சிறப்புக் கட்டுரைகள்
null

கோடை வெயிலை சமாளிக்க சில டிப்ஸ்...

Published On 2024-04-30 03:59 GMT   |   Update On 2024-04-30 04:05 GMT
  • குளிர்ந்த நீரில் குளிப்பது அவசியம்தான். அதற்காக ஐஸ் போல் குளிர்ந்த நீர் வேண்டாம்.
  • அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். வீட்டிலோ, ஆபீசிலோ கையில் ஒரு பாட்டில் நீர் வைத்துக் கொண்டு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை சிறிது சிறிதாக கட்டாயம் குடிக்க வேண்டும்.

கோடை வெயில் கொளுத்துகின்றது என்று சுட்டெரிக்கும் கோடையில் வருடா வருடம் பேசிதான் நாமும் வாழ்ந்து வருகின்றோம்.

இக்காலத்தின் விழிப்புணர்வுக்கு ஏற்ப சில தவிர்ப்பு முறைகள், தடுப்பு முறைகள் இவற்றினை பின்பற்றித்தான் வருகின்றோம்.

ஆனால் 2024 ஏப்ரல், மே மாத கோடை வெப்ப தாக்குதலோ வரலாறு காணாத அளவில் உள்ளது.

இந்த கடும் வெயிலில் குழந்தைகள், முதியோர், கர்ப்பிணிகள், பெண்கள் இவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு தேவைப்படுகின்றன.

* சன் ஸ்கிரீன் உபயோகிப்பது மிக அவசியமாகிவிட்டது.

* தலைக்கு தகுந்த பாதுகாப்பு கிடைக்க தொப்பி, குடை இல்லாமல் செல்லக்கூடாது என நன்கு அறிவோம்.

* கொளுத்தும் வெயிலில் குறிப்பாக உச்சி வெயிலில் சுற்றாமல் இருக்க வேண்டும்.

* வெளிர் நிற உடை, பருத்தி ஆடை அணிவது அவசியம்.

* இறுக பிடிக்காத ஆடைகளை அணிய வேண்டும்.

* தினமும் இரு வேளை குளிப்பதும், உடைகளை மாற்றுவதும் அவசியம்.

* குளிர்ந்த நீரில் குளிப்பது அவசியம்தான். அதற்காக ஐஸ் போல் குளிர்ந்த நீர் வேண்டாம்.

* டப் அல்லது அகன்ற தொட்டி இவற்றில் கழுத்து வரை மூழ்கி 20 நிமிடங்கள் இருக்கலாம்.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். குளியல் என்பது தலை முதல் நீர் ஊற்றி குளிப்பது


தான் முறை. ஆனால் பலருக்கு இது ஒத்துக் கொள்ளாது. அத்தகையோர் முதலில் நீரை நன்கு தலையில் தெளித்துக் கொண்டு பிறகு உடலில் ஊற்றி குளிக்க வேண்டும். இங்கு நீர் என குறிப்பிடப்படுவது சாதாரண நீர்தான். சுடு நீர் அல்ல.

* உடல் சூடு சருமத்தின் வழியாகத்தான் வெளியேற வேண்டும்.

* உடலில் சிறிது நேரம் தண்ணீரில் நனைத்த துணியினை பிழிந்து உடலில் சுற்றி உட்காரலாம்.

* சவர் முறை குளியல் சுமார் 10 நிமிடங்கள் எடுத்தாலும் உடல் குளிரும்.

* அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். வீட்டிலோ, ஆபீசிலோ கையில் ஒரு பாட்டில் நீர் வைத்துக் கொண்டு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை சிறிது சிறிதாக கட்டாயம் குடிக்க வேண்டும்.

* நம்மை அறியாமலேயே உடலில் நீர் வற்றும்.

* நா வறட்சி ஏற்படும். சோர்வும், மயக்கமும் ஏற்படும். கவனம் தேவை.

* எண்ணை, காரம், புளி இல்லாத எளிதில் செரிக்கக் கூடிய உணவுகள் அவசியம்.

* பச்சை காய்கறிகள், கீரை வகைகள், நீர் சத்து சிறந்த பழங்கள், கிர்னி, தர்பூசணி, ஆரஞ்சு, தக்காளி, ஆப்பிள், கறுப்பு திராட்சை, நீர் மோர், லெசி, நாகப்பழம் என கிடைக்கும் பழங்களை சாப்பிடலாம்


ரொம்பவும் சூடாக இருந்தால் பாதம், கைகள் இவற்றினை சாதா நீரில் சிறிது நேரம் மூழ்கி இருக்குமாறு வைத்துக் கொள்ளுங்கள். உடல் சூடு தணியும்.

* மது என்பதினை அடியோடு தவிர்த்து விடலாம்.

* தூங்க செல்வதற்கு முன் குளிக்கலாம்.

* தூங்க செல்வதற்கு முன் ஒரு கிளாஸ் நீர் அருந்தலாம்.

(சிறு குழந்தையினை வைத்திருப்பவர்கள், தாய் பால் கொடுப்பவர்கள் உங்கள் மருத்துவர் ஆலோசனைப்படி குழந்தைக்கு பால் அளிக்கும் நேர அளவினை மற்றும் சற்று கூடுதல் எண்ணிக்கையாக தாய் பால் அளிக்கலாம். ஆனால் கண்டிப்பாய் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

மற்ற தாய்மார்கள் குழந்தைகளுக்கு எந்த அளவு நீர் கொடுக்க வேண்டும் என்ற மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இது இந்த கால கட்டத்திற்கு அவசியம் என்பதனை தாய்மார்கள் உணர வேண்டும்.

* நடை பயிற்சி என்பதனை காலை, மாலை நேரத்தில் வைத்துக் கொள்ளலாம். உடற்பயிற்சி, யோகா இவற்றினை வீட்டினுள் காற்றோட்டமான இடத்தில் வைத்துக் கொள்ளலாம்.

* ஜன்னல்கள் மூலம் சுட்டெரிக்கும் வெயில் தாக்கம் இல்லாமல் இருக்க துணி ஸ்கிரீன் பயன்படுத்தலாம்.

* அதிக வெயில் நேரத்தில் ஜன்னல்களை மூடி வைக்கலாம்.

* அவசியம் என்றால் மட்டுமே பயணம் செய்ய வேண்டும்.

* அதிக வெயில் தாக்குதலால் தலை சுற்றல், தலை வலி, சதை பிடிப்பு ஏற்படலாம்.

* அதிக வியர்வை, உடல் தொடுவதற்கு குளிர்ந்து இருக்கும்.

* வயிற்றுப் போக்கு, வேகமாக மூச்சு விடுதல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.


ஹீட் ஸ்ட்ரோக்:

அதிக வெப்பத்தில் உடலால் தன்னை குளுமைப்படுத்தும் திறன் இழக்கும்போது ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுகின்றது. கோடையில் மிக அதிகமாக வெயிலில் இருப்பவர்களுக்கு இந்நிலை ஏற்படுகின்றது. இது ஆபத்தானது. அவசர சிகிச்சை தேவைப்படுவது. இதன் அறிகுறிகளாக

* வியர்வையற்ற சூடான சருமம்

* மயக்கம்

* குமட்டல், வாந்தி, தலைவலி ஆகியவை வரும். உடனடி சிகிச்சை அவசியம்.

உடனடியாக மருத்துவமனையினை அணுக வேண்டும். முதல் உதவி செய்தோம் சரியாகிவிட்டது என அலட்சியமாக இருந்து விடக் கூடாது. ஆகவேதான் இங்கு முதல் உதவி பற்றி குறிப்பிடவில்லை. அவரவர் குடும்ப மருத்துவர் மூலம் இதன் தவிர்ப்பு முறைக்கும், யாருக்கேனும் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டால் செய்ய வேண்டிய முறைகள் பற்றியும் உடனடியாக கேட்டறியவும்.

வெயிலில் இருந்து தப்பிக்க இதெல்லாம் கூட செய்யலாம்.

சிறிதளவு அரிசி மாவுடன் உப்பில்லா மோர் கலந்து கொள்ள வேண்டும். குளிக்கும் போது உடலில் நீர் ஊற்றி இந்த கலவையினை மிருதுவாக முகம் முதல் பாதம் வரை தேய்க்கவும். மென்மையாய் செய்யவும். பிறகு நன்கு நீரில் குளித்துவிட்டால் சருமம் சுத்தமாய் எண்ணை, வியர்வை பிசுபிசுப்பின்றி இருக்கும். இதில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சளும் சேர்த்துக் கொள்ளலாம்.

சிறிது வெள்ளரி துறுவி துணியில் பிழிந்து அத்துடன் சிறிது புதினா சாறு கலந்து சிறிய ஸ்பிரே பாட்டிலில் போட்டு அவ்வப்போது முகம், கைகளில் சிறிது ஸ்பிரே செய்து கொள்ளலாம்.

கண்களை மூடி வெள்ளரி சாறில் நனைத்த பஞ்சினையோ அல்லது வெள்ளரி துண்டினையோ வைத்துக் கொள்ளலாம். இது மிக சிறந்த முறை.

பாதாம் பிசின் கடைகளில் கிடைக்கும். இதனை சிறிதளவு எடுத்து நன்கு கழுவிய ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் நீர் ஊற்றி இரவில் ஊற வைத்து விடுங்கள். காலையில் இது ஊறி மிருதுவாய் நிறைய இருக்கும்.

பொதுவில் இதில் தேவையான அளவு நீர் சேர்த்து காலையில் எடுத்துக் கொண்டாலே உடலுக்கு பல நன்மைகளை தர வல்லது. ஆனால் பலர் இதில் பால் கலந்து சர்க்கரை போட்டு எடுத்துக் கொள்வர். வெறும் நீரில் குடித்தாலே பல நன்மைகள் கிடைக்கும். ஆனால் இதனை அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் எடை கூடி விடும்.

அதிகமான வெப்பம் உடல் நல பாதிப்புகளை கண்டிப்பாய் ஏற்படுத்தும். 'ஹீட் ஸ்ட்ரோக்' என்பதனைப் பற்றி நாம் பார்த்தோம். அதிக வியர்வை காரணமாக நீர்சத்து மற்றும் தாது உப்புகள் குறைபாடு ஏற்படும். இதன் விளைவாக சதைகளில் வலி, அடி வயிறு வலி, கால் வலி, தோள்பட்டை வலி, சோர்வு, மயக்கம் ஆகியவை ஏற்படலாம்.

தாங்க முடியாத தலைவலி, வாந்தி, வயிற்று பிரட்டல், வேகமான இதயத் துடிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றது.

உடலில் நீர் குறைந்தால் மூளைக்கு செல்ல வேண்டிய ரத்த ஒட்டம் குறையும். சிலருக்கு மயக்கம், நினைவிழத்தல் கூட ஏற்படலாம். சிறுநீர் குறைவாக வெளியேறினாலோ அடர்ந்து சிறுநீர் சென்றாலோ நீர் சத்து குறைவு என்று கருதப்படும்.

இந்த அறிகுறிகளில் கவனம் செலுத்தாமல் லேசாக இருந்து விடாதீர்கள். தவிர்ப்பு முறைகளே இதற்கு சிறந்த பாதுகாப்பு தரும்.


* தண்ணீர், மோர், இளநீர், ஜூஸ் போன்றவை அருந்த வேண்டும்.

* காய்கறி ஜூஸ் கூட அருந்தலாம்.

* காபி, டீ போன்றவை உடலில் நீர் இழப்பினை அதிகரிக்கும். ஆகவே இவைகளை தவிர்த்து விடுவோம்.

* புதினா சாறு கலந்த நீர் பருகலாம்.

* கொத்தமல்லி தழை சாறு அல்லது தானியா விதையை கொதிக்க வைத்த நீர் அருந்தலாம்.

உடலில் வேர்குரு, கட்டிகள் ஏற்படலாம். தகுந்த சுகாதாரம் பேணி காத்து மருத்துவ ஆலோசனை பெறுங்கள். சோப்பு கூட அவரவர் இஷ்டம்தான்.

கூடுதல் கவனம்:

கொளுத்தும் வெயிலில் காரை நிறுத்தாதீர்கள். காரில் குழந்தையை விட்டு கடைக்கு செல்லவேண்டாம். இது ஆபத்தாக முடியலாம்.

கோடையும், வெப்பமும் நாம் வருடம் தோறும் அனுபவிக்கும் ஒன்றுதான். விழிப்புணர்வினை கூட்டி நம்மையும், நம்மை சுற்றி உள்ளவர்களையும் பாதுகாப்போம்.


இந்த கட்டுரையை எழுதிய நேரத்தில் தமிழ்நாட்டுக்கு 'மஞ்சள் அலர்ட்' கொடுக்கப்பட்டுள்ளது. வெப்ப அலை வரப்போகிறது என்றும் எச்சரித்துள்ளனர். 37 டிகிரி செல்சியஸ் இருந்தால் 50 டிகிரி செல்சியஸ் போல் வெப்பம் உணரப்படும் என்று எச்சரித்துள்ளனர்.

குழந்தைகள், முதியோர், கர்ப்பிணிகள் 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே வர வேண்டாம். காலையிலும் குடை எடுத்துச் செல்லுங்கள். நனைத்து பிழிந்த துணியினை உடலின் மீது போட்டுக் கொள்ளுங்கள்.

Tags:    

Similar News