இந்தியா
குமாரசாமி

காங்கிரஸ் பாதயாத்திரையால் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: குமாரசாமி குற்றச்சாட்டு

Published On 2022-01-19 03:01 GMT   |   Update On 2022-01-19 03:01 GMT
மேகதாதுவில் அணைகட்ட வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை என்ற பெயரில் திருவிழா நடத்தி இருந்தனர். அந்த பாதயாத்திரை அரசின் கொரோனா விதிமுறைகளை மீறி நடத்தப்பட்டு இருந்தது.
பெங்களூரு :

பெங்களூருவில் உள்ள ஜனதாதளம் (எஸ்) கட்சி அலுவலகத்தில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்த சந்தர்ப்பத்தில் பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்க கூடாது. 15 முதல் 20 நாட்கள் பள்ளிகளை மூடுவது நல்லது. இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்கள் ஊரடங்குக்கு பா.ஜனதாவை சேர்ந்தவர்களே மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இரவு நேர ஊரடங்கின் போது வழக்கம் போல வாகனங்கள் செல்கின்றன. இரவு நேர ஊரடங்கால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சாத்தியமில்லை. இரவு நேர ஊரடங்கு தேவையற்றது. இரவு நேர ஊரடங்கால் கொரோனா பரவல் குறைந்திருப்பதற்கான வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். அதுபோல, கொரானா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அரசு அமல்படுத்தி உள்ள வார இறுதி ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பயன் பற்றியும் பரிசீலனை செய்ய வேண்டியது அவசியமாகும்.

மேகதாதுவில் அணைகட்ட வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை என்ற பெயரில் திருவிழா நடத்தி இருந்தனர். அந்த பாதயாத்திரை அரசின் கொரோனா விதிமுறைகளை மீறி நடத்தப்பட்டு இருந்தது.

காங்கிரஸ் பாதயாத்திரையால் தான் ராமநகர் மாவட்டம் மட்டுமின்றி, கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும், அவர்களுக்கு பெரிய அளவில் எந்த உடல்நலக்குறைவும் ஏற்படுவதில்லை. இது மகிழ்ச்சியான செய்தியாகும்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.
Tags:    

Similar News