செய்திகள்
குமாரசாமி, டிகே சிவக்குமார்,

எனக்கு யாரும் கட்டுப்பாடு விதிக்க முடியாது: டி.கே.சிவக்குமார்

Published On 2021-02-25 03:30 GMT   |   Update On 2021-02-25 03:30 GMT
குறிப்பிட்ட நபர்களுடன் பேசக்கூடாது என்று எனக்கு எந்த விதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. யாரும் எனக்கு கட்டுப்பாடு விதிக்க முடியாது என்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், குமாரசாமிக்கு பதில் அளித்துள்ளார்.
பெங்களூரு :

மைசூரு மாநகராட்சி மேயர் தேர்தலில் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றது. மேயர் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தன்னுடன் பேசுவதற்கு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கட்டுப்பாடு விதித்துள்ளார் என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி குற்றச்சாட்டு கூறி இருந்தார்.

இதுகுறித்து பெங்களூருவில் நேற்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

மைசூரு மாநகராட்சி மேயர் பதவியை காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து கைப்பற்றி உள்ளது. இதற்கு முன்பு மேயர் பதவியை காங்கிரஸ் 2 ஆண்டுகளும், ஜனதாதளம் (எஸ்) கட்சி 3 ஆண்டுகள் மேயர் பதவி வகிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தது. அதன்படி, ஜனதாதளம் (எஸ்) கட்சி நடந்து கொள்ளும். தற்போது மேயர் பதவியை ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கும், துணை மேயர் பதவி காங்கிரசுக்கும் கிடைத்துள்ளது.

மாநிலத்தில் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் கூட்டணி முறிந்தது பற்றியோ, அதற்கு காரணமானவர்கள் குறித்தோ தற்போது எதுவும் பேச விரும்பவில்லை. நான் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை. அனைத்து தரப்பினருடன் நான் பேசி வருகிறேன். குறிப்பிட்ட நபர்களுடன் பேசக்கூடாது என்று எனக்கு எந்த விதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. யாரும் எனக்கு கட்டுப்பாடு விதிக்க முடியாது.

சுயேச்சை எம்.எல்.ஏ.வான சரத் பச்சேகவுடா காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். ஆனால் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வாக அவர் செயல்பட சட்டத்தில் இடமில்லை. ஒரு தொண்டர் போல சரத் பசசேகவுடா இருக்கலாம். சுயேச்சை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்று தேசிய கட்சியுடன் சேர முடியாது. சுயேச்சை எம்.எல்.ஏ.வாக சரத் பச்சேகவுடா காங்கிரசுக்கு ஆதரவு அளிக்கலாம். அவரது ஆதரவாளர்களும் காங்கிரசில் சேரலாம்.

சிக்பள்ளாப்பூரில் நடந்த வெடி விபத்து சம்பவம் குறித்து நியாயமான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். தவறு செய்தவர்கள் மீது எந்த விதமான பாரபட்சமும் இன்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலத்தில் தொடர்ந்து நடைபெறும் சட்டவிரோத கல்குவாரி மற்றும் வெடி விபத்து சம்பவங்களை தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News