செய்திகள்
ஆன்லைன் மோசடி

கருப்பு பூஞ்சை நோய்க்கு ஆன்லைனில் மருந்து வாங்க முயன்று ரூ.79 ஆயிரத்தை இழந்த என்ஜினீயர்

Published On 2021-05-28 03:05 GMT   |   Update On 2021-05-28 03:05 GMT
கருப்பு பூஞ்சை நோய்க்கு ஆன்லைனில் மருந்து வாங்க முயன்று என்ஜினீயர் ரூ.79 ஆயிரத்தை இழந்த சம்பவம் பெங்களூருவில் நடந்து உள்ளது. இதுதொடர்பாக மர்மநபர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு :

பெங்களூரு ஜே.பி.நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் ஆயுஷ் அம்ரித் போர்வால். இவர் தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் ஆயுசின் உறவினர் ஒருவர் சமீபத்தில் கொரோனாவில் இருந்து மீண்டு இருந்தார். ஆனால் அவர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் தனது உறவினரின் சிகிச்சைக்காக ஆம்போடெரிசின் மருந்தை வாங்க ஆன்லைன் மூலம் ஆயுஷ் முயற்சி செய்து உள்ளார்.

அப்போது இணையதளத்தில் குறிப்பிடப்பட்டு இருந்த செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசிய ஆயுஷ் தானுக்கு ஆம்போடெரிசின் மருந்து வேண்டும் என்று கேட்டு உள்ளார்.

அப்போது எதிர்முனையில் பேசிய மர்மநபர் ரூ.79 ஆயிரம் அனுப்பினால் 2 மணி நேரத்தில் மருந்தை வீட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறியுள்ளார். இதனால் அந்த மர்மநபர் கூறிய வங்கிக்கணக்குக்கு ரூ.79 ஆயிரத்தை ஆயுஷ் அனுப்பி வைத்து உள்ளார்.

ஆனால் நீண்ட நேரம் ஆனபோதிலும் மருந்து வரவில்லை. இதனால் அந்த செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு ஆயுஷ் கேட்க முயன்றார். அப்போது அந்த செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் கருப்பு பூஞ்சைக்கு மருந்து தருவதாக கூறி மர்மநபர் தன்னிடம் ரூ.79 ஆயிரத்தை மோசடி செய்ததை ஆயுஷ் உணர்ந்தார்.

அவர் இதுகுறித்து ஜே.பி.நகர் போலீஸ் நிலையத்தில் மர்மநபர் மீது புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags:    

Similar News