சிறப்புக் கட்டுரைகள்

ஆன்மிக அமுதம்- ஆன்மிகப் பொய்கையில் நீந்தும் மீன்கள்!

Published On 2022-07-07 09:08 GMT   |   Update On 2022-07-07 09:08 GMT
  • கம்ப ராமாயணத்தில் குகன் முதன்முறையாக ராமபிரானைச் சந்திக்கும் காட்சி அயோத்தியா காண்டத்தில் வருகிறது.
  • மகாபாரதத்தில் பாஞ்சாலி சுயம்வரத்தில் பொன்மயமான மீன் வடிவம் ஒன்று இலக்காக வைக்கப்படுகிறது

நமது ஆன்மிகப் பொய்கையில் அழகழகான பல மீன்கள் பற்பல கதைகளில் துள்ளி விளையாடுகின்றன. பல அரிய தத்துவக் கருத்துகளை அவை நமக்குச் சொல்கின்றன.

தமது பத்து அவதாரங்களில் ஓர் அவதாரத்தில் மீனாகப் பிறந்து மீனுக்குப் பெருமை சேர்த்துள்ளார் திருமால். அந்த அவதாரக்கதை சுவாரஸ்யமானது.

பிரம்மாவிடமிருந்து ஹயக்ரீவன் என்ற அரக்கன் நான்கு வேதங்களையும் அபகரித்துச் சென்றுவிட்டான். புவியைக் காக்கும் உயர்ந்த கருத்துகளை உள்ளடக்கியவை வேதங்கள். அவை இல்லாதுபோனால் புவியில் அதர்மங்கள் அல்லவா மேலோங்கும். எனவே அந்த அரக்கனை வதம் செய்து வேதங்களை மீட்கத் திருவுளம் கொண்டார் திருமால்.

தன் மேல் பக்தி செலுத்தும் சத்யவிரதன் என்ற முனிவர் ஆற்று நீரில் தர்ப்பணம் செய்கையில் அவரது கூப்பிய கைகளில் பளபளப்பான ஒரு மீன் குஞ்சாகத் தோன்றினார்.

முனிவர் தம் கையில் திடீரெனத் தோன்றிய மீனை நதியில் விட்டபொழுது அது நடுங்கியதாக உணர்ந்தார். எனவே தன் கமண்டலத்து நீரிலேயே அதை எடுத்துக்கொண்டு ஆசிரமம் சென்றார்.

என்ன ஆச்சரியம்! விரைவில் அது விறுவிறுவென வளர்ந்து கமண்டலம் முழுவதையும் ஆக்கிரமித்துவிட்டது. முனிவர் செய்வதறியாது பிறகு அதைக் கிணற்றில் விட்டார். சிறிது நேரத்தில் அது வளர்ந்து, கிணறு முழுவதையும் நிரப்பியது. பின் குளத்தில் விடப்பட, குளத்தை விடப் பெரிதாகியது மீன்.

இனி என்னதான் செய்வதெனத் தெரியாது திகைத்தார் முனிவர். அந்த மீன் தன்னைக் கடலில் சேர்க்குமாறு முனிவருக்குக் கட்டளையிட, முனிவர் யோக சக்தியால் அதைக் கடலில் கொண்டு சேர்த்தார்.

அந்த மீன் திருமாலே என அறிந்த அவர், தாம் பிரளயத்தைக் காண விரும்புவதாகத் தன் விருப்பத்தைத் தெரிவித்தார். ஏழுநாள் பொறுத்திருக்கச் சொன்ன மீன், கண்ணுக்குப் புலப்படாமல் மறைந்துவிட்டது.

ஏழுநாள் கழித்துக்கொட்டிய பெருமழையால் உலகம் முழுவதையும் வெள்ளம் சூழ்ந்தது. அந்த முனிவர் சப்த ரிஷிகளுடன் வெள்ளத்தில் சிக்கிச் சுழன்றார். தங்களைக் காப்பாற்றுமாறு பூரண பக்தியுடன் திருமாலையே சரணடைந்தார்.

அப்போது பூமியே ஒரு தோணியாக மாறி அவர்கள் முன் வர, முனிவர்கள் அந்தத் தோணியில் ஏறிக்கொண்டனர். பிரம்மாண்டமான மீன் மறுபடி தோன்றி தன் முனையில் தோணியைக் கட்டி இழுத்துக் கொண்டு முனிவர்களுக்கு அவர்கள் விரும்பியபடி பிரளயத்தைச் சுற்றிக் காண்பித்தது.

பின் அந்த முனிவர்களுக்கு உத்தமமான ஆத்ம ஞானத்தை உபதேசித்த மீன் மறுபடி அவர்களை முன்புபோல் கரை சேர்த்தது.

அதன்பின் கடலுக்குள் மறைந்திருந்த அரக்கன் ஹயக்ரீவனுடைய மார்பைப் பிளந்து அவனை வதம் செய்து வேதங்களை மீட்டு, பிரம்மதேவனிடம் சேர்ப்பித்தது. பின் திருமாலாக மறுபடி தோற்றமெடுத்தார் மகாவிஷ்ணு. இதுவே மத்சய அவதாரக் கதை.

ராவணனை வதம் செய்வது ராம அவதாரத்தின் நோக்கம், கம்சனை வதம் செய்வது கிருஷ்ண அவதாரத்தின் நோக்கம். அதுபோல், வேதங்களைக் காப்பாற்றுவதுதான் மத்சய அவதாரத்தின் நோக்கம்.

* கம்ப ராமாயணத்தில் குகன் முதன்முறையாக ராமபிரானைச் சந்திக்கும் காட்சி அயோத்தியா காண்டத்தில் வருகிறது. ராமனின் உடன்பிறவாத மூன்று சகோதரர்களான குகன், சுக்கிரீவன், வீடணன் ஆகியோரில் ராமனை முதலில் கண்டு சரணடையும் பேறு பெற்றவன் வேடன் குகன்தான்.

முதன்முதலில் ராமபிரானைச் சந்திக்க வரும்பொழுது, மிகுந்த பக்தியோடும் பிரியத்தோடும் தேனும் மீனும் கொணர்ந்தான் குகன் என்று எழுதுகிறார் கம்பர்.

அன்பே முக்கியம் என்பதால் குகன் கொண்டுவந்தவை பவித்திரமானவையே என்றும் அவற்றைத்தான் உண்டதாகவே குகன் கொள்ள வேண்டும் என்று ராமன் சொன்னதாகவும் கம்பர் எழுதுகிறார்.

`இருத்தி நீ என்னலோடும் இருந்திலன் எல்லை நீத்த

அருத்தியன் தேனும் மீனும் அமுதினுக்கு அமைந்த ஆகத்

திருத்தினென் கொணர்ந்தேன் என்கொல் திருவுளம் என்ன வீரன்

விருத்த மாதவரை நோக்கி முறுவலன் விளம்ப லுற்றான்`

* மகாபாரதம் மீனுக்குப் பிறந்த பெண்ணைப் பற்றிய கதையைச் சொல்கிறது. செம்படவ மன்னன் ஒருவன் ஒரு மீனை அறுத்துப் பார்த்தபோது அதன் வயிற்றில் பெண் குழந்தை இருந்ததைக் கண்டு அதிசயித்தான். அவளைப் பாசத்தோடு வளர்த்தான்.

பேரெழில் கொண்ட மீன் விழியாளாக வளர்ந்த அவள் உடலில் மட்டும் எப்போதும் மீன் வாசனை வீசியது. பருவம் அடைந்த அவள் பராசர முனிவரோடு கூடி வியாசரைப் பெற்றெடுத்தாள்.

பராசரர் அருளால் அவள் உடல் மீன் மணம் நீங்கி நன்மணம் கமழத் தொடங்கியது. அவள் பரிமளகந்தி எனப் புதுப்பெயர் பெற்றாள் என வளர்கிறது மகாபாரதக் கதை.

* மகாபாரதத்தில் பாஞ்சாலி சுயம்வரத்தில் பொன்மயமான மீன் வடிவம் ஒன்று இலக்காக வைக்கப்படுகிறது. பாஞ்சாலியை மணக்க விரும்புபவர்களில் யார் அந்த மீன் வடிவத்தை அம்பால் வீழ்த்துகிறார்களோ அவருக்கே பாஞ்சாலி மாலையிடுவாள் என நிபந்தனை அறிவிக்கப்படுகிறது.

இலக்காக நிர்ணயிக்கப்பட்ட மீன் மேலே உயரத்தில் சுழன்று கொண்டிருக்கும். அதன் நிழல் கீழே உள்ள தடாகத்தில் விழும். நிமிர்ந்து பாராமல் குனிந்து கீழே உள்ள மீன்நிழலைப் பார்த்து மேலே உள்ள மீன் வடிவத்தை அம்பால் வீழ்த்த வேண்டும். அப்படிச் சாதனை நிகழ்த்துபவருக்கே திரவுபதி மாலையிடுவாள்.

இந்தக் கடுமையான போட்டியில் சுயம்வரத்திற்கு வந்திருந்த அனைத்து மன்னர்களும் தோற்றுப்போக, மாபெரும் வில்லாளியான அர்ச்சுனன் மட்டும் போட்டியில் வெற்றி பெற்றான் என்றும் அதனாலேயே பேரழகி பாஞ்சாலி பாண்டவர்களுக்கு மனைவியானாள் என்றும் மகாபாரதம் பேசுகிறது.

* கண்ணன் இறந்ததன் பின்னணியிலும் ஒரு மீன் வருகிறது. ஒரு மீனின் வயிற்றிலிருந்து கிடைத்த சிறிய இரும்புத் துண்டைத் தன் அம்பின் நுனியில் பொருத்திக் கொண்டான் ஜரா என்ற வேடன். மரத்தின்மேல் அமர்ந்திருந்த கண்ணனின் பாதங்களைத் தொலைவில் இருந்து பார்த்து புறா எனத்தவறாக நினைத்து அம்பெய்தான். அதனாலேயே கண்ணன் வீழ்ந்தான்.

திருப்பூர் கிருஷ்ணன்

 குலமே அழியும் என்ற துர்வாசரின் சாபத்தின் காரணமாக இரும்பு உலக்கையைப் பெற்றெடுத்தான் ஓர் யாதவன். அந்த இரும்பு உலக்கையின் சிறு துண்டுதான் மீன் வயிற்றிலிருந்த இரும்பு. சாபம் பலிக்கவே யாதவ குலம் முழுவதும் அழிந்ததோடு யாதவ குலத்தைச் சார்ந்த கண்ணனும் அழிந்தான் என்கிறது பாகவதம்.

* காளிதாசன் எழுதிய நாடகமான சாகுந்தலத்தில் மீன் ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. கானகத்தில் வேட்டையாடச் சென்றபோது கண்வ மகரிஷியின் வளர்ப்பு மகளான சகுந்தலையைக் காண்கிறான் மன்னன் துஷ்யந்தன். அவள்மேல் காதல் கொண்டு காந்தர்வ விவாகம் செய்துகொள்கிறான்.

அவளை மணந்ததன் அடையாளமாக அவளுக்குத் தன் மோதிரத்தை அணிவிக்கிறான். பின்னர் வந்து அவளை அரண்மனைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி விடைபெறுகிறான்.

அவன் நினைவிலேயே தோய்ந்திருக்கிறாள் சகுந்தலை. துர்வாச மகரிஷி வந்தபோது அவரை உபசரிக்க மறந்துபோகிறாள்.

ஞான திருஷ்டியால் சகுந்தலையின் மனத்தில் துஷ்யந்தனே நிறைந்துள்ளான் என்பதை உணர்ந்து சீற்றமடைந்த துர்வாசர், துஷ்யந்தன் மனத்திலிருந்து சகுந்தலை நினைவு முற்றிலும் மறையட்டும் எனச் சபிக்கிறார். பின்னர் அந்த மோதிரத்தைக் கண்டால் மறுபடி நினைவு வரும் எனச் சீற்றம் தணிந்து சாப விமோசனமும் அளிக்கிறார்.

கர்ப்பவதியான சகுந்தலை கணவனைத்தேடி அவன் அரண்மனைக்கே செல்கிறாள். ஆனால் என்ன சங்கடம். வழியில் பொய்கையில் அவள் நீராடும்போது கணவன் அணிவித்த மோதிரம் நழுவி நீரோடு போய்விடுகிறது. மோதிரம் மட்டுமல்ல, அதோடு அவள் வாழ்வும் அவள் கையை விட்டு நழுவி விடுகிறது.

மோதிரத்தை அவளால் காண்பிக்க முடியாததால் அவளை அடையாளம் காண முடியாமல் மறந்தே போகிறான் துஷ்யந்தன்.

அந்த மோதிரத்தை ஒரு மீன் உண்கிறது. வலையர் கையில் அந்த மீன் சிக்குகிறது. மீனை அறுக்கும் வலையர்கள் அரசனின் முத்திரை மோதிரம் மீனின் வயிற்றில் வந்தது எப்படி என வியக்கிறார்கள்.

அதை அவர்கள் அரசனிடம் அளிக்க அதைப்பார்த்த மறுகணம் துர்வாசரின் சாப விமோசனப்படி துஷ்யந்தனுக்கு சகுந்தலையின் நினைவு மறுபடி திரும்புவதாக சாகுந்தலத்தின் கதை மேலும் வளர்கிறது.

ஒரு மீன் மூலம் இவ்விதம் ஒரு பெரும் திருப்பத்தைக் கதையில் உண்டாக்குகிறார் சாகுந்தல ஆசிரியரான காளிதாசர்.

* மீனைக் கண்ணுக்கு உவமையாக்குவது இலக்கிய மரபு. மீனுக்கும் கண்ணுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இரண்டுமே நீரில் தோய்ந்திருக்கின்றன. வடிவத்தால் ஒன்றுபோல் இருக்கின்றன. இரண்டிலுமே கருமை வெண்மை ஆகிய இரு நிறங்கள் உள்ளன. ஆகையால்தான் மீன்கள் விழிகளோடு ஒப்பிடப்படுகின்றன.

* விவேக சிந்தாமணியில் வரும் பாடலொன்று தலைவியின் விழிகளை மிக அழகாக மீனுக்கு ஒப்பிடுகிறது.

தாமரை பூத்த பொய்கையில் முகம் கழுவுவதற்காக இறங்கி நீரை எடுத்து முகத்தருகே ஏந்தினாள் தலைவி. அதில் தன் கண்களின் பிரதிபலிப்பைப் பார்த்துக் கெண்டை மீன் எனக்கருதி `கெண்டை கெண்டை` என்று சொல்லியவாறு தண்ணீரை அப்படியே விட்டுவிட்டு பதற்றத்தோடு கரையில் ஏறினாள்.

ஆனால் தான் கைகளில் முன்னர் பார்த்த கெண்டை மீன் குளத்தில் இல்லாதது கண்டு செய்வதறியாது தயங்கினாள் என்கிறது பாடல்:

`தண்டுலாவிய தாமரைப் பொய்கையில்

மொண்டு நீரை முகத்தரு கேந்தினாள்

கெண்டை கெண்டை எனக் கரை ஏறினாள்

கெண்டை காண்கிலள் நின்று தயங்கினாள்!`

இவ்விதம் இதிகாசங்களிலும் புராணங்களிலும் இலக்கியங்களிலும் மீன்கள் நெடுங்காலமாகத் துள்ளி விளையாடியபடியே இருக்கின்றன. பயிலும் நமக்கு அவை பரவசத்தைத் தருவதோடு உயர்ந்த கருத்துகளையும் போதித்து நம் வாழ்வை உயர்த்துகின்றன.

தொடர்புக்கு:-

thiruppurkrishnan@gmail.com

Tags:    

Similar News