செய்திகள்
செல்போன் தடை

கேரள கவர்னர் மாளிகை, தலைமை செயலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் செல்போன் பயன்படுத்த தடை

Published On 2021-05-14 10:25 GMT   |   Update On 2021-05-14 10:25 GMT
கவர்னர் மாளிகை, தலைமை செயலகம் மற்றும் மாநில ஐகோர்ட்டு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் பணியில் கவனக்குறைவாக இருப்பதாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது.

திருவனந்தபுரம்:

கேரளா மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு உள்ளது.

மாநிலம் முழுவதும் போலீசார் ஊரடங்கை மீறுவோரை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். திருவனந்தபுரம், எர்ணாகுளம் பகுதியில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் இங்கு கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக திருவனந்தபுரத்தில் உள்ள கவர்னர் மாளிகை, தலைமை செயலகம் மற்றும் மாநில ஐகோர்ட்டு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் பணியில் கவனக்குறைவாக இருப்பதாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது.

குறிப்பாக இந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் போலீசார் தனியாக சென்றும், மோட்டார் சைக்கிள்களில் இருந்தபடியும் செல்போன் பார்த்து கொண்டிருப்பதாக கூறப்பட்டது.

செல்போன் பயன்படுத்துவதால் இவர்கள் பணியில் கவனக்குறைவாக இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக கேரள போலீஸ் ஏ.டி.ஜி.பி. மனோஜ் ஆபிரகாம் இப்பிரச்சினை குறித்து விசாரணை நடத்தினார். பின்னர் அவர் இது தொடர்பாக அதிரடி நடவடிக்கை எடுத்தார்.

அதன்படி கவர்னர் மாளிகை, தலைமை செயலகம், ஐகோர்ட்டு வளாகங்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் போலீசார் செல்போன் பயன்படுத்த கூடாது என்று உத்தரவிட்டார். உத்தரவை மீறும் போலீசார் மீது உயர் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். இது போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News