செய்திகள்
கொலையான யோகிதா வார்தக், கைதான அனில் துபே

மும்பை அருகே பிரபல தனியார் வங்கிக்குள் புகுந்து பெண் மேலாளர் படுகொலை

Published On 2021-07-31 01:48 GMT   |   Update On 2021-07-31 01:48 GMT
மும்பை அருகே பிரபல தனியார் வங்கிக்குள் புகுந்து கொள்ளையடித்து விட்டு, உதவி பெண் மேலாளரை கொலை செய்த முன்னாள் மேலாளரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
மும்பை :

மும்பையை அடுத்த பால்கர் மாவட்டம் விரார் கிழக்கில் ரெயில் நிலையம் அருகில் ஐ.சி.ஐ.சி.ஐ. தனியார் வங்கி கிளை உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு பணி முடிந்து ஊழியர்கள் வீட்டிற்கு புறப்பட்டு விட்டனர். வங்கியின் ஷட்டரை பாதி அடைத்துவிட்டு உள்ளே பெண் பணியாளர்களான உதவி மேலாளர் யோகிதா வார்தக்(வயது35), காசாளர் ஷரத்தா (32) ஆகியோர் மட்டும் வேலை பார்த்து கொண்டு இருந்தனர். மாத இறுதி நாட்கள் என்பதால் இவர்கள் அதிக நேரம் வேலை பார்த்து கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் இரவு 8.30 மணி அளவில் 2 பேர் வங்கிக்குள் நுழைந்தனர். அவர்கள் கத்தி முனையில் மிரட்டி 2 பேரையும் லாக்கர்களை திறக்க வைத்தனர். மேலும் அங்கு இருந்த பணம், நகைகளை அள்ளி கொண்டு தப்பிச்செல்ல முயன்றனர்.

அப்போது உதவி மேலாளர், காசாளர் இருவரும் திருடன், திருடன் என கூச்சல் போட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் 2 பேரையும் கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில் அவர்கள் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் அங்கு ஓடிவந்தனர். அவர்கள் தப்பிஓட முயன்ற 2 பேரில் ஒருவனை துரத்தி பிடித்தனர். மேலும் ரத்த வெள்ளத்தில் கிடந்த உதவி மேலாளர், காசாளரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் உதவி மேலாளர் யோகிதா வார்தக் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அவரை பரிசோதித்த டாக்டர்கள் கூறினர். காசாளருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் போலீசார் பொதுமக்களிடம் பிடிபட்ட கொள்ளையனை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் அதே வங்கி கிளையில் மேலாளராக வேலை பார்த்த அனில் துபே (35) என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. தற்போது அவர் நைகாவ் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

மேலும் விசாரணையில், இந்த பயங்கர சம்பவத்துக்கான காரணத்தை அனில் துபே போலீசாரிடம் தெரிவித்தார். அவருக்கு ரூ.1 கோடி கடன் இருந்து உள்ளது. அதை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் தான் வேலை பார்த்த வங்கி கிளையிலேயே கொள்ளையடிக்க திட்டம் போட்டுள்ளார். அந்த வங்கி கிளையில் வேலை பார்த்ததால் அதன் செயல்பாடுகள், லாக்கர் உள்ள இடம் போன்றவை அவருக்கு நன்றாக தெரியும் என்பதால், கூட்டாளியுடன் அங்கு சென்று கொலை, கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீசார் கொலை, கொலை முயற்சி, கொள்ளை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். தப்பிஓடிய அனில் துபேவின் கூட்டாளியையும் வலைவீசி தேடிவருகின்றனர்.

கடனை திருப்பி அடைக்க முன்னாள் மேலாளரே வங்கி கொள்ளை முயற்சியில், பெண் அதிகாரியை கொலை செய்த சம்பவம் விரார் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News