சிறப்புக் கட்டுரைகள்

திருக்குறள் ஞான அமுதம்

Published On 2024-05-01 10:08 GMT   |   Update On 2024-05-01 10:08 GMT
  • தர்மம் செய்யச்செய்ய தன்னைப்பற்றி அறியும் சிந்தையும் உலகைப்பற்றி அறியும் சிந்தையும் ஆன்மாவின் இயல்பறியும் தன்மையும் உண்டாகும்.
  • அன்பு என்பது இல்லறத்தானுக்கு உரிய உயர்ந்த பண்பு. அன்பு இல்லையெனில் உலக மக்களுக்கு நன்மை செய்ய முடியாது.

உலகப் பொதுமறையான திருக்குறளில் உள்ள 1330 குறள்களிலும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் சொல்லாத விசயங்களே இல்லை. திருக்குறளுக்கு புலவர்கள், கவிஞர்கள், அறிஞர்கள் பலர் விளக்கம் தந்திருந்தாலும், தன்னிலை கண்டு சிவ நிலைக்கு உயர்ந்த ஒப்பற்ற துறவிகள் விளக்கம் கொடுக்கவில்லையே என்ற குறையை போக்கும் விதமாக சிவநிலை கண்ட ஞானி ஓங்காரக்குடில் ஆசான் ஸ்ரீஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் தெளிவான் விளக்கங்கள் அளித்துள்ளார். அதன் விவரம்,

அதிகாரம்: அறன் வலியுறுத்தல்

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் என தொடங்கும் குறளுடன் 10 குறட்பாக்கள் இந்த அதிகாரத்தில் உள்ளன.

"அறம் செய்தால் இருபத்தொரு தலைமுறைக்கு நன்மை உண்டு" என்று திருவாசகத்தில் மாணிக்கவாசகர் கூறியுள்ளார்.

அதுபோலவே அறக்கடலாக விளங்கும் திருவள்ளுவரும் அறம் செய்வதில் வழுவாது இருக்க வேண்டும் என்பதை இவ்வதிகாரத்தில் தெரிவிக்கின்றார்."

தர்மம் சிறப்பை உண்டாக்கும், புகழையும் தரும். உயிர்க்கு அறத்தைவிட உயர்ந்த உபாயம் வேறு எதுவும் இல்லை. உடம்பைப்பற்றிக் கூறாமல் இங்கு உயிருக்கு உபாயத்தைக் கூறியதற்குக் காரணம் என்னவென்றால், உடம்புக்கு நரை, திரை, மூப்பு உண்டு, உயிருக்கு அது கிடையாது. உயிர் குறுகாது, விரியாது, நலியாது, அழியாது. எனவே தர்மம் உயிருக்கு ஆக்கம் தர வல்லது.

இந்த ஜென்மத்தில் செய்கின்ற புண்ணியம் தொடர்ந்து பல ஜென்மத்தில் உயிரைக் காக்க வல்லதாக இருக்கும். எனவே, அறத்தைவிட, உயிருக்கு ஆக்கம் தருவது வேறு எதுவும் இல்லை என்பது இங்கு வலியுறுத்தப்படுகிறது.

அறத்தை விட மேன்மையானது வேறு எதுவும் இல்லை. தர்மம் செய்யச்செய்ய தன்னைப்பற்றி அறியும் சிந்தையும் உலகைப்பற்றி அறியும் சிந்தையும் ஆன்மாவின் இயல்பறியும் தன்மையும் உண்டாகும்.

அறத்தை மறந்தால் கேடு வந்து மீண்டும் பிறந்து, துயரத்தில் சிக்கிக் கொள்வான். அவ்வாறு அறம் செய்தோரை மறக்காமல் அவர்களைப் போற்றுதலும் சிறப்பானதாகும்.

முடிந்த அளவுக்கு அறப்பணி செய்ய வேண்டும். அதனை எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். செய்ய வாய்ப்புக் கிடைத்த இடத்திலெல்லாம் செய்யலாம்.

குறையில்லாத மனம் எங்கிருக்கிறதோ அங்கு அறம் நிலைத்து நிற்கும். குற்றமில்லாத மனம் இருந்தால் அதுவே அறம். காம தேகம் இருக்கும் வரை அறியாமை இருக்கும்; அழியக்கூடிய பொருள்கள் மீது பற்று இருக்கும். திருவருள் துணை கொண்டு இத்தகைய குணங்களை வென்றவனுக்கு, குற்றமற்ற மனம் இருக்கும். அதுவே அறமாகும். அறத்தை விளம்பரப்படுத்துபவன் தன்னை ஏமாற்றிப் பிறரையும் ஏமாற்றுவான்.

பொறாமை, ஆசை, வெகுளி, கோபம், கடுஞ்சொல் இந்த ஐந்து குணக்கேடுகளும் ஒருவனிடம் இருக்கும் வரை அவனால் அறம் செய்ய முடியாது, செய்தாலும் பயனற்றதாகி விடும். இந்த கேடுகள் மனதில் சேரா வண்ணம் பாதுகாத்துக் கொள்ளுதல் வேண்டும்.

இளமை உள்ளபோதே அறப்பணி செய்ய வேண்டும். உடல் நலிந்து முதுமை அடையும் நாளில் துணை நிற்பதும் உதவுவதும் முன் செய்த அறமே ஆகும்.

பல்லக்கில் வரும் உயர்ந்த அரசன், மேல்நிலையில் இருப்பதாக கருதிக் கொள்பவர்கள் ஆகிய இவர்கள் பல்லக்கை தூக்கி செல்கின்றவனைப் பார்த்து, மேலே அமர்ந்திருப்பவன் புண்ணியவான் என்றோ, கீழே தூக்கிச் செல்பவன் பாவியென்றோ கூறுதல் கூடாது. அந்த பாவபுண்ணியச் செயல்களை நம் மனதில் மட்டுமே அறிதல் வேண்டும்.

ஜென்மத்தைக் கடைத்தேற்றுகின்றவர்கள் நாள் தவறாது அறப்பணியைத் தொடர்ந்து செய்ய வேண்டும். சிறந்த முயற்சியுடன் அறப்பணியைச் செய்து வரவேண்டும். அவ்வாறே பூஜையும், புண்ணியமும் தொடர்ந்து செய்தால், மீண்டும் கருப்பைக்குள் செல்லமாட்டான். தவறினால் மீண்டும் கருப்பைக்குள் செல்லுவான்.

முயன்று தவம் செய்து, அதனால் பெறுவதே சுகம். வேறு வழியில் இன்பம் பெற முயற்சித்தால் அது இன்பமாகவோ, புகழாகவோ இருக்காது. முயன்று செய்துகொள்ளத்தக்கது அறமே.

மரணமிலா பெருவாழ்வு வாழவேண்டும் என்று எண்ணக் கூடியவர்கள் தடைபடாது தர்மம் செய்து, பக்தியும் செலுத்த வேண்டும்.

அறம் செய்யாவிடில் அறியாமை சூழும். அறியாமை சூழ்ந்தால் தவறு செய்வான். அப்போது அவனுக்குப் பழிவரும். பழியில்லாத வாழ்வு வாழ வேண்டுமெனில் அறம் செய்ய வேண்டும். அப்போது சிறப்பறிவு உண்டாகும். அதனால் பெருந்தன்மை உண்டாகும். 

தவத்திரு. ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள்

அதிகாரம்: இல்வாழ்க்கை

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் என தொடங்கும் குறளுடன் 10 குறட்பாக்கள் இந்த அதிகாரத்தில் உள்ளன.

குடும்பத்தில் இருந்து வாழ்கின்ற முறையைப் பற்றி கூறுவது இல்வாழ்க்கை. இல்லறத்தானுக்கு உரிய பெருமை யாதெனில் சிறந்த அறிவாளியாக இருந்து வறுமையோடு இருந்தாலும், துன்பத்தைத் தாங்கிக்கொண்டு, நெறிபிறழாமல் வாழ்கின்ற சான்றோர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து வாழ வேண்டும்.

உண்மைப் பொருள் அறிந்து மரணத்தை வென்ற ஞானிகளின் பாதங்களை பக்தியுடன் பற்றி பூஜை செய்கின்றவர்களுக்கு உதவி செய்தல் வேண்டும்.

தம்முடைய பார்வையினால் பிறரின் ஊழை (தீவினையை) போக்கக்கூடிய வல்லமை பொருந்திய ஞானிகளுக்குப் பணிந்து சேவை செய்யவேண்டும்.

நன்னெறியில் நடக்கும் சான்றோர். இறைவனிடம் பக்தி செலுத்துகின்ற பக்தன், இறைநிலை அடைந்த ஞானிகள் இவர்களின் தேவைகளைச் சேவையாய் நினைத்து பூர்த்தி செய்யவேண்டும். அவ்வாறு செய்தால் வாழ்நாள் முழுவதும் துணையாய் இருந்து சேவை செய்தவரின் குடும்பத்தை அவர்கள் காப்பார்கள்.

இல்லறத்தான் வீட்டில், உண்மைப் பொருள் அறிந்து வாசி வசப்பட்டு காமதேகத்தை நீத்த ஞானிகள், ஒரு முறை உணவு உட்கொண்டால் மூன்று புவனத்தில் உள்ளவர்கள் உண்டதற்கான புண்ணியம் அந்த இல்லறத்தானுக்குக் கிடைக்கும். உணவு கொடுத்த இல்லறத்தானும் ஞானியாவான். இரண்டாவது முறை சாப்பிட்டால் அந்த உணவை சமைத்த இல்லறத்தானின் மனைவி ஞானியாவாள். மூன்றாவது முறை சாப்பிட்டால் அவனுடைய சந்ததிகள் ஞானியாவார்கள். நான்காவது முறை சாப்பிட்டால் அவனுடைய தாயும் ஞானியாவாள். ஐந்தாவது முறை சாப்பிட்டால் அவனுடைய இருபத்தொரு தலைமுறையும் ஞானியாவார்கள். அத்தகைய பெருமை ஞானியர்களுக்கு உண்டு. அவர்களுக்கு உணவு கொடுத்து உபசரிப்பது பெறுதற்கரிய புண்ணியமாகும். இத்தகைய ஞானிகளின் தொடர்பு நமக்கு இருந்தால், நம் அறியாமையை நீக்கி நம்மை தெளிவுபடுத்துவார்கள்.

உண்மைப் பொருள் அறிந்து ஜென்மத்தை கடைத்தேற்றிக்கொள்வதற்காக மரணத்தை வெல்லும் மார்க்கத்தில் செல்லுகின்ற துறவிகளின் திருவடியைப் பற்றி பூஜை செய்தல் வேண்டும். அவர்கள் தேவையைப் பூர்த்தி செய்தல் வேண்டும்.

உறவினர்கள் இல்லாது இறந்தவர்களின் ஈமக்கடன்களை செய்ய வேண்டும். இப்படி செய்வது இல்லறத்தானுக்கு மிகவும் சிறப்பாகும்.

தென்புலம் என்று சொல்லப்படுவது கேரளம், தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கியது. இந்த மண்ணில் அதுவும் குறிப்பாக நம் தமிழ்நாட்டில் உள்ள தட்பவெப்பம் மிகவும் வெப்பமாகவும் இருக்காது, குளிர்ச்சியாகவும் இருக்காது. இந்த தட்ப வெப்ப நிலை தவத்திற்கு ஏற்றது. எனவே இது ஞான பூமி.

உலகத்தில் எங்கு புண்ணியம், பூஜை செய்திருந்தாலும் இந்த ஞானபூமியில் பிறந்துதான் ஜென்மத்தைக் கடைத் தேற்றிக்கொள்ள முடியும். இந்த ஞானபூமியில் பிறந்து அறத்தைக் காக்கும் சான்றோர்களும் ஞானிகளும் பலர் உண்டு. அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தல் வேண்டும்.

மேலான ஞானிகள் ஒளிநிலை அடைந்த இடங்களும், தெய்வசக்தி வாய்ந்த இடங்களும் பல உண்டு. அந்த இடங்களுக்குச் சென்று பூஜை செய்வதும் புண்ணியம் செய்வதும் மிக்க பலன் தரும்.

நம்மை நாடி வந்த விருந்தினர்களுக்குப் பாதுகாப்பு கொடுத்து உபசரிப்பதும், சுற்றத்தாரைப் பாதுகாப்பதும், முறையான வழியில் தன்னை பாதுகாத்துக் கொள்வதும் இல்லறத்தானுக்குரிய சிறப்பான கடமையாகும்.

பொருள் சேர்க்கும் பொழுது பழிக்கு அஞ்சி பொருள் சேர்க்க வேண்டும். அவ்வாறு சேர்த்த பொருளை தான் மட்டும் அனுபவிக்காமல் துயரப்படுபவரின் துயரங்களையும் போக்க வேண்டும். முறைதவறி பொருள் சேர்த்து தர்மகாரியங்கள் செய்தால், யாரை வஞ்சித்து பொருளை பெற்றோமோ அவருக்கே புண்ணியத்தின் பலன் போய் சேர்ந்துவிடும். முறையாக பொருள் சேர்த்து அவற்றில் புண்ணியம் செய்தால் அவர்கள் மேற்கொள்ளும் காரியங்கள் தடையில்லாமல் நடக்கும், வெற்றியுண்டு.

சிலர் வெளியில் நல்லவர்களாக இருப்பார்கள். வீட்டிற்கு சென்றால் மனைவி, குழந்தைகள் நடுங்கும்படியாக இருப்பார்கள். மனைவி, குழந்தைகள் செய்த குற்றங்களை மன்னித்து உறவினர்களும் சுற்றத்தார்களும் வாழ்த்தும்படியாக இருக்க வேண்டும்.

அன்பு என்பது இல்லறத்தானுக்கு உரிய உயர்ந்த பண்பு. அன்பு இல்லையெனில் உலக மக்களுக்கு நன்மை செய்ய முடியாது. மனைவியின் துணையோடு அன்பினால் அறப்பணிகள் செய்து அறத்தை நிலைநாட்ட வேண்டும்.

பொருளறிந்தவன் அருளறிவான். பொருள் என்பது ஞானிகள், அருள் என்பது திருவடி. உண்மையறிந்தவனே சிறப்பான இல்லறத்தை நடத்துகின்றான்.

உண்மையறிந்தால் உடற்கூறு அறிவான், மனைவியை அறிவான், பெண்ணின் இயல்பறிவான், ஆணின் இயல்பறிவான், உலகத்தை புரிந்து கொள்வான், இயற்கையைப் புரிந்து கொள்வான், பசி, காமம் இவற்றின் இயல்பறிந்து, உடற்கூற்றை அறிவான்.

இந்த உடம்பை அதிகமாக காமத்திற்கு பயன்படுத்தினால் நோய் வந்துவிடும் என்பதையும் அறிவான். தன் உடம்பையும் அறிந்து, மனைவியின் உடம்பையும் அறிந்து மென்மையாக அவளை பயன்படுத்திக் கொள்பவனே சிறந்த இல்லறத்தான். அந்த உண்மையை அறியாதவன் அவளையும் வருத்தி, தானும் வருந்துவான்.

மற்றவர்களை நன்னெறிப்படுத்தி தானும் அறத்திலிருந்து தவறாமல் நடந்துகொண்ட உண்மைப் பொருளறிந்தவன், ஜென்மத்தை கடைத்தேற்றிக்கொள்வான். அத்தகையவர்கள் உயர்ந்த நிலையில் உள்ளவர்களாவர்.

அறம் என்பது தர்மம், உண்மை, தயைசிந்தை, ஜீவதயவு, மனிதநேயம் போன்ற பண்புகளைப் பொருந்தியது. இத்தகைய அறத்தைச் சார்ந்துள்ள குடும்பத்தில் பிரச்சனைகள் வராது, ஆரவாரம் இருக்காது, அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

அறம் என்பது இல்லறத்திற்கு சிறப்பானது. அறம் செய்யும்பொழுது பிறர் மதிக்கக்கூடிய அளவில் செய்தல் வேண்டும். பிறர் மதிக்காத ஒன்றை அறம் என்று செய்தல் கூடாது. அவ்வாறு செய்வது தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வது ஆகும். உலக நடை அறிந்து அறம் செய்தல் வேண்டும். வாழுகின்ற முறையோடு மேற்கூறப்பட்ட முறைகளை கடைப்பிடித்து வாழவேண்டிய நெறிமுறையுடன் வாழ்பவர்கள் வானத்திலுள்ள தெய்வத்திற்கு ஒப்பானவர்கள்.

Tags:    

Similar News