இந்தியா
பேருந்து விபத்து

திருப்பதி அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து- உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு

Published On 2022-03-27 03:48 GMT   |   Update On 2022-03-27 09:20 GMT
உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்க ஆந்திர முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
சித்தூர்:

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் தர்மாவரத்தில் இருந்து  சித்தூர் நகரி அருகே உள்ள கிராமத்திற்கு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 55 பேர்  நேற்று மாலை தனியார் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். 

பக்ராபேட்டை என்ற இடத்தில் சென்ற போது அந்த பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த 50 அடி ஆழம் கொண்ட பள்ளதாக்கு பகுதியில் விழுந்தது. நேற்றிரவு நிகழ்ந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 45 பேர் காயமடைந்தனர்.  

தகவல் அறிந்து விரைந்து சென்ற  போலீசார், மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.  இரவு நேரமானதால் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டன. அதிகாலையிலும் மீட்பு பணி தொடர்ந்தது. உயிர் பிழைத்தவர்கள் பள்ளத்தாக்கில் இருந்து கயிறுகள் மூலம் மீட்கப்பட்டனர்.

டிரைவரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதாகவும், காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்றும், திருப்பதி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பேருந்து கிளீனர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தால் இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.  

இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம்,
காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்று ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News