சிறப்புக் கட்டுரைகள்

கோடை வெயில் பாதிப்பை தடுக்கும் வழிமுறைகள்

Published On 2024-04-26 08:12 GMT   |   Update On 2024-04-26 08:12 GMT
  • முலாம் பழத்தை உண்டுவர மூலநோய், மலச்சிக்கல் நீங்கும்.
  • கோடைக்காலத்தில் பகல் தூக்கத்தை தவிர்த்தல் நல்லது. இரவில் கண்விழித்தல் கூடாது.

காலம் பருவங்கள் மாறுதல் அடைவதற்கு ஏற்ப நம் உடலும் அதற்கேற்றவாறு மாறுதல் அடைகிறது.

கோடை காலங்களில் அதிகரித்த வெப்பநிலை சரி செய்வதற்கான உணவு, உடை, பானங்கள், பழக்கவழக்கங்கள் சீர் செய்வதன் மூலம் நம்மை தற்காத்துக் கொள்ளலாம்.

கோடை காலம் என்பது மார்ச் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை உள்ள காலமாகும். இக்காலத்தில் பூமியானது வெப்பம் அதிகரித்து காணும். அதற்கு ஏற்ப உடலின் தட்ப வெப்ப நிலையானது மாறுபட்டு பல இன்னல்களை நமக்கு அளிக்கிறது.

உணவு:

* அதிக புளிப்பு, உப்பு, கார்ப்பு சுவைகளை நீக்க வேண்டும். திரவ வடிவம் உள்ளதும் எளிதில் சீரணம் ஆகும் உணவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். அறுசுவை உணவு சிறந்தது எனினும் கோடை காலத்தில் கசப்பு, இனிப்பு, துவர்ப்பு சுவையுள்ள பொருட்களை அதிகம் சேர்ப்பதனால் பித்தம் சமப்படும்.

* குளிர்காலங்கள் போல் அல்லாமல் கோடை காலங்களில் பசி குறைவாக காணப்படுவதால் உணவில் கார்போஹைட்ரெட் அளவு குறைத்து நீர் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

* இதன் மூலம் நீர் சத்து மட்டுமல்லாமல் உப்பு சத்துக்களான சோடியம், பொட்டாசியம், கால்சியம் மற்றும் வைட்டமின்கள் கிடைத்து தாது உப்பு சத்து சீராக இருக்கும்.

தர்பூசணி:

நீர் சத்து அதிகமாக உள்ளது உடல் சூட்டை குறைக்கும். இதில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் உள்ள இரும்பு சத்தின் அளவு 0.2 மி.கி. வைட்டமின் ஏ, சி, பி1, பி6, பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகளும் உள்ளன.

* சிட்ருலின் என்ற புரதச்சத்து தர்பூசணியில் அதிக அளவில் உள்ளது. இது ரத்த நாளங்களை விரிவடைய செய்து ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

* இதில் உள்ள சிட்ருலின் வேதியல் மாற்றம் அடைந்து அர்ஜினைன் என்ற வேதிப்பொருளாக மாறுகிறது. அது இதயத்தையும் ரத்த ஓட்டம் சம்பந்தமான உடல் உறுப்புகளையும் ஊக்குவிக்கிறது.

முலாம்பழம்:

* முலாம்பழம் நல்ல அளவு நீர் சத்து கொண்ட சிறந்த பழங்களில் ஒன்றாகும். முலாம் பழத்தை உண்டுவர மூலநோய், மலச்சிக்கல் நீங்கும். சிறுநீர் தாரை எரிச்சல், நீர் கடுப்பு நீங்கும்.

இளநீர்:

* இளநீர் உடலில் உள்ள பி.எச். அளவை சமன் செய்கிறது. அமிலத்தன்மை, நெஞ்செரிச்சலை குறைக்கும்.

வெள்ளரிக்காய்:

* முகம், கண்கள், கழுத்து பகுதியில் வெள்ளரிக்காய் மசித்த விழுதை தடவி 5 முதல் 10 நிமிடம் வரை விட்டு குளிர்ந்த நீரில் கழுவி எடுத்தால் சருமத்தில் சுருக்கங்களை தடுக்கிறது.

பானங்கள்:

வெப்பத்தின் அளவு அதிகரித்து உள்ளதால் உடலின் நீர் சத்தானது குறைந்து காணும். இதனால் மயக்கம், நாவறட்சி, சருமம் வறட்சி, சோர்வு, பசியின்மை, தலைவலி, அதிக தாகம், அடர்ந்த சிறுநீர் போன்ற உபாதைகள் காணும்.

* ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும்.

* சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவரின் அறிவுரைக்கேற்ப தண்ணீர் அளவு எடுத்து கொள்ள வேண்டும்.

* நீர் மட்டுமே அதிக அளவு எடுத்துக்கொள்வதை தவிர்த்து பழச்சாறு வகைகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். காபி, மதுபானம் உட்கொள்ளும்போது அவை சிறுநீர் அளவை அதிகரித்து உடலில் நீர் அளவை குறைக்கிறது. அதிக அளவு காபி உட்கொள்ளுவதை தவிர்க்க வேண்டும்.

* வெட்டிவேர் சேர்ந்த குடிநீர் எடுத்துக் கொள்ளலாம்.

* அதிக குளிர்ச்சி நிறைந்த பானம் எடுத்துக்கொள்ளும்போது அவை ரத்த நாளங்களை சுருங்க செய்வதால் குளிர்ச்சி நிறைந்த பானங்களை தவிர்க்க வேண்டும். மிதமான சூடு உள்ள நீரை பருகலாம். இவை ரத்த நாளங்களை விரிவடைய செய்யும் வியர்வையை வெளியேற்றி உடல் வெப்பநிலையை குறைக்கும்.

* மோர், இளநீர், எலுமிச்சை, பானகம், பழச்சாறு போன்றவற்றை சேர்க்கவும்.

 


நீர் மோர்- தயிரை நன்றாக கடைந்து வெண்ணெய் எடுத்தபின் தெளி நீருடன் உப்பு சேர்த்து நீர்மோராக பருக உடல் சூடு, வயிற்று வலி சரியாகும்.

பானகம்- பனை வெல்லம், இலவங்கபட்டை, ஏலக்காய், சுக்கு இவற்றை தண்ணீரில் கலந்து பானையில் தண்ணீரை ஊற்றி பயன்படுத்தவும். இதனால் உடலில் நீரிழப்பு தவிர்க்கப்படும்.

ரசாலா - தயிரை நன்றாக கடைந்து சர்க்கரை சேர்த்து அதில் மிளகுத்தூள் கலந்து பருகவும்.

பானக மஞ்சாசரா - உலர் திராட்சை, பேரிச்சம்பழம் சம அளவு ஏலக்காய், வாழை இலை, தண்ணீர் இவற்றை மண் பானையில் போட்டு புளிக்க வைத்து மறுநாள் வடிகட்டி பயன்படுத்தவும்.

பார்லி தண்ணீர் - பார்லியுடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அதனோடு தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கவும். இதில் தாதுக்காரம், வைட்டமின்கள் உள்ளது. நீரிழப்பால் ஏற்பட்ட திரவங்களை இதன் மூலம் மீட்டெடுக்கலாம்.

ஓ.ஆர்.எஸ். கரைசல் - தண்ணீர் 4 கப், உப்பு ½ டீஸ்பூன், சர்க்கரை 6 டீஸ்பூன் இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து அவ்வப்போது குடித்து வர உடலின் உப்பு மற்றும் சர்க்கரை அளவை சரி செய்யும்.

எலுமிச்சை சாறு - இது நீரிழிவால் ஏற்படும் பொட்டாசியம், சோடியம் மற்றும் மெக்னீசியம் அளவு குறைப்பாட்டை சரி செய்யும்.

நீராகாரம்- நீராகாரத்தில் வைட்டமின்கள், தாதுக்கள், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், இரும்பு சத்து, வைட்டமின் B காம்ப்ளக்ஸ் மற்றும் வைட்டமின் E போன்ற பல்வேறு சத்துக்கள் உள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் முடி மற்றும் முக பராமரிப்பிற்கு பயன்படுத்தப்படுகிறது. நீராகாரத்துடன் சின்ன வெங்காயம், கிச்சிலி காய் மற்றும் நாரத்தை ஊறுகாய்களை சேர்த்து பருகும்போது உடல் சூட்டை தணிக்கும்.

கேழ்வரகு கூழ் - கேழ்வரகில் உடலுக்கு நன்மை தரும் அமினோ அமிலங்களும், கால்சியம், இரும்புச்சத்து, நியாசின், தையமின், ரிபோபிளவின் ஆகியவை உள்ளன. இதில் உள்ள கால்சியம் நம் எலும்பு, பற்கள் உறுதிக்கு உதவும். மோருடன் கலந்து இந்த கூழை அருந்தும்போது உடலை குளிர்ச்சியாக்கும். உடலுக்கு வலுவையும் தரும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு அருமருந்து. இதில் இருக்கும் நார்ச்சத்து நம் உடலில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும்.

கம்பு கூழ் - கோடை காலங்களில் ஏற்படும் உடல் சூட்டால் முகம் மற்றும் அந்தரங்கப் பகுதியில் சீழ் கலந்த கட்டிகள் ஏற்படும். இந்த உடல் சூட்டை குறைப்பதற்கு கம்பு கூழை குடிக்கலாம். கம்பு உடலுக்கு தேவையான அனைத்து ஆற்றலையும் வழங்கும்.

வெந்தய நீர், கஞ்சி - வெந்தயத்தை வறுத்து நீருடன் கலந்து அருந்துவதன் மூலம் அல்லது வெந்தயம் ஊறிய குடிநீரை அருந்துவதன் மூலம் உடல் வெப்பத்தை குறைக்கலாம். வெந்தய கஞ்சி உட்கொள்வதன் மூலம் உடல் சூடு தணியும் மற்றும் ரத்த விருத்தி ஆகும்.

சீரகத் தண்ணீர் - சீரகத்தை நீரில் போட்டு காய்ச்சி குடிக்க இக்காலத்தில் அதிகரிக்கும் பித்தம் குறைந்து, பித்தத்தால் உண்டாகும் நோய்களான மூலநோய், பவுத்திரம், ஆசனவாயில் ஏற்படும் கட்டிகள், வேர்க்குரு, வயிற்றுப் புண்கள் ஏற்படுவதை தடுக்கலாம்.

* இரவில் கருப்பு உலர்ந்த திராட்சையை ஊறவைத்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட உடல் அனல் தணிந்து ரத்தம் சம்பந்தமான நோய்கள் வராமல் பாதுகாக்கலாம்.

மண்பானை நீர் - மண்பானையில் இயற்கையாகவே சில தாது உப்புக்கள் நிறைந்திருப்பதால் அதில் சேகரித்த நீரை பருகும்போது உடல் குளிர்ச்சி அடைந்து உப்புக்களின் சத்தும் நமக்கு கிடைக்கும். மண்பானையில் நீர் விட்டு அதில் வெட்டிவேர், நன்னாரி வேர் சேர்த்து பருக உடல் குளிர்ச்சி அடையும்.

ஆடைகள்: கோடை காலத்தில் மிக இறுக்கமான ஆடைகளை தவிர்த்து தளர்வான ஆடைகளை அணிய வேண்டும். கருப்பு மற்றும் பிற பிரகாசமான நிறங்கள் வெப்பத்தை கிரகிக்கும் தன்மை கொண்டதால் அவைகளை தவிர்த்து, வெள்ளை மற்றும் லேசான நிறங்களில் உடைகளை அணியலாம்.

* பருத்தி ஆடைகளை அணிவது சிறப்பு. பருத்தி உடையானது காற்றோட்டமாகவும், உடலை குளிர்ச்சியாகவும் வைத்துக்கொள்ள உதவும். பருத்தியில் உள்ள வைட்டமின், ஆன்டி ஆக்சிடென்ட், ஒமேகா-3 பேட்டி ஆசிட் சருமத்தை மிருதுவாகவும் அலர்ஜி போன்றவைகளில் இருந்து நம்மை காக்கும். பருத்தி உடைகள் உடலுக்கு குளிர்ச்சியை தந்து வியர்வையை உறிஞ்சி கொள்கிறது.

* உள்ளாடைகளும் பருத்தி உடைகளாக இருக்க வேண்டும். அவற்றை நல்ல வெயிலில் காயவைத்து உலர்த்தி பயன்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு டயப்பர் போடுவதை இந்த கோடை காலத்தில் தவிர்ப்பது நல்லது.

ஜன்னல் திரை: வெயிலை சமாளிக்க வீடுகளில் மூங்கில் திரை பயன்படுத்தலாம். வெட்டிவேர் திரை காற்றை குளிர்விக்கும் தன்மை உடையது.

மெத்தை: கோரைப்பாய், பனை ஓலை பாய், பருத்தி மெத்தை பயன்படுத்தலாம். போம் மெத்தை தவிர்ப்பது நல்லது.

கோடைக்காலத்தில் பகல் தூக்கத்தை தவிர்த்தல் நல்லது. இரவில் கண்விழித்தல் கூடாது.

அஞ்சனம்: சித்த மருத்துவத்தில் குறிப்பிட்டுள்ள அஞ்சனம் (கண்மை தீட்டுதல்) பல நோய்களுக்கு தற்காப்பாக உள்ள ஒன்று. இதற்கு கரிசாலையால் செய்யப்பட்ட இயற்கையான மை சிறந்தது.

 

இயற்கை மருத்துவர் நந்தினி, 95006 76684

உடற்பயிற்சி:

* கடினமான உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும். அதிகாலையில் அல்லது மாலை நேரங்களில் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது உடலில் உள்ள நீர் சத்து வெளியேறுவதால் அதற்கு ஏற்ப பானங்கள் உட்கொள்ள வேண்டும்.

* கோடை காலத்தில் எப்பொழுதும் ஏசி அறையில் அடைந்து கிடக்காமல் சிறிது நேரம் மர நிழல் அதிகமாக உள்ள இடங்களில் காலார நடப்பது, புங்கன் மர நிழலில் இளைப்பாறுவது இயற்கையாகவே நம் உடல் சூட்டை தணிக்கும்.

வேனில் கட்டி, பொடுகு தடுக்கும் முறை:

* உடலில் வெப்பம் அதிகரிப்பதால் பொதுவாக தலையில் கட்டி அல்லது பொடுகு ஏற்படுகிறது. அவற்றிற்கு சீரகம், பசும் பால், மிளகு இவற்றை அரைத்து தலையில் தேய்த்து குளிக்கவும்.

* இரவில் உறங்குவதற்கு முன்பு இரண்டு உள்ளங்கால்களில் பசு நெய் தடவி உறங்கவும். இதனால் உடலின் வறட்சி நிலை குறையும். வாரம் இரு முறை எண்ணெய் குளியல் எடுப்பதன் மூலம் வேனில் கட்டி பொடுகு வருவதை தடுக்கலாம். எண்ணெய் குளியல் செய்வதற்கு பசு நெய் அல்லது நல்லெண்ணெய் பயன்படுத்தலாம். மேலும் மா, நெல்லி இலைகள் ஊறிய நீரினை குளிப்பதற்கு பயன்படுத்தலாம். உடலை தேய்த்து குளிப்பதற்கு நலங்குமா பயன்படுத்தலாம்.

நலங்குமா பாசிப்பயிறு, வெட்டிவேர், சந்தனம், கோரைக்கிழங்கு, கிச்சிலிக் கிழங்கு, கார்போகி அரிசி, விலாமிச்சு வேர் சேர்த்து செய்யப்படுகிறது. வெட்டிவேர், விலாமிச்சு வேர், சந்தனம் இருப்பதால் உடலுக்கு நன்கு குளிர்ச்சி தருகிறது.

அது மட்டுமன்றி உடலின் வியர்வையின் மூலம் வரும் கற்றாழை நாற்றத்தை போக்கும். நன்னாரி, நுங்கு, இளநீர் போன்றவற்றை பருகுவதால் உடலுக்கு குளிர்ச்சி ஏற்பட்டு வேர்க்குரு வருவதை தடுக்கும்.

* உடலில் ஏற்படும் வேர்க்குருவிற்கு இளநீர் வழுக்கை, நுங்கு ஆகியவற்றை தோலில் பூசலாம்.

* தேங்காய் பால் தேய்த்து குளிக்கலாம். அதில் உள்ள எண்ணெய் பசை காரணமாக தோல் வறட்சி அடைவதை தடுக்கும்.

ஹீட் ஸ்ட்ரோக்:

* கோடை காலத்தில் உள்ள வெப்பத்தின் தாக்கத்தால் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுகிறது. உடல் வெப்பநிலை உயர்வு, குழப்பமான மனநிலை, வேர்வையில் மாற்றம், குமட்டல், வாந்தி, வேகமான இதய துடிப்பு, சருமம் நிறமாற்றம், தலைவலி போன்ற அறிகுறிகள் தோன்றும். இதனை தடுக்க வெப்பம் அதிகமாக இருக்கும் நேரங்களில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். தளர்வான ஆடைகளை அணியலாம்.

அதிக அளவு நீர் சத்துள்ள பழம் உணவுகளை எடுத்துக் கொள்ளவும். சூரிய வெப்பத்தினால் தோலில் சிவப்பு நிற தடுப்புகள், கண்கள் சிவப்பு நிறமாதல், முகத்தில் சிவப்பு நிற தடுப்புகள் ஏற்படலாம். அவற்றை தடுக்க படிகார நீர் கொண்டு கண்களை கழுவ வேண்டும். கற்றாழை அல்லது சந்தன பூச்சிகளை தோல் மற்றும் முகத்தில் பூசலாம். மூக்கு துவாரங்கள் வறண்டு விடுவதால் ரத்தம் வழிய நேரிடும். அருகம்புல் சாறு குடிப்பதன் மூலம் மூக்கில் வடியும் ரத்தம் நிற்கும்.

கோடைகாலத்தில் குளிர்ச்சியை தக்க வைக்க விரும்பினால் உங்களுக்கு ஏற்றது ரோஜா குல்கந்து. இதில் இயற்கையாகவே கால்சியம் சத்து நிறைந்துள்ளது. இது இரைப்பை அழற்சி, தோல் பராமரிப்பு, அசீரணம், மன அழுத்தம் போன்றவைகளுக்கு நன்மை அளிக்கக் கூடியது. வெயில் காலத்தில் மூக்கில் இருந்து ரத்தம் வடிதல், தலைச்சுற்றல் போன்றவற்றை சரி செய்யும். குழந்தைகளுக்கு வெயில் நேரத்தில் வயிற்று வலி பிரச்சனை வராமல் இருக்க குழந்தையின் தொப்புளில் விளக்கெண்ணெய் தடவி வரலாம். இதனை பெரியவர்களும் பின்பற்றலாம்.

* இவ்வழிமுறைகளை பின்பற்ற கோடை காலத்தில் வரும் நோய்களை தவிர்த்து நலம் பெறலாம்.

Tags:    

Similar News