செய்திகள்
பசவராஜ் பொம்மை

கொரோனா தடுப்பூசியை கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை: பசவராஜ் பொம்மை

Published On 2021-05-25 02:58 GMT   |   Update On 2021-05-25 02:58 GMT
தனியார் மருத்துவமனைகள் அதிக விலைக்கு தடுப்பூசியை விற்பனை செய்வதை தடுக்க மத்திய அரசு புதிய விதிமுறைகளை அமல்படுத்த வேண்டியது அவசியம்.
பெங்களூரு :

போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. முன்பு ரெம்டெசிவிர் மருந்தை சிலர் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்றனர். அத்தகையவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இப்போதும் தடுப்பூசி கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக அரசுக்கு புகார்கள் வருகின்றன. இவ்வாறு தடுப்பூசியை கள்ளச்சந்தையில் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தடுப்பூசியை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இதை அரசு சகித்துக்கொள்ளாது. தடுப்பூசி தகுதியானவர்களுக்கு முறைப்படி கிடைக்க வேண்டும். இதை கள்ளச்சந்தையில் யாரும் விற்பனை செய்ய முயற்சி செய்யக்கூடாது. கர்நாடகத்தில் கொரோனா நோயாளிகளுக்கான மருத்துவ படுக்கை பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது.

வென்டிலேட்டர் தட்டுப்பாடு பிரச்சினை இருக்கிறது. இந்த பிரச்சினைக்கு படிப்படியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகள் அதிக விலைக்கு தடுப்பூசியை விற்பனை செய்வதை தடுக்க மத்திய அரசு புதிய விதிமுறைகளை அமல்படுத்த வேண்டியது அவசியம்.

கர்நாடகத்தில் இன்று (நேற்று) முதல் 2-வது கட்ட ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

தேவையின்றி சாலைகளில் சுற்றுபவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வருகிறார்கள். அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்படுகிறது. கிராமப்புறங்களில் ஊரடங்கு முழுமையான அளவில் பின்பற்றப்படுகிறது. நகரங்களில் தான் சிலர் இதை மதிக்காமல் சுற்றுகிறார்கள். எக்காரணம் கொண்டும் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது.

சில மாவட்டங்களில் 3, 4 நாட்கள் தொடர்ந்து முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. மார்க்கெட் உள்ள பகுதிகளில் மக்கள் அதிகம் கூடுகிறார்கள். அதனால் மார்க்கெட்டுகளை வெளிப்புறங்களுக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. போலீசாரின் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

50 வயதுக்கு மேற்பட்ட போலீசாருக்கு கொரோனா தடுப்பு பணியில் இருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் வேறு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். தலைநகர் பெங்களூருவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரமாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
Tags:    

Similar News