செய்திகள்
மந்திரி சுதாகர்

கருப்பு பூஞ்சை நோயை கண்டு பயப்பட தேவை இல்லை: மந்திரி சுதாகர்

Published On 2021-05-22 05:06 GMT   |   Update On 2021-05-22 05:06 GMT
இந்த கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்து மாநில அரசிடம் தற்போது குறைவாக தான் உள்ளது. இந்த மருந்தை அதிகளவில் கர்நாடகத்திற்கு அனுப்புமாறு மத்திய அரசிடம் கேட்டுள்ளோம்.
பெங்களூரு :

சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தாவணகெரேயில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் சில பகுதிகளில் கருப்பு பூஞ்சை நோய் பரவியுள்ளது. இதுகுறித்து சிலர் வதந்திகளை பரப்புகிறார்கள். இந்த நோயை கண்டு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. இந்த நோய் பரவ பல்வேறு காரணங்கள் உள்ளன. மிக அதிகமான ஸ்டிராய்டு மருந்து எடுத்துக் கொள்வது, அதிகளவில் ஆக்சிஜன் பயன்பாடு, அதிக நாட்களில் ஐ.சி.யு. வார்டில் சிகச்சை பெறுவது, சர்க்கரை நோய், சிறுநீரக பிரச்சினை, புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்பு உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.

அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அவர்களை இந்த கருப்பு பூஞ்சை நோய் தாக்க வாய்ப்பு உள்ளது. இந்த நோய் பரவல், அவற்றுக்கான சிகிச்சை முறைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வழங்க ஒரு நிபுணர் குழுவை அமைத்துள்ளோம். அந்த குழு இன்று (அதாவது நேற்று) அறிக்கை வழங்கும். கொரோனாவால் அதிக பாதிப்புக்கு ஆளானவர்களின் உடல்நிலையை பரிசோதனை செய்யும்படி டாக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இந்த கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்து மாநில அரசிடம் தற்போது குறைவாக தான் உள்ளது. இந்த மருந்தை அதிகளவில் கர்நாடகத்திற்கு அனுப்புமாறு மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். தேவையான அளவுக்கு மருந்துகளை அனுப்புவதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

இந்த கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு அனைத்து மாவட்ட ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம். அதனால் இந்த நோயை கண்டு யாரும் ஆதங்கப்பட தேவை இல்லை. கொரோனா 2-வது அலை சில மாவட்டங்களை தவிர்த்து பெரும்பாலான பகுதிகளில் குறைய தொடங்கியுள்ளது.

இது ஆறுதல் அளிப்பதாக உள்ளது. மாநில அரசு மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகள் மற்றும் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு காரணமாக இது சாத்தியமாகியுள்ளது. இதே போல் பொதுமக்கள் நல்ல முறையில் ஒத்துழைப்பு கொடுத்தால் கொரோனா 2-வது அலையை முழுமையாக கட்டுப்படுத்திவிட முடியும்.

இவ்வாறு சுதாகர் கூறினார்.

முன்னதாக தாவணகெரே அரசு ஆஸ்பத்திரியில் மந்திரி சுதாகர் ஆய்வு நடத்தினார். பின்னர், அரசு அதிகாரிகளுடன் மந்திரி சுதாகர் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
Tags:    

Similar News