன்னை தானே அர்ச்சித்தானே" - என்கிறார்.

இதையே மகரிஷி அவர்கள், மனதை அறிந்தால் தான் அதன் மூலத்தை அறியலாம் என்கிறார். எனவே மனதை அறிவது தவம். அதை பற்றிய ஆய்வே மவுனம் ஆகும். எனவே உன்னில் தேட உள்ளது கிடைக்கும் என்று மகான்கள் கூறுகிறார்கள்.

இந்த ஞான வாழ்க்கையை வேதத்திரி மகரிஷி அவர்கள், ஒரு மனிதர் வாழும் காலத்திலேயே முதலில் தன்னை உணர வேண்டும். அப்படி அறிந்தால் தான், தன் குறைகளை நம்மால் உணர முடியும். அப்படி உணர்ந்தால் தான் அந்த குறைகளை திருத்தம் பெற வழி செய்யமுடியும். அப்படி வழி செய்தால் தான் வகுத்தபடி வாழ முடியும் என்கிறார். இந்த நிலை வருவதற்கு நம்மை நாமே பக்குவபடுத்தி கொள்ள வேண்டும்.

மனவளக்கலை பேராசிரியர்கள் கி. சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன்




ஏனெனில், வாழ்க்கையில் நாம் கற்பனை செய்வது ஒன்று, ஆனால் இறைவன் கொடுப்பது வேறு ஒன்று. ஆனால், வாழ்க்கையில் நமக்கு எது நடந்தாலும், சந்தோஷமாக இருக்க அல்லது மனம் சம நிலையில் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று நம்முடைய சாஸ்திரங்கள் சொல்கிறது. ஆனால் அப்படி இல்லை என்று நமது பலவீனம் சொல்கிறது. அதாவது சாஸ்திரம் முடியும் என்கிறது. நமது பலவீனம் முடியாது என்கிறது. இதில் சாஸ்திரம் சத்தியமா? அல்லது நமது பலவீனம் சத்தியமா? நம்மை பொறுத்தவரை பலவீனம் தான் சத்தியம் என்று நாம் சொல்லுவோம்.

ஏனெனில் எது நடந்தாலும், நம்மால் சந்தோஷமாக இருக்க முடிவது இல்லை. நாம் எல்லாம், நமது வாழ்க்கையிலே நாம் எதிர்பாப்பது போல் நடக்க வேண்டும் என்று எண்ணுகிறோம். ஆனால் எதுவும் நடப்பது இல்லை. நாளை ஏதோ ஒன்று கிடைக்க போகிறது என்கின்ற ஒரு எதிர்பார்ப்போடு வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஆனால் இறைவன் வேறு விதமாக நம்மிடம் விளையாடுகிறான். இதை சித்தர் பாடலிலே

"உலகத்தை உருட்டி திரட்டியவன் அவன்

எனக்கு உயிர் கொடுத்தவன் அவன்

வாழும் காலத்திலே அகத்திலே உணராததால்

வாழ்க்கை எனும் சக்கரத்திலே என்னை

செக்கு மாடாய் சுழற்றியவன் அவன்" - என்கிறார்கள்.

அதாவது செக்கு மாடு என்ன செய்யும்.. ஒரு செக்கு கடையை வைத்து இருக்கும் முதலாளி ஆனவர், அந்த செக்கு இயந்திரத்திலே தேவையான பொருட்களை போட்டு மாட்டை சுற்ற விடுவார், மாடு தானாக சுற்றாது. அதன் இரண்டு கொம்புகளுக்கு இடையே ஒரு கீரை கட்டை கட்டி விட்டு மாட்டை ஓட்டுவார். மாடு அந்த கீரை கட்டை பிடிப்பதற்கு நாக்கை மேல் நோக்கி நீட்டி கீரையை பார்த்து கொண்டே செல்லும். மாட்டின் கவனம் கீரையின் மேல்.. முதலாளியின் கவனம் செக்கு எண்ணெய் ஆட்டுவதிலே இருக்கும். அந்த எண்ணெய் தயாராகும் வரை மாட்டால் கீரையை தின்ன முடியாது. அது போல இறைவன் நம்மிடம் கீரை கட்டு போன்ற எதிர்காலம் என்கின்ற வாழ்வை நம் முன் காட்டி, அந்த மாயையில் சிக்க வைத்து, அதன் போக்கிலேயே நமது வாழ்க்கை செல்கிறது.

கடந்த காலத்தை பற்றி நாம் பேசும் போது கர்வம் ஏற்படுகிறது. எதிர்காலத்தை பற்றி சிந்திக்கும் போது பயம் ஏற்படுகிறது. இதனால், நிகழ்காலத்திலே, நமக்கு உள்ளே ஆனந்தம் என்கின்ற ஒன்று உள்ளதை அறியவிடாமல் மாயை மறைத்து விடுகிறது. இதுவே ஆன்மாவை உணர்வதற்கு தடையாக உள்ளது.

எனவே வாழ்க்கையில் நமக்கு எது நடந்தாலும், இறைவனை தியானிப்பதை விட்டுவிடக் கூடாது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் கிராமத்திலே, தலையிலே தண்ணீர் குடம் ஒன்றையும், இடுப்பிலே தண்ணீர் குடம் ஒன்றையும் பெண்கள் வைத்துக் கொண்டு, தன் தலையில் இருக்கும் குடத்தை பிடிக்காமல், குழுவாக பேசி கொண்டே வருவார்கள். ஆனால் ஒரு துளி நீர் கூட கீழே சிந்தாது. அவர்கள் கண்கள் பாதையின் மீதும், புற உலகின் மீதும் இருந்தாலும், முழு கவனமும் தண்ணீர் குடத்தின் மீதே இருக்கும். அது போல நாமும், வாழ்க்கையில் எவ்வளவு துயரமும், துன்பமும் வந்தாலும், இறைவனை நினைப்பதை விடவே கூடாது. இதுவே ஞான வாழ்க்கையாகும்.

அன்னை சாரதா தேவி வாழ்க்கையை படித்து பார்த்தால், நமக்கு தெரியும். அவர்கள் ராமகிருஷ்ணருடைய மனைவியாக இருந்தாலும், எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்று. அது போல அன்னை லோகாம்பாளை பற்றி படித்தால், அவர்கள் வேதாத்திரி மகரிஷியினுடைய மனைவியாக இருந்தாலும் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்று தெரியும். அவர்கள் பட்ட கஷ்டங்களை எல்லாம் நாம் பார்க்கும் போது, நம் வாழ்வில் கஷ்டங்கள் ஒன்றும் பெரிது இல்லை என்பது விளங்கும்.

வாழ்வில் எது வரும் என்று நமக்கு தெரியாது. வாழ்க்கை ஆனது எங்கோ ஆரம்பித்து, எங்கோ போய் முடியும். ஒரு சிலர் சிறு வயதிலேயே ஞான வாழ்க்கையை பற்றி பேசுவர். எதிர்காலத்திலே அவர் ஒரு சிறந்த ஞானியாக உருவாவார் என்று எதிர்பார்த்தால் அவர் இருந்த இடம் தெரியாமல் போய் விடுவார். ஒரு சிலரோ சதாரண குடும்ப வாழ்க்கையிலே எந்த வித சலனமும் இல்லாமல் இருப்பார். எதிர்காலத்திலே ஞானியாக உருவெடுப்பார்.

எனவே, ஞான வாழ்க்கையிலே அறியப்படும் இறைவனை, அறியவராகிய நாம், முதலில் வாழ்க்கையில் எதையும் எதிர்பார்ப்பதை நிறுத்திவிட வேண்டும்.

சந்தோஷத்தை தவிர எதையும் நம்மால் வாங்க முடியும். வெளியே மனதை விட்டால், அது மாறிக் கொண்டே இருக்கும். மனக்கதவை திறந்து விட்டால், நாம் இறைவனிடம் கேட்க வேண்டியது எதுவும் இல்லை. ஏனெனில் நமக்கு தேவை என்பது இல்லை. அதற்கு காரணம், கேட்பதும், அதற்கு பதிலும் அவரே. அங்கு இரண்டு அல்ல , எல்லாம் அந்த ஒன்றே நடத்தும். அதில் நடப்பது நடக்கும். நாம் கடமைகளை மட்டும் செய்ய வேண்டும். இதனால் உடலுக்கு ஒரு ஆரோக்கியம் ஏற்படும். அது போல மனம் எந்த அளவிற்கு எண்ணங்கள் இல்லாமல் இருக்கிறதோ, அப்போது தான் மனதிற்கு ஆரோக்கியம்.

இதற்கு முதல் தடையாக இருப்பது 'நான்' மற்றும் 'எனது' என்கின்ற நமது எண்ணங்களே. இந்த இரண்டிலும் நமக்கு இன்பம் மற்றும் துன்பத்தை தவிர வேறு அனுபவம் ஏற்பட்டு இருக்காது. எனவே ஞான வாழ்க்கை வாழ்வதற்கு, துன்பத்தை நீக்கி இன்பத்தை மட்டும் அறியும் வாழ்க்கை எப்படி என்பதை ஆராய்ச்சி செய்வோம்.

போன்: 9444234348

Tags:    

Similar News