இந்தியா

இல்லத்தரசிகள் போல் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் ஊக்கத்தொகை

Published On 2023-11-18 07:55 GMT   |   Update On 2023-11-18 07:55 GMT
  • கடந்த மாதம் மைசூருவில் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கும் கிரகலட்சுமி திட்டத்தை ராகுல்காந்தி தொடங்கி வைத்தார்.
  • காங்கிரஸ் ஆட்சி அமைய அருள்பாலித்ததுடன், உத்தரவாத திட்டங்களை அமல்படுத்தவும் சாமுண்டீஸ்வரி அம்மன் உறுதுணையாக இருந்துள்ளார்.

பெங்களூரு:

கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சி அமைந்துள்ளது. இந்த அரசு பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயண திட்டம், 200 யூனிட் இலவச மின்சார திட்டம், 10 கிலோ ரேஷன் அரிசி வழங்கும் திட்டம், இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கும் கிரகலட்சுமி திட்டம், வேலையில்லாத பட்டதாரிகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டம் என 5 திட்டங்களை அமல்படுத்துவதாக அறிவித்து, அமல்படுத்தியுள்ளது.

இதில் கடந்த மாதம் மைசூருவில் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கும் கிரகலட்சுமி திட்டத்தை ராகுல்காந்தி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி மாநிலம் முழுவதும் 1 கோடியே 20 லட்சம் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்ட தொடக்க விழாவையொட்டி முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோர் சாமுண்டிமலைக்கு சென்று சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு தலா ரூ.2 ஆயிரம் காணிக்கையாக வழங்கியிருந்தனர்.

இந்த நிலையில் மைசூருவை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.சி. தினேஷ் கூலிகவுடா சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோருக்கு ஒரு கோரிக்கை கடிதம் எழுதி வைத்துள்ளார்.

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் ஆட்சி அமையவும், 5 உத்தரவாத திட்டங்களை செயல்படுத்தவும் வேண்டி நீங்கள் இருவரும் சாமுண்டீஸ்வரி அம்மனை தரிசனம் செய்தனர். அதன்படி மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைய அருள்பாலித்ததுடன், உத்தரவாத திட்டங்களை அமல்படுத்தவும் சாமுண்டீஸ்வரி அம்மன் உறுதுணையாக இருந்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்ட தொடக்க விழாவின் போதும் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு நீங்கள் ரூ.2 ஆயிரம் வழங்கினீர்கள். எனவே கிரகலட்சுமி திட்டத்தின் கீழ் மாதந்தோறும் அரசு சார்பில் ரூ.2 ஆயிரம் ஊக்கத்தொகையை சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்த கோரிக்கை கடிதத்தை படித்து பார்த்தவுடன் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், உடனே இந்த கோரிக்கையை நிறைவேற்றும்படி கர்நாடக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி லட்சுமி ஹெப்பால்கருக்கு பரிந்துரை செய்து உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News