செய்திகள்
அனுராக் தாகூர்

புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகள் வருமானம் இரு மடங்காகும்: அனுராக் தாகூர்

Published On 2021-02-13 02:37 GMT   |   Update On 2021-02-13 02:37 GMT
புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகள் வருமானம் இரு மடங்காகும் என்று மாநிலங்களவையில் மத்திய மந்திரி அனுராக் தாகூர் கூறினார்.
புதுடெல்லி :

பாராளுமன்ற மாநிலங்களவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் மத்திய நிதித்துறை ராஜாங்க மந்திரி அனுராக் தாகூர் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இவர்கள் எல்லோரும் (எதிர்க்கட்சியினர்) வேளாண் சட்டங்கள் கருப்பு சட்டங்கள் என்று சொல்கிறார்கள். யாருடைய சிந்தனைகள் கருப்பாக இருக்கிறதோ, அவர்கள்தான் இவற்றை கருப்பு சட்டங்கள் என்று சொல்கிறார்கள்.

சந்தைகள் முடிவுக்கு வந்து விடும் என்று நீங்கள் (எதிர்க்கட்சிகள்) சொல்கிறீர்கள். குறைந்தபட்ச ஆதரவு விலை முறை முடிவுக்கு வந்து விடும் என்று எங்கே எழுதப்பட்டுள்ளது? சந்தைகள் முடிவுக்கு வந்து விடும் என்று வேளாண் சட்டங்களில் எங்கேனும் எழுதி இருக்கிறது என்று சொல்கிற தைரியம் எந்தவொரு காங்கிரஸ் தலைவர் அல்லது எதிர்க்கட்சி தலைவருக்கு இருக்கிறதா? உங்கள் அரசியலுக்காக இந்த எளிய விவசாயிகளை பயன்படுத்தாதீர்கள். விவசாயிகள் வருமானத்தை இரு மடங்காக்கும் கடினமான வேலையை நாங்கள் கையில் எடுத்திருக்கிறோம். நாங்கள் அதை செய்வோம்.

சந்தைகள் முடிவுக்கு வந்து விடும் என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் இந்த சந்தை முறையை மேலும் வலுப்படுத்துவோம் என்றுதான் நாங்கள் சொல்கிறோம். உங்களிடம் வாதம் இல்லை. உண்மைகள் இல்லை. நீங்கள் மாறுபாடுகளை ஏற்படுத்தத்தான் விரும்புகிறீர்கள்.

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை விட இந்த அரசில் வேளாண் உற்பத்தி பொருட்கள் கொள்முதல் அதிகரித்து இருக்கிறது.

வேளாண் உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்கத்தான் மத்திய பட்ஜெட்டில் வேளாண்மை செஸ் (கூடுதல் வரி) விதிக்கப்பட்டுள்ளது.

அழுகும் பொருட்களுக்கு வேளாண் கட்டமைப்பு தேவைப்படுகிறது. இதை நீங்கள் ஏன் கடந்த 65 ஆண்டுகளில் கொண்டு வரவில்லை? மோடி அரசு உள்கட்டமைப்பு கூடுதல் வரியை கொண்டு வந்துள்ளது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயராது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போதுதான் விமான நிலையங்கள் தனியார் மயமாக்கம் தொடங்கியது. உங்கள் ஆட்சியில்தான் ஏர் இந்தியா நிறுவனம் அழிக்கப்பட்டது. இப்போது ஒவ்வொரு ஆண்டும் இதற்காக வரி செலுத்துவோரின் பணம் ரூ.6 ஆயிரம் கோடி கொடுக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்கள். நாட்டின் ஏழை, எளிய மக்களின் நலன்களுக்காக அல்ல. என்ன செய்யப்பட வேண்டும் என்பதை தீர்மானியுங்கள்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது பணவீக்கம் 11, 12 சதவீதமாக இருந்தது. இப்போது அது 4 சதவீதமாக குறைந்துள்ளது. நிதிப்பற்றாக்குறை 5, 6 சதவீதமாக இருந்தது. இப்போது அது 3.5 சதவீதத்துக்கும் குறைவாக வந்துள்ளது.

நாட்டை விட்டு ஓடியவர்களுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதான், வங்கிகளை கடன் கொடுக்க வைத்தது. உங்கள் ஆட்சியில் ஊழலுக்கு மேல் ஊழல் வந்ததே, இது ஏன்? மோடியின் 7 ஆண்டு ஆட்சி நிறைவில், எந்த மந்திரிகள் மீதும் 7 பைசா ஊழல் குற்றச்சாட்டை யாரும் சுமத்த முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News