சிறப்புக் கட்டுரைகள்

வெறுப்புப் பேச்சு சர்ச்சை

Published On 2024-04-26 11:04 GMT   |   Update On 2024-04-26 11:04 GMT
  • சர்வதேச விளக்கங்களும் நாட்டுக்கு நாடு மாறுபடும்.
  • நமது கூட்டு முன்னுரிமைகள் மிகத் தெளிவாக உள்ளன என்று நான் நம்புகிறேன்.

வெறுப்புப் பேச்சு என்பதற்கு ஒற்றை வரையறை இல்லை.

"இனம், மதம், பாலினம் அல்லது பாலியல் நோக்குநிலை போன்றவற்றின் அடிப்படையில் ஒரு நபர் அல்லது குழுவிற்கு எதிரான வெறுப்பை வெளிப்படுத்தும் அல்லது வன்முறையை ஊக்குவிக்கும் பொதுப் பேச்சு" என்று கேம்பிரிட்ஜ் அகராதி கூறுகிறது.

"பொதுவாக இனம், நிறம், தேசியத் தோற்றம், பாலினம், இயலாமை, மதம் போன்றவற்றின் காரணமாகத் தனிநபரை அல்லது ஒரு குழுவை இழிவுபடுத்தும் தகவல்தொடர்புகளை உள்ளடக்கியதே வெறுப்புப் பேச்சு!" என்கிறது அமெரிக்க அரசியலமைப்பின் கலைக்களஞ்சியம் பேச்சு சுதந்திரம், வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் வெறுப்பு பேச்சுச் சட்டம் பற்றி உலகெங்கிலும் நிறைய விவாதங்கள் நடந்து வருகின்றன. பாதிக்கப்பட்ட ஒருவர் சிவில் மற்றும் குற்றவியல் சட்டம் அல்லது இரண்டின் கீழும் பரிகாரம் தேடலாம்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, நாசிசம் "மீள் எழுச்சி" பெற்றுவிடாமல் தடுக்க ஜெர்மனியில் வெறுப்பூட்டும் பேச்சு தண்டனைக் குற்றமாக்கப்பட்டது. இது தொடர்பாக பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் பல்வேறு சட்டங்கள் மற்றும் ஒழுங்கு முறைகளை நடைமுறைப்படுத்தி உள்ளன.

ஐக்கிய நாடுகளின் சர்வதேச மனித உரிமைகள் சட்டங்கள் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாத்து வருகின்றன. 1948ல் ஐ.நா பொதுச் சபையால் உருவாக்கப்பட்ட "மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம்" மிக அடிப்படையான ஆவணங்களில் ஒன்று. ஆனால் வெறுப்புப் பேச்சு கருத்துச் சுதந்திரம் ஆகாது.

இன்டர்நெட் பயன்பாடு அதிகரித்த பிறகு இணையத்தில் வெறுப்புப் பேச்சை உருவாக்குவதற்கும் அது நிலைத்திருப்பதற்கும் ஏராளமான வழிகள் தோன்றின. குறைந்த செலவு மற்றும் முயற்சியுடன் வெறுப்புப் பேச்சைப் பரப்புவதற்கு இணையத்தின் பரவலான பயன்பாடு மற்றும் அணுகல் வசதியை ஏற்படுத்தியது.

இணையத்தின் போலி அநாமதேயத் தன்மை காரணமாக நிஜ வாழ்வின் பின்விளைவுகளுக்குப் பயந்தவர்கள் வெறுப்புப் பேச்சைப் பரப்பும் துணிச்சல் பெற்றனர். அத்தகைய நச்சுக் கருத்துகள் இன்டர்நெட்டின் முக்கிய உள்ளடக்கம் ஆனது.

அரசாங்கங்களும் நிறுவனங்களும் இணைய வெறுப்புப் பேச்சை எதிர்த்துப் போராட முயற்சி செய்தன. ஆனால் ஆன்லைனில் அடையாளங்களைச் சரிபார்ப்பதில் உள்ள சிரமங்கள் எதிர்பார்த்த பலனைக் கொடுக்கவில்லை.

வெறுப்பு பேச்சு என்பதற்கு சட்டரீதியான துல்லிய வியாக்கியானம் இல்லை. சர்வதேச விளக்கங்களும் நாட்டுக்கு நாடு மாறுபடும். அமெரிக்காவில் நிறஅடிப்படையிலான அவதூறு வெறுப்புப் பேச்சாகக் கொள்ளப்படுகிறது. இந்தியாவில் அது மதஅடிப்படையிலான அவதூறு.

வெறுப்புப் பேச்சை அடையாளப்படுத்த ஒரு சர்வதேச கருத்தரங்கு 16. 12. 2020-ல் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்றது. வெறுப்பு பேச்சின் வரி வடிவத்தை கணினி மூலம் உள்ளீடு செய்து அறியும் இயந்திர வாசிப்பு அதில் இறுதி செய்யப்பட்டது. அதற்கு "வரிசை வகைப்பாடு மாதிரி" என்று நிபுணர்கள் பெயர் சூட்டினார்கள்.

வெறுப்புப் பேச்சுகள் அடங்கிய திறவுகோல் வார்த்தை அகராதி உருவாக்கப்படுகிறது பிறகு வீடியோ வடிவத்திலும் வரி வடிவத்திலும் சர்ச்சைக்குரிய வெறுப்புப் பேச்சு உள்ளீடு செய்யப்படுகிறது.

அதில் கிடைக்கும் தரவுகள் அடிப்படையில் சாதாரண விமர்சனப் பேச்சு, வெறுப்புப் பேச்சு, அதி தீவிர வெறுப்புப் பேச்சு, உள்நோக்கத்துடன் கூடிய வெறுப்புப் பேச்சு என்று பல்வேறு விதமாக வகைப்படுத்தப்படுகின்றன. இது கணினி நிபுணர்களால் "கணக்கிட்டு நுண்ணறிவு" என்று அழைக்கப்படுகிறது

இந்திய அரசமைப்பில் வெறுப்புப் பேச்சு சட்டங்கள் உள்ளன. இனம், மொழி, பண்பாடு, வாழும் பகுதி, சமூகம் போன்ற ஏதோ ஒரு காரணத்திற்காகக் கேலி பேசுபவர்கள் மற்றும் ஏசுபவர்கள் இந்தியாவில் தண்டிக்கப்படுவார்கள். சமய நம்பிக்கைகளைப் புண்படுத்துவோர் குற்றவாளிகள்.

"வெறுப்புப் பேச்சாளர்களின் நோக்கமே அவர்களின் வெறுப்பின் இலக்குகள் வாழ்வதற்காக வேறொரு உலகத்தை உருவாக்குவது தான்!" என்று ஜெர்மி வால்ட்ரான் தனது புத்தகமான "வெறுப்புப் பேச்சின் தீமைகள்" (The Harm in Hate Speech) என்ற நூலில் கூறுகிறார்.

வெறுப்புப் பேச்சின் ஆதரவாளர்கள் சமூகத்தில் கண்ணியத்துடன் வாழ்வதை கடினமாக்குகிறார்கள். யதார்த்தத்தை எதிர்மறையாக மாற்றும் நிகழ்வே வெறுப்புப் பேச்சு என்கிறார் ஜெர்மி.

சமீபத்தில் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் பிரதமர் மோடியின் பல்வேறு தேர்தல் பரப்புரைப் பேச்சுகளின் சாராம்சங்கள் என்னென்ன?

தராசு ஷ்யாம்

*காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தேசத்தின் செல்வத்தை முஸ்லிம்களுக்கு கொடுத்து விடுவார்கள். அதிக குழந்தைகள் பெற்றவர்களுக்கும் ஊடுருவல்காரர்களுக்கும் பிரித்துக் கொடுத்து விடுவார்கள்.

*இந்திய அரசமைப்பில் பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு அதை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கூறுகிறது. இது நகர்ப்புற நக்சல் சிந்தனை.

*என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் தாலியை கூட இவர்கள் விட்டு வைக்க மாட்டார்கள்.

*சுதந்திர போராட்ட காலத்தில் முஸ்லிம் லீக்குக்கு இருந்த அதே சிந்தனையைக் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பிரதிபலிக்கிறது.

பிரதமர் மோடி ஆதாரமாகக் காட்டுவது 18 வருடங்களுக்கு முன் 2006-ல் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் ஆற்றிய பின்வரும் உரை:

*நமது கூட்டு முன்னுரிமைகள் மிகத் தெளிவாக உள்ளன என்று நான் நம்புகிறேன்.

*விவசாயம், நீர்வளங்கள், கல்வி, கிராமப்புற முதலீடுகள், பொது உள்கட்டமைப்பு முதலீடுகள் ஆகியவற்றுடன் தலித், பழங்குடி, பிற்படுத்தப் பட்ட, சிறுபான்மை மக்கள் மற்றும் பெண்கள், குழந்தைகளின் நலன்களே நமது முன்னுரிமை''.

*தேச வளர்ச்சியின் பலன்கள் சிறுபான்மை மக்களுக்கும் போய்ச் சேரும் வகையில் பொருத்தமான முறையில் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்.

உரையின் தொடர்ச்சியாக, ''அவர்கள் நமது வளங்களில் முன்னுரிமை பெறுகின்றனர்'' என்று நிறைவு செய்துள்ளார் மன்மோகன்சிங். இங்கு ''அவர்கள்'' என்று அவர் குறிப்பிட்டது: "அனைத்து தலித், பழங்குடி, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்கள் மற்றும் பெண்கள், குழந்தைகள் ஆகிய அனைவரையும் சேர்த்துத்தான்!" இது மிகத் தெளிவாக பதிவாகியிருக்கிறது.

ஆனால் பிரதமர் மோடி தனது ராஜஸ்தான் உரையில் மன்மோகன் சிங் அன்றைக்குப் பேசியது முஸ்லிம் மக்களுக்காக மட்டுமே என்று திரித்துக் கூறுகிறார்.

தேர்தல் பிரசாரத்தில் ஒருவர் பேசாத விஷயத்தை பேசியதாகச் சொல்வது கேவலம். அதுவும் மன்மோகன்சிங் மாதிரியான ஒரு மென்மையான அரசியல்வாதி சொல்லாத கருத்துகளைத் திணிப்பது அபத்தம். அதற்குப் பொது மேடைகளில் எதிர்வினை ஆற்றும் உடல்நிலையில் கூட மன்மோகன் இல்லை.

வெறுப்புப் பேச்சுகளுக்கான சமீபத்திய எடுத்துக்காட்டுகள்:

ஹரித்வார் நகரில் 'தர்ம் சன்சத்' நடத்தப்பட்டது. அதில் பங்கெடுத்தவர்கள் சரமாரியாக வெறுப்புப் பேச்சுகளை நடத்தினார்கள். இனப்படுகொலைக்கான அழைப்புகளும் விடப்பட்டன. இந்த விவகாரம் தற்போது இந்திய உச்ச நீதிமன்றத்தில் உள்ளது.

சுதர்சன் டிவி என்ற தனியார் தொலைக்காட்சி "இலவச பேச்சு" என்ற நிகச்சியை நடத்தி வந்தது. யு.பி.எஸ்.சியில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும் மத்திய அரசுப் பணிகளில் தேர்ச்சி பெற்ற முஸ்லீம் வேட்பாளர்களுக்கு எதிராக வெறுக்கத்தக்க கருத்துகள் அதில் வெளியிடப்பட்டன. இதுவும் நீதிமன்ற வழக்காக இப்போது உள்ளது.

"முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு" தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி மீது உடனடியாக எப்.ஐ.ஆர். பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி மக்கள் சிவில் உரிமைகளுக்கான சங்கம் புகார் அளித்துள்ளது. ஆனால், இதுவரை எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படவில்லை.

வெறுப்பு பேச்சுக்கு எதிராக பங்கேற்று ஐபிசி 153 A, 294, 295, 505 போன்ற பல பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். சமூக வேறுபாடுகளை ஊக்குவிக்கும் வகையிலும் பரஸ்பர வெறுப்பை வளர்க்கும் வகையில் அரசியல்வாதிகள் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்று தேர்தல் நடத்தை விதிகள் தெளிவாகக் கூறுகின்றன

பிரதமரின் வெறுப்பு பேச்சு குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார்கள் தரப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றத்திற்கும் தாவா எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

வேலை இன்மை, பொருளாதார வீழ்ச்சி, விலைவாசி உயர்வு போன்ற முக்கியப் பிரச்சினைகளைத் திசை திருப்பவே இரண்டாம் கட்டப் பரப்புரைகளின்போது பிரதமர் மோடி மதரீதியான பிரசாரத்தை முன்னெடுத்துள்ளார் என்ற பார்வையும் உள்ளது.

பன்முகத் தன்மை கொண்ட நாடு இந்தியா. வேற்றுமையில் ஒற்றுமை தான் நம் நாட்டின் அழகே.

முப்பது கோடி முகமுடையாள்

உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்

இவள் செப்பு மொழிபதினெட்டுடையாள்

எனில் சிந்தனை ஒன்றுடையாள்!

-(பாரதி)

மகாகவியின் மேற்படிப் பாடலை "மன் கி பாத்" நிகழ்ச்சியில் (24.9.2019) மேற்கோள் காட்டிச் சிலாகித்தார் பிரதமர் மோடி.

ஒற்றுமை வலியுறுத்தல் வானொலிக்கு மட்டுந்தானா? தேர்தல் மேடைக்குக் கிடையாதா?

தேர்தல்கள் வரும்.. போகும். தோற்றவர்கள் திரும்ப நின்று ஜெயிப்பதுண்டு. ஆனால் பரப்புரைகள் நிரந்தரப் பிளவுக்கு வித்திட்டுவிடக் கூடாது.

அது அபாயத்தின் கட்டியம், பிரதமர் அவர்களே!

Tags:    

Similar News