search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடக அரசு"

    • ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு உரிமை கோரி ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை அந்த சிறப்பு கோர்ட்டு ஏற்கனவே தள்ளுபடி செய்தது.
    • கர்நாடக அரசு தரப்பில் ஜெ.தீபாவின் மனுவுக்கு ஆட்சேபனை தெரிவித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    பெங்களூரு:

    சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி பெங்களூரு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, ஜெயலலிதாவின் தங்க நகைகள் மற்றும் பொருட்களை தமிழக அரசிடம் கடந்த 6, 7-ந்தேதிகளில் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    இதற்கிடையே ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு உரிமை கோரி ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை அந்த சிறப்பு கோர்ட்டு ஏற்கனவே தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து அவர்கள் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க இடைக்கால தடை விதித்து நீதிபதி முகமது நவாஸ் உத்தரவிட்டார்.

    மேலும் இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி கர்நாடக அரசுக்கு நீதிபதி நோட்டீஸ் அனுப்பினார். அதைத்தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை 26-ந்தேதிக்கு (நேற்று) நீதிபதி ஒத்திவைத்தார். இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று கர்நாடக ஐகோர்ட்டில் நீதிபதி முகமது நவாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக அரசு தரப்பில் ஜெ.தீபாவின் மனுவுக்கு ஆட்சேபனை தெரிவித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    இதையடுத்து இந்த வழக்கின் அடுத்த விசாரணையை வருகிற ஏப்ரல் 15-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அதுவரை ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    • தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான தி.மு.க., இந்தியா கூட்டணியில் முக்கிய கட்சியாக அங்கம் வகிக்கிறது.
    • தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில், மேகதாது திட்டத்தை தடுப்போம் என்று கூறியுள்ளதை கவனித்தேன்.

    பெங்களூரு:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. நேற்று முன்தினம் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் கர்நாடகத்தில் மேகதாது திட்டத்தை செயல்படுத்துவதை தடுப்போம் என்று உறுதியளிக்கப்பட்டு உள்ளது. இதற்கு கர்நாடக பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    இந்த விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசையும், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க.வையும் இலக்காக கொண்டு கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். தி.மு.க.வுக்கும், கர்நாடக காங்கிரஸ் கட்சிக்கும் கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து கர்நாடக பா.ஜனதா தலைவர் விஜயேந்திரா தனது எக்ஸ் தளத்தில் "பலவீனமான முதல்-மந்திரி நமது முதல்-மந்திரி, நமது காவிரி நமது உரிமை" என்ற பெயரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

    தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான தி.மு.க., இந்தியா கூட்டணியில் முக்கிய கட்சியாக அங்கம் வகிக்கிறது. அக்கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் மேகதாது திட்டத்தை அமல்படுத்துவதை தடுத்து நிறுத்துவோம் என்று தெரிவித்துள்ளது. இது, சித்தராமையா அரசு மு.க.ஸ்டாலினுடன் ரகசிய உறவு வைத்துள்ளதை வெளிப்படுத்தியுள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அதில் அங்கம் வகிக்கும் தி.மு.க., பேரம் பேசி நமது காவிரி நீரை கூடுதலாக பெறும். மேகதாது திட்டத்தையும் தடுத்து நிறுத்தும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    தி.மு.க. தேர்தல் அறிக்கை தொடர்பாக நீர்ப்பாசனத்துறையை தன்வசம் வைத்துள்ள கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில், மேகதாது திட்டத்தை தடுப்போம் என்று கூறியுள்ளதை கவனித்தேன். அவர்கள் (தமிழ்நாடு) தங்களின் மாநிலத்தில் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். சுப்ரீம் கோர்ட்டில் நமக்கு நீதி கிடைக்கும். மேகதாது திட்டத்தால் கர்நாடகம் மட்டுமின்றி தமிழ்நாடும் பயன் அடையும். ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களை சேர்ந்த மக்கள் கர்நாடகத்தில் வசிக்கிறார்கள். அதனால் மேகதாது திட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு பேசும் நல்ல காலம் வரும். மேகதாது திட்டத்தை அமல்படுத்தியே தீருவோம்

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குடிநீர் தட்டுப்பாட்டை போக்க எந்த விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் காங்கிரஸ் அரசு எடுக்கவில்லை.
    • பெங்களூருவில் இப்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடி முழுக்க முழுக்க கர்நாடக காங்கிரஸ் அரசின் நிர்வாகத் தோல்வி.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,

    உலகின் முன்னணி பெரு நகரங்களில் ஒன்றான பெங்களூருவில் தற்போது கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    தண்ணீர் இல்லாததால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை, வீட்டில் இருந்தே பணி செய்ய அறிவுறுத்தியுள்ளது. ஆனால், வீட்டிலும் தண்ணீர் இல்லாததால், வேலை செய்ய முடியாமல் ஊழியர்கள் தவித்து வருகின்றனர். கார்களை கழுவினால் ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும் என்று கர்நாடக காங்கிரஸ் அரசு அறிவித்துள்ளது. இதிலிருந்து நிலைமை எந்த அளவுக்கு மோசமடைந்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

    கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு பதவியேற்று ஓராண்டு ஆகப்போகிறது. குடிநீர் தட்டுப்பாடு என்பது ஒரு சில நாட்களில் ஏற்பட்டுவிடும் இயற்கை பேரிடர் அல்ல. போதுமான மழை இல்லை என்பதும், அதனால் அதிகமான மக்கள் தொகை கொண்ட பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு வரும் என்பதும் தெரிந்த விஷயம் தான்.

    ஆனாலும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க எந்த விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் காங்கிரஸ் அரசு எடுக்கவில்லை. பெங்களூருவில் இப்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடி முழுக்க முழுக்க கர்நாடக காங்கிரஸ் அரசின் நிர்வாகத் தோல்வி.

    கர்நாடக முதல்வர் சித்தராமையா - துணை முதல்வர் டி. கே.சிவகுமார் - காங்கிரஸ் அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே என முக்கோண அரசியலில் சிக்கி கர்நாடக மக்கள் தவிக்கின்றனர். இவர்கள் மூவரும் தங்களுக்குள் ஒருவரையொருவர் வீழ்த்த போட்டி போடுகின்றனரே தவிர, மக்களைப் பற்றி துளியும் கவலைப்படவில்லை. அதன் விளைவுதான் குடிநீர் பஞ்சம்.

    கர்நாடக காங்கிரஸ் அரசில் இந்த மூவர் தவிர, சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோரும் தலையிடுகின்றனர். இந்த ஆறு பேரும் தலையிடுவதால் அரசு நிர்வாகம் செயலிழந்திருக்கிறது.

    காங்கிரஸ் ஆளும் மூன்று மாநிலங்களில் வளமான மாநிலம் கர்நாடகம் என்பதால் அதனை தங்களது கஜானாவாகவே காங்கிரஸ் கட்சி பார்க்கிறது. இதன் விளைவுதான் கார்களை கழுவினால் ரூ. 5,000 அபராதம் என்ற அறிவிப்பு.

    காங்கிரஸ் அரசின் நிர்வாகத் தோல்வியால் ஏற்பட்ட குடிநீர் பஞ்சத்தால் கர்நாடக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதிலிருந்து மக்களைத் திசைதிருப்பவும், கர்நாடக மக்களின் உணர்வுகளைத் தூண்டி அரசியல் ஆதாயம் அடையவும், 'தமிழகத்திற்கு ஒரு சொட்டு கூட தண்ணீர் தரமாட்டோம்' என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்திருக்கிறார்.

    பெங்களூரு குடிநீர் பஞ்சத்தை காரணம் காட்டி உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை தர மறுக்கிறது கர்நாடக காங்கிரஸ் அரசு. இதற்கு கடும் எதிர்ப்பை தமிழக அரசு தெரிவிக்காமல், கர்நாடக அரசுடன் போராடி நீரை பெற்று தராமல் தமிழகத்திற்கு துரோகம் செய்து வருவது கடும் கண்டனத்துக்குரியது

    காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளை வாரி வழங்கியிருக்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு, கர்நாடக முதல்வர் சித்ததராமையாவுக்கு கண்டனம் தெரிவிக்க கூட நேரம் இல்லை.

    கர்நாடக அரசு பாடத்திட்டத்தில், ஈ.வெ.ராமசாமியின் இந்து விரோத வரலாற்றை சேர்க்க, கர்நாடக காங்கிரஸ் அரசுடன் தனக்குள்ள நட்பை பயன்படுத்த தெரிந்த முதல்வர் ஸ்டாலினுக்கு, தமிழகத்திற்கு தண்ணீர் கேட்க முடியவில்லை.

    இனியும் தமிழக மக்களை ஏமாற்றாமல், தனது நண்பர்களான கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகியோருடன் பேசி தமிழகத்திற்கு வர வேண்டிய காவிரி நீரை முதல்வர் ஸ்டாலின் பெற்றுத் தர வேண்டும்.

    இல்லையெனில் வரும் மக்களவைத் தேர்தலில் தமிழக மக்கள் திமுக கூட்டணிக்கு உரிய பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பைக் டாக்சிகளில் இரவில் செல்லும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தன.
    • பைக் டாக்சிகளின் தேவையை ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது.

    பெங்களூரு:

    பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி கர்நாடகாவில் பைக் டாக்சிகளுக்கு தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.

    ஓலா, ஊபர், ரேபிடோ என்ற பெயரில் பைக் டாக்சிகள் கர்நாடகாவில் இயக்கப்பட்டு வந்தது. இதற்கு வாடகை கார், ஆட்டோ டிரைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களின் வாழ்வாதாரம் பறிபோவதாக குற்றம் சாட்டினர்.

    பைக் டாக்சிகளில் இரவில் செல்லும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தன. கடந்த ஓராண்டுக்கு முன்பு பெங்களூருவில் பைக் டாக்சியில் சென்ற பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது பைக் டாக்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு கர்நாடக அரசு போக்குவரத்து துறை கர்நாடகத்தில் பைக் டாக்சிக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

    கர்நாடகா அரசின் போக்குவரத்து துணை செயலர் புஷ்பா வெளியிட்ட உத்தரவில் பைக் டாக்சிகள் பெண்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை. பைக் டாக்சிகளின் தேவையை ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் பைக் டாக்சிகள் பெரிய அளவில் மக்களுக்கு உதவவில்லை என்று கூறி உள்ளனர். இதனால் கர்நாடகாவில் பைக் டாக்சிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

    கர்நாடக அரசின் இந்த உத்தரவை ஆட்டோ டிரைவர்கள் சங்கத்தினர், பெண்கள் வரவேற்றுள்ளனர்.

    • கர்நாடக இந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறநிலைய அறக்கட்டளை மசோதா 2024 நேற்று நிறைவேற்றப்பட்டது.
    • இச்சட்டம் காங்கிரஸ் அரசின் இந்து விரோத கொள்கையை காட்டுகிறது என பா.ஜ.க. கண்டனம் தெரிவித்தது.

    பெங்களூரு:

    கர்நாடகா மாநில சட்டசபையில் கர்நாடக இந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறநிலைய அறக்கட்டளை மசோதா 2024 நேற்று நிறைவேற்றப்பட்டது.

    ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் திருக்கோவில்களின் வருமானத்தில் 10 சதவீதத்தை அரசு வசூலிக்க இந்தச் சட்ட மசோதா அனுமதிக்கிறது.

    இந்நிலையில், இந்தச் சட்டம் கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசின் இந்து விரோத கொள்கையை காட்டுகிறது என கண்டனம் தெரிவித்த பா.ஜ.க, முதல் மந்திரி சித்தராமையா தலைமையிலான மாநில அரசு நிதியைத் தவறாக பயன்படுத்துகிறது என குற்றம் சாட்டியது.

    இதுதொடர்பாக, கர்நாடக பா.ஜ.க. தலைவர் விஜயேந்திர எடியூரப்பா வெளியிட்டுள்ள செய்தியில், இந்த மசோதா மூலம் காங்கிரஸ் அரசு தனது கஜானாவை நிரப்ப முயற்சிக்கிறது. மாநில அரசு ஏன் இந்துக் கோவில்களில் இருந்து வருமானம் ஈட்டப் பார்க்கிறது? தொடர்ந்து இந்து விரோத கொள்கைகளை கடைப்பிடித்து வரும் காங்கிரஸ் அரசு, தற்போது இந்துக் கோவில்களின் வருவாயை குறிவைத்துள்ளது என பதிவிட்டுள்ளார்.

    • ஹூக்கா பார்களை தடை செய்யும் மசோதாவை கர்நாடக அரசு இன்று நிறைவேற்றியது.
    • கல்வி நிறுவனங்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவில் சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்களை விற்பனை செய்யவும் தடை விதித்துள்ளது.

    கர்நாடகா மாநிலத்தில் சிகரெட் விற்பனைக்கான குறைந்தபட்ச வயது வரம்பை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    மாநிலம் முழுவதும் ஹூக்கா பார்களை தடை செய்யும் மசோதாவை கர்நாடக அரசு இன்று நிறைவேற்றியது. தடையை மீறும் குற்றவாளிகளுக்கு ஓராண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் வரை அபராதம் உட்பட கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே இயற்றப்பட்ட சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் சட்டத்தில் (COTPA) திருத்தம் செய்யப்பட்டு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்காகவும், புகையிலை தொடர்பான நோய்களைத் தடுப்பதற்காகவும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும், புகை இல்லாத சூழலை உருவாக்குவதற்காக இந்த திருத்தப்பட்ட மசோதா பொது இடங்களில் புகையிலை பொருட்களைப் பயன்படுத்துவதற்கும் தடை விதித்துள்ளது.

    சித்தராமையா தலைமையிலான கர்நாடகா அரசு, கல்வி நிறுவனங்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவில் சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்களை விற்பனை செய்யவும் தடை விதித்துள்ளது. இந்த விதியை மீறினால், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

    இம்மாதம், தெலுங்கானா அரசாங்கம் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ஹூக்கா பார்களையும் தடை செய்ய இதேபோன்ற மசோதாவை நிறைவேற்றியது. கடந்த ஆண்டு, ஹரியானா மாநிலம் முழுவதும் உள்ள ஹோட்டல்கள், உணவகங்கள், பார்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் வாடிக்கையாளர்களுக்கு ஹூக்காவை வழங்க அம்மாநில அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

    • விரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டினால், 20 மாவட்டங்களில் குடிநீர் பிரச்சனை ஏற்படும்.
    • டெல்டா மாவட்டங்கள் விவசாயத்திற்கு தண்ணீர் இன்றி பாலைவனமாகும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காவிரி பிரச்சனையாக இருந்தாலும், மேகதாது அணைப் பிரச்சனையாக இருந்தாலும் கர்நாடகத்தை ஆண்ட பாரதிய ஜனதா அரசும், காங்கிரஸ் அரசும் தமிழகத்திற்கு எதிராக செய்த துரோகங்களை அம்மாவின் அரசு அவ்வப்போது அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் எதிர்த்தது; தடுத்து நிறுத்தியது.

    தி.மு.க. அரசு பதவியேற்ற நாள்முதல், தங்கள் கூட்டாளியான காங்கிரசுடன் கூட்டணி அமைத்து தமிழக நலனை காவு கொடுத்து வருவதை அறிக்கைகள் வாயிலாகவும், சட்டசபையிலும் நான் தொடர்ந்து எடுத்துக் கூறி வந்தேன்.

    குறிப்பாக, கடந்த 14-ந்தேதி அன்று சட்டமன்றத்தில் நான், எங்களது ஆட்சிக் காலத்தில், கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவது குறித்து விவாதிக்கும் அதிகாரம் ஆணையத்திற்கு இல்லை என்றும், 2018-ம் ஆண்டு மேகதாது அணை குறித்த பிரச்சனை மத்திய நீர்வள கமிஷனின் பார்வைக்குச் சென்றபோது எனது அரசு, 5.12.2018 அன்று மத்திய நீர்வள கமிஷனின் அன்றைய இயக்குநர் மீது உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தது. இன்னும் அவ்வழக்கு நிலுவையில் உள்ளது.

    இதுகுறித்து பலமுறை நான் அறிக்கைகள் வாயிலாகவும், பேட்டிகள் வாயிலாகவும், சட்டமன்றத்திலும் விரிவாகப் பேசியும், அதற்கு பதில் அளிக்காமல், உரிய நடவடிக்கை எடுக்காமல் உள்ளது தமிழக மக்களுக்கு திமுக அரசு செய்துவரும் மிகப்பெரிய துரோகமாகும் என்பதை மீண்டும் ஒருமுறை எச்சரிக்கை செய்கிறேன்.

    ஆணையம் அதன் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டு மேகதாது அணை குறித்த பொருளை (அஜண்டாவை) 28-வது ஆணையக் கூட்டத்தில் எடுத்துக்கொண்டது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும். கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு சாதகமாக ஆணையத்தின் தலைவர் அந்தப் பொருளை அனுமதித்ததோடு, அதை மத்திய நீர்வள கமிஷனுக்கு அனுப்பியது மிகப்பெரிய தவறு. இந்த ஆணையக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளை கவனமாக அனுப்பி வைத்து அதை எதிர்க்காமல், தமிழகத்திற்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுக்க தி.மு.க. அரசு அனுமதித்தது மிகப்பெரிய துரோகமாகும்.

    காவிரி நதிநீர் 20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டினால், 20 மாவட்டங்களில் குடிநீர் பிரச்சனை ஏற்படும். டெல்டா மாவட்டங்கள் விவசாயத்திற்கு தண்ணீர் இன்றி பாலை வனமாகும்.

    மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு உடனடியாக கைவிட வேண்டும். தவறினால், தமிழகத்திற்கு துரோகத்தை செய்யத் துணியும் கர்நாடக காங்கிரஸ் அரசையும், கைகட்டி வேடிக்கை பார்க்கும் மத்திய, மாநில அரசுகளையும் கண்டித்து, அ.தி.மு.க. விவசாயிகள் மற்றும் பொதுமக்களைத் திரட்டி மாபெரும் அறப்போராட்டத்தை முன்னெடுக்கும் என்று எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கடந்த 6 ஆண்டுகளாக மேகதாது அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை கர்நாடக அரசு தீவிரப்படுத்தியிருக்கிறது.
    • எந்தப் பணிகளும் மேற்கொள்ளாமல் கர்நாடகத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்துப் பேசிய அம்மாநில கவர்னர் தாவர்சந்த் கெலாட்,''காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டப் பணிகளை விரைவுபடுத்தும் நோக்குடன், வனத்துறையிடமிருந்து எடுக்கப்படும் நிலத்திற்கு மாற்றாக வேறு நிலம் வழங்குவதற்கும், அணைக்கான நிலம் கையகப்படுத்தல் மற்றும் திட்டமிடல் பணிகளை விரைவுபடுத்துவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன'' என்று தெரிவித்திருக்கிறார்.

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கான முயற்சிகளில் கர்நாடக அரசு கடந்த 50 ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் போதிலும், கடந்த 6 ஆண்டுகளாக மேகதாது அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை கர்நாடக அரசு தீவிரப்படுத்தியிருக்கிறது. மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கையை தயாரிக்க 2018-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மத்திய அரசு அளித்த அனுமதி தான் கர்நாடகத்தின் இந்த அத்துமீறல்கள் அனைத்துக்கும் அடிப்படை ஆகும். இந்த அனுமதியைப் பயன்படுத்தி தான் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடகம் தயாரித்து, காவிரி மேலாண்மை ஆணையத்தில் தாக்கல் செய்து, அதற்கு ஒப்புதல் கேட்டுக் கொண்டிருக்கிறது.

    தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, விரிவான திட்ட அறிக்கை குறித்து விவா திக்கவும், அதனடிப்படையில் மேகதாது அணைக்கு அனுமதி அளிக்கவும் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது.

    அவ்வாறு இருக்கும் போது மேகதாது அணை கட்டுவதற்கான நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை மேற்கொள்வது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு முற்றிலும் எதிரானது ஆகும்.

    மேகதாது பகுதியில் காவிரியின் குறுக்கே அணை கட்டியே தீருவோம் என கர்நாடகம் கூறுவது அரசியலமைப்பு சட்டத்துக்கும் எதிரானது.

    மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கையை தயாரிக்க மத்திய அரசு அளித்த அனுமதி தவறு; அதை ரத்து செய்ய வேண்டும் என்று கூறித்தான் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது. வரைவு திட்ட அறிக்கைக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுவிட்டால், மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை செல்லாததாகி விடும். அதனால், மேகதாது அணை குறித்த எந்த பணிகளையும் கர்நாடக அரசு மேற்கொள்ள முடியாது.

    இதை தெரிந்து கொண்டும் அணைக்கான பணிகளை மேற்கொள்வதை அனுமதிக்க முடியாது. இந்த சிக்கலில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு, மேகதாது அணை குறித்த பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று கர்நாடகத்தை எச்சரிக்க வேண்டும்; எந்தப் பணிகளும் மேற்கொள்ளாமல் கர்நாடகத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கர்நாடகாவில் கடந்த 2003-ம் ஆண்டு பழைய ஓய்வூதியத் திட்டம் நிறுத்தப்பட்டது.
    • பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதாக முதல் மந்திரி சித்தராமையா தெரிவித்தார்.

    பெங்களூரு:

    மத்திய மற்றும் மாநில அரசின் ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். நிதிச்சுமையை காரணம் காட்டி மத்திய, மாநில அரசுகள் இதை கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றன.

    இதற்கிடையே, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் என காங்கிரஸ் கட்சி உறுதி அளித்தது.

    இந்நிலையில், 2006-ம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்த அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, முதல் மந்திரி சித்தராமையா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், கர்நாடகாவில் கடந்த 2006-ம் ஆண்டுக்கு பிறகு 13,000 பேர் அரசுப்பணியில் சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என வாக்குறுதி அளித்திருந்தோம். அதன்படி அவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளோம். இந்தத் திட்டம் 13,000 ஊழியர்களின் குடும்பங்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது என்று நம்புகிறேன். நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளோம் என பதிவிட்டுள்ளார்.

    • தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் சுமார் 30 கிலோ தங்க, வைர நகைகளை பறிமுதல் செய்தனர்.
    • கர்நாடக அரசு வசம் உள்ள தங்க நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.

    பெங்களூரு:

    சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு தனிக்கோர்ட்டு ஜெயலலிதா உள்பட 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், மற்ற மூவருக்கு தலா ரூ.10 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், தனிக்கோர்ட்டின் தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது. இதற்கு எதிராக கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. பெங்களூரு தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்து தீா்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு வருவதற்கு முன்பே ஜெயலலிதா மரணம் அடைந்ததை அடுத்து அவரது பெயர் தீர்ப்பில் இருந்து நீக்கப்பட்டது. மற்ற 3 பேரும் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சிறை தண்டனையை அனுபவித்தனர்.

    இந்த வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் சுமார் 30 கிலோ தங்க, வைர நகைகளை பறிமுதல் செய்தனர். ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலத்தை கைப்பற்றினர். அந்த தங்க நகைகள் தற்போது கர்நாடக அரசின் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடக்கோரி பெங்களூரு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த மனு அந்த சிறப்பு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி மோகன், இந்த வழக்கின் செலவு தொகை ரூ.5 கோடியை கர்நாடக அரசுக்கு வழங்க வேண்டும் என்றும், அதை வங்கி வரைவோலையாக (டி.டி.) வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

    மேலும் கர்நாடக அரசு வசம் உள்ள தங்க நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இவற்றை பெற தமிழக போலீஸ் துறை முதன்மை செயலாளர் கோர்ட்டில் நேரில் ஆஜராகி பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அவற்றை ஏலம் விட்டு அபராதத்தை செலுத்த வேண்டும், வழக்கில் தொடர்புடைய நிலத்தின் மதிப்பை விரைவாக தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கின் அடுத்த விசாரணை வருகிற பிப்ரவரி மாதம் 21-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, "ஜெயலலிதாவின் நகை உள்ளிட்ட பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்கும்படி பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதில் எனக்கு உடன்பாடில்லை.

    நான் கர்நாடக அரசின் சட்டத்துறையை அணுகி, இந்த உத்தரவுக்கு எதிராக மனு தாக்கல் செய்யுமாறு வற்புறுத்த முடிவு செய்துள்ளேன். வழக்கு விசாரணை இங்கு நடைபெற்று கொண்டிருக்கும்போது, இங்கு தான் அந்த பொருட்களை ஏலம் விட வேண்டும்" என்றார்.

    • தங்களால் தண்ணீர் திறந்துவிட முடியாது என்ற கருத்தை கர்நாடகா அரசு முன்வைத்தது.
    • கர்நாடகா 14 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று தமிழகம் கோரிக்கை விடுத்திருந்தது.

    புதுடெல்லி:

    டெல்லியில் இன்று காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 91-வது கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது.

    காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் தலைவர் வினித் குப்தா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநில அதிகாரிகள் காணொலி வாயிலாக பங்கேற்றனர்.

    4 நீர்த்தேக்கங்களில் 52.84 சதவீதமாக மொத்த வரத்து குறைந்துள்ளது. இதனால் தங்களால் தண்ணீர் திறந்துவிட முடியாது என்ற கருத்தை கர்நாடகா அரசு முன்வைத்தது.

    கர்நாடகா 14 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று தமிழகம் கோரிக்கை விடுத்திருந்தது.

    இருதரப்பு கருத்துக்களையும் கேட்டுக்கொண்ட காவிரி ஒழுங்காற்றுக்குழு, டிசம்பர் இறுதி வரை தமிழகத்திற்கு 3128 கனஅடி வீதமும், ஜனவரி மாதம் 1030 கனஅடி வீதமும் நீர் திறக்க கர்நாடகாவிற்கு பரிந்துரை செய்துள்ளது.

    • கடந்த மாதம் மைசூருவில் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கும் கிரகலட்சுமி திட்டத்தை ராகுல்காந்தி தொடங்கி வைத்தார்.
    • காங்கிரஸ் ஆட்சி அமைய அருள்பாலித்ததுடன், உத்தரவாத திட்டங்களை அமல்படுத்தவும் சாமுண்டீஸ்வரி அம்மன் உறுதுணையாக இருந்துள்ளார்.

    பெங்களூரு:

    கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சி அமைந்துள்ளது. இந்த அரசு பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயண திட்டம், 200 யூனிட் இலவச மின்சார திட்டம், 10 கிலோ ரேஷன் அரிசி வழங்கும் திட்டம், இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கும் கிரகலட்சுமி திட்டம், வேலையில்லாத பட்டதாரிகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டம் என 5 திட்டங்களை அமல்படுத்துவதாக அறிவித்து, அமல்படுத்தியுள்ளது.

    இதில் கடந்த மாதம் மைசூருவில் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கும் கிரகலட்சுமி திட்டத்தை ராகுல்காந்தி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி மாநிலம் முழுவதும் 1 கோடியே 20 லட்சம் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்ட தொடக்க விழாவையொட்டி முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோர் சாமுண்டிமலைக்கு சென்று சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு தலா ரூ.2 ஆயிரம் காணிக்கையாக வழங்கியிருந்தனர்.

    இந்த நிலையில் மைசூருவை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.சி. தினேஷ் கூலிகவுடா சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோருக்கு ஒரு கோரிக்கை கடிதம் எழுதி வைத்துள்ளார்.

    அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் ஆட்சி அமையவும், 5 உத்தரவாத திட்டங்களை செயல்படுத்தவும் வேண்டி நீங்கள் இருவரும் சாமுண்டீஸ்வரி அம்மனை தரிசனம் செய்தனர். அதன்படி மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைய அருள்பாலித்ததுடன், உத்தரவாத திட்டங்களை அமல்படுத்தவும் சாமுண்டீஸ்வரி அம்மன் உறுதுணையாக இருந்துள்ளார்.

    அதுமட்டுமல்லாமல் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்ட தொடக்க விழாவின் போதும் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு நீங்கள் ரூ.2 ஆயிரம் வழங்கினீர்கள். எனவே கிரகலட்சுமி திட்டத்தின் கீழ் மாதந்தோறும் அரசு சார்பில் ரூ.2 ஆயிரம் ஊக்கத்தொகையை சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    இந்த கோரிக்கை கடிதத்தை படித்து பார்த்தவுடன் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், உடனே இந்த கோரிக்கையை நிறைவேற்றும்படி கர்நாடக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி லட்சுமி ஹெப்பால்கருக்கு பரிந்துரை செய்து உத்தரவிட்டுள்ளார்.

    ×