search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனுராக் தாகூர்"

    • விவசாயிகள்- மத்திய அரசு இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.
    • தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டால்தான் தீர்வு காணப்படும்.

    விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனால் நேற்று முதல் டெல்லிக்குள் நுழைய முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் பஞ்சாப்-அரியானா, டெல்லி- பஞ்சாப், அரியானா மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ளன.

    விவசாயிகள் முன்னேற முடியாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் சுமார் ஆறு மாத காலத்திற்கு பேரணி நடத்தும் வகையில் உணவு தானியங்கள் மற்றும் எரிபொருட்களுடன் புறப்பட்டுள்ளனர். இதனால் 2020-21 போராட்டம் போன்று நீடித்துவிடும் என மத்திய அரசு நினைக்கிறது.

    இதனால் அவர்களை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. மத்திய மந்திரிகளுக்கும், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் எந்தவிதமான முடிவும் எட்டப்படவில்லை. விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து உடனடியாக சட்டம் நிறைவேற்றிட முடியாது என மத்திய வேளாண் மந்திரி அர்ஜுன் முண்டா தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் பேச்சுவார்த்தையும் மூலம் பிரச்சனைகள் தீர்க்கப்படும். அதனால் விவசாயிகள் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என மத்திய மந்திரி அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் கூறியதாவது:-

    கத்தாரில் தூக்குத்தண்டனை அறிவிக்கப்பட்ட இந்தியாவின் முன்னாள் கடற்படை வீரர்கள், பாதுகாக்கப்பட்டு பத்திரமாக இந்தியா அழைத்து வந்தது, உக்ரைன்- ரஷியா போரின்போது 27 ஆயிரம் இந்தியர்கள் கங்கா ஆபரேசன் நடவடிக்கையின் கீழ் இந்தியா அழைத்து வந்தது, கோடிக்கணக்கான இந்தியர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து திரும்பி வந்தது என இதுபோன்ற சாதனைகள் எல்லாம் பேச்சுவார்த்தைகள் மூலம் நடந்தவைகள்தான். என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால் நமது விவசாய சகோதரர்கள் பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என்பதுதான்.

    மத்திய மந்திரிகள் இரவு முழுவதும் விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டுக் கொண்டிருந்தபோது, அவர்களுடைய பிரதிநிதிகள் வெளியேறிவிட்டனர். அப்போது கூட பேச்சுவார்த்தை தொடர வேண்டும் என்றோம். ஆனால் அவர்கள் பேச்சுவார்த்தையில் தொடரவில்லை.

    பேச்சுவார்த்தை நீண்டு கொண்டே சென்று கொண்டிருக்கிறது. ஏனென்றால், அவர்கள் புதிய கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள்.

    உலக வணிக அமைப்பின் ஒரு பகுதியாக இந்தியா இருக்க அவர்கள் விரும்பவில்லை. இலவச வணிக ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள்.

    விவசாயக் கழிவுகள் எரிக்கப்படுவதை அவர்கள் சுற்றுச்சூழல் பாதிப்பு எனப் பார்க்கக் கூடாது. விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்கப்படுவதை மின்சார திருத்த மசோதாவிற்குள் கொணடு வரக்கூடாது என்கிறார்கள்.

    இதுதொடர்பாக நாங்கள் கமிட்டி அமைப்பதாக அவர்களிடம் தெரிவித்தோம். இல்லையெனில் வேளாண் மந்திரியுடன் நாங்கள் ஆலோசனை நடத்த முடியும் என்றோம். மாநிலங்கள் மற்றும் தொடர்புடையவர்களிடம் நாங்கள் பேச வேண்டும். உங்களுடைய அதிகப்படியான கோரிக்கைகளை நாங்கள் சந்திக்கும்போது, பேச்சுவார்த்தைகள் மூலமாகத்தான் தீர்வு காண முடியும்.

    நாட்டிற்கு இழப்பிற்கு ஏற்படும் வகையில் விவசாயிகள் வன்முறையில் ஈடுபடக்கூடாது. நீண்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இது என்னுடைய வேண்டுகோள்.

    காங்கிரஸ் ஆட்சி காலத்தைவிட பிரதமர் மோடி அரசு அதிக அளவிலான விளைபொருட்களை கொள்முதல் செய்துள்ளது. பட்ஜெட்டில் விவசாயத்துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    ராகுல் காந்தி குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்தல் சட்டமாக்கப்படும் என உறுதி அளிக்கிறார். மக்கள் வாக்களித்து அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளுக்கு மரியாதை அளிக்க மாட்டார்கள். எம்.எஸ்.பி. சட்டம் விவசாயிகளின் கோரிக்கைகளில் முக்கியமானதாக இருந்து வருகிறது.

    • வருமான வரித்துறையினர் சோதனையில் மூட்டை மூட்டையாக பணம் சிக்கியது.
    • 50 அதிகாரிகள், 40 மெஷின் மூலம் பணம் எண்ணப்பட்டன.

    ஒடிசாவின் பிரபல மதுபான உற்பத்தி நிறுவனமான பல்தேவ் சாஹூ குழுமத்தின் மீது வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் உற்பத்தி ஆலைகள், நிறுவனத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் இடங்களில் வருமானவரி சோதனை நடத்தப்படுகிறது.

    ஒடிசாவில் புவனேஸ்வர், சம்பல்பூர், ரூர்கேலா கந்தர்கர் மற்றும் மேற்கு வங்காளம், ஜார்க்கண்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் குறிப்பிட்ட மதுபான நிறுவனத்துடன் ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் மேல்சபை எம்.பி. தீரஜ் சாஹூவுக்கு தொடர்பு இருந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு சொந்தமான வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    கடந்த புதன்கிழமை சோதனை தொடங்கியதில் நாள்தோறும் நடத்தப்பட்ட சோதனையில் பணக்குவியல்கள் காணப்பட்டது. வெள்ளிக்கிழமை வரை நடைபெற்ற சோதனையில் வருமானவரித்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 225 கோடி பணம் போலங்கிரில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்டு எண்ணப்பட்டது. அதை தொடர்ந்து நாளுக்கு நாள் பணத்தின் எண்ணிக்கை உயர்ந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

    நேற்று முன்தினம் வரை ரூ.290 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. நாட்டில் வருமானவரி சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட மிக அதிக தொகை இதுவாகும்.

    நேற்று நடத்தப்பட்ட 5-வது நாள் சோதனை முடிவில் கைப்பற்றப்பட்ட தொகை ரூ.350 கோடியை தாண்டியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். 3 வங்கிகள், 50 அதிகாரிகள், 40 மெசின்கள் மூலம் பணம் எண்ணப்பட்டது.

    நேற்று நள்ளிரவிலும் பணத்தை எண்ணும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். ஒடிசாவில் இந்த பணி கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி மொத்தம் ரூ. 353.5 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    • காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி.யிடம் இருந்து 350 கோடி ரூபாய் பறிமுதல்.
    • மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்ட பணம் எண்ணப்பட்டு வருகிறது.

    காங்கிரஸ் எம்.பி. தீரஜ் சாகுவிற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சுமார் 350 கோடி ரூபாய்க்கும் அதிகமாக ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    பணத்தை கணக்கிடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒரே நேரத்தில் இவ்வளவு தொகை கைப்பற்றப்பட்டது இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவின் இலக்கான 400 இடங்களுடன், தற்போதைய ஊழலை மத்திய மந்திரி அனுராக் தாகூர் ஒப்பிட்டு கிண்டல் செய்துள்ளார்.

    இதுகுறித்து அனுராக் தாகூர் கூறுகையில் "மக்களிடம் இருந்து பா.ஜனதா தொடர்ந்து ஆதரவை பெற்று வருகிறது. இதற்கு பிரதமர் மோடியின் பொது நலத்திட்டம் கொள்கைதான் காரணம். அனைத்து துறைகளிலும் நாடு வளர்ச்சி அடைந்து வருகிறது.

    நாங்கள் 400 இடங்களில் வெற்றி பெறுவது குறித்து யோசித்துக் கொண்டிருக்கும்போது காங்கிரஸ் தலைவர் 400 கோடி ரூபாய்க்கும் அதிகமான ஊழலில் ஈடுபட்டுள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும் தொடக்கத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சி எப்போதும் ஊழல் மற்றும் மோசடியில் ஈடுபட்டு வருகிறது. இதனால்தான் அக்கட்சி எப்போதுமே அமக்கலாக்கத்துறை மற்றும் சிபிஐ, பணமதிப்பு இழப்பு நடவடிக்கை ஆகியவற்றிற்கு எதிராக உள்ளது" என்றார்.

    • கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.
    • அடுத்த மாதத்துடன் முடிவடையும் நிலையில் நீட்டிக்க மத்திய மந்திரி சபை ஒப்புதல்.

    கொரோனா வைரஸ் தொற்றின்போது நாடு தழுவிய ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போது ஏழை மக்கள் வாழ்வாதாரம் இன்றி சிரமப்பட்டார்கள்.

    இதனால் பிரதம மந்திரி கரிப் கல்யான் அன்ன யோஜனா என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, ஏழை மக்களுக்கு 5 கிலோ உணவு தானியம் வழங்கப்பட்டது. அதனோடு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கூடுதலாக ஐந்து கிலோ உணவு தானியங்கள் வழங்கப்பட்டது.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் பிரதம மந்திரி கரிப் கல்யான் அன்ன யோஜனா திட்டம் பலமுறை நீட்டிப்பிற்குப்பின் முடிவடைந்தது. அதன்பின் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்கப்பட்டது.

    இந்த திட்டம் வருகிற டிசம்பர் 31-ந்தேதியுடன் முடிவடைகிறது.. இந்த நிலையில் தற்போது மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் ஐந்தாண்டு ஆண்டுகளுக்கு பயனாளிகளுக்கு வழங்கப்படும்.

    நேற்று பிரதமர் மந்திரி தலைமையில் மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது. அப்போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

    மேலும், கடந்த ஐந்தாண்டுக்கு 80 கோடி பயனாளிகளுக்கு மாதந்தோறும் 5 கிலோ உணவு தானியங்கள் வழங்க 11.8 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் எனத் தெரிவித்துள்ளார்.

    • பாரம்பரிய கலைகளை வளர்த்தெடுக்கும் வித்தையை சத்குருவிடம் கற்றுக் கொள்ளலாம்.
    • இந்தாண்டு 1,000 இடங்களில் கேலோ இந்தியா விளையாட்டு மையங்கள் தொடங்கப்பட உள்ளது.

    இந்தியாவின் மாபெரும் கிராமிய விளையாட்டு திருவிழா என்ற பெருமைக்குரிய 'ஈஷா கிராமோத்சவம்' திருவிழாவின் இறுதிப் போட்டிகள் கோவை ஈஷா யோக மையத்தில் இன்று (செப்.23) மிக விமர்சையாக நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் திரு. அனுராக் தாகூர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    பரிசளிப்பு விழாவின் போது பேசும் போது, "ஈஷா கிராமோத்சவம் திருவிழாவை 2004-ம் ஆண்டு முதல் ஈஷா நடத்தி வருகிறது. இன்று நடக்கும் 15-வது கிராமோத்சவ விழாவில் நான் பங்கேற்றதை பெருமையாக கருதுகிறேன். இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் முழு நேர, தொழில்முறை விளையாட்டு வீரர்கள் கிடையாது. தின கூலி வேலைக்கு செல்பர்கள், நெசவாளர்கள், மீனவர்கள், விவசாயிகள் என பல விதமான வேலை செய்பவர்கள் தான் இப்போட்டியில் வீரர்களாக களம் கண்டு வென்றுள்ளனர். இது தான் இத்திருவிழாவின் சிறப்பு."

     

    "விளையாட்டு போட்டிகள் மட்டுமின்றி இங்கு 1,200 பேர் ஒன்று சேர்ந்து கும்மியாட்டத்தையும் ஆடி காட்டியுள்ளனர். இதுதவிர பல்வேறு கிராமிய நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகளும் இத்திருவிழாவில் நடத்தப்பட்டுள்ளது. இதை காண ஆயிரக்கணக்கில் மக்கள் வந்துள்ளீர்கள். இவை அனைத்தையும் சாத்தியப்படுத்தியுள்ள சத்குரு அவர்கள், வாழ்க்கையையே ஒரு விளையாட்டு தன்மையுடன் அணுக கூடிய கூல் குருவாக இருக்கிறார். விளையாட்டு போட்டிகள் மற்றும் கலைகளை வளர்க்கும் வித்தை அவரிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம்," என்று தெரிவித்தார்.

    மேலும் பேசிய அவர், "இந்தாண்டு 1,000 இடங்களில் கேலோ இந்தியா விளையாட்டு மையங்கள் தொடங்கப்பட உள்ளது. யோகா, களரி, மல்லர்கம்பம் உள்ளிட்ட 5 பாரம்பரிய கலைகளை கேலோ இந்தியா திட்டத்தில் சேர்த்துள்ளோம். இதேபோல், பாரம்பரிய விளையாட்டான கபடி போட்டியை ஒலிம்பிக்கில் சேர்க்கும் காலமும் கூடிய விரைவில் வரும்," என்று தெரிவித்தார்.

    இதை தொடர்ந்து சிறப்புரையாற்றிய சத்குரு, "ஈஷா கிராமோத்சவம் திருவிழா இந்தாண்டு தென்னிந்திய அளவில் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதில் 25 ஆயிரம் கிராமங்களில் இருந்து சுமார் 60 ஆயிரம் வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஜாதி, மதம், ஆண், பெண், வயது என எல்லா வேறுபாடுகளையும் கடந்து அவர்கள் ஒற்றுமையுடன் விளையாடி உள்ளனர்."

    "போட்டியிட்டு வெற்றி பெறும் நோக்கத்திற்காக நாம் இந்த கிராமோத்சவத்தை நடத்தவில்லை. இதன்மூலம், இதில் பங்கெடுத்த வீரர்கள் மற்றும் பார்வையிட்ட ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வில் உற்சாகத்தையும் கொண்டாட்டத்தையும் உருவாக்க இந்த விளையாட்டு போட்டிகளை நடத்தி உள்ளோம். வாழ்க்கையில் விளையாட்டு தன்மை இல்லாமல் போனால், வாழ்க்கை பெரும் சுமையாகிவிடும். குறிப்பாக, ஏழ்மை நிலையில் இருக்கும் கிராமப்புற மக்களின் வாழ்க்கை ஆனந்தமாகவும் உற்சாகமாகவும் இருக்க ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் அவசியம்," என்று தெரிவித்தார்.

    வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு சத்குரு மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பரிசு தொகைகள் மற்றும் பாராட்டு கேடயங்கள் வழங்கி கெளரவித்தனர். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இப்போட்டிகளை ஆயிரக்கணக்கான மக்கள் நேரில் கண்டு களித்தனர். மேலும், பார்வையாளர்கள் பங்கேற்பதற்கு பாரம்பரிய விளையாட்டு போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

    • துரதிர்ஷ்டவசமாக மணிப்பூர் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியல் கண்ணாடி மூலம் பார்க்கின்றன.
    • ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடக்கின்றன.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் மணிப்பூர் பிரச்சினையை விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் இரு அவைகளும் முதல் நாளிலேயே முடங்கின.

    எதிர்க்கட்சிகளின் இந்த செயலுக்கு மத்திய மந்திரிகள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

    பாராளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாகூர், இது தொடர்பாக கூறியதாவது:-

    துரதிர்ஷ்டவசமாக மணிப்பூர் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியல் கண்ணாடி மூலம் பார்க்கின்றன. அத்துடன் இதை அரசியலாக்கவும் முயற்சிக்கின்றன.

    மணிப்பூர் நிலைமை குறித்து விவாதிக்க தயார் என நாங்கள் கூறிவிட்டோம். ஆனால் இது குறித்து விவாதிக்காமல் எதிர்க்கட்சிகள் ஓட்டம் எடுக்கின்றன.

    ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடக்கின்றன. ஆனால் சோனியா, ராகுல் மற்றும் எதிர்க்கட்சிகள் மவுன பார்வையாளர்களாக கடந்து விடுகின்றன. ஒரேயொரு மாநிலத்துக்காக (மணிப்பூர்) கண்ணீர் வடிக்கின்றனர்.

    பெண்களுக்கு எதிரான குற்றங்களில் நீங்கள் எப்படி மாநிலங்களுக்கு இடையே பாகுபாடு காட்ட முடியும்? பெண்களை அரசியல் ஆயுதமாக மட்டுமே நீங்கள் பார்க்கிறீர்கள்.

    மணிப்பூர் விவகாரத்தை விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் விவாதிக்காமல் ஏன் ஓடுகிறீர்கள்? ராஜஸ்தானில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு சோனியா, ராகுல் ஆகியோரும் பதிலளிக்க வேண்டும்.

    இவ்வாறு அனுராக் தாகூர் தெரிவித்தார்.

    மத்திய மந்திரி பியூஸ் கோயல் கூறுகையில், 'மணிப்பூர் பிரச்சினையில் விவாதத்துக்கு தயாராக இருப்பதாக அரசு தெளிவாக கூறியபோதும், காங்கிரசும் பிற எதிர்க்கட்சிகளும் பாராளுமன்ற அலுவல்களை முடக்கியுள்ளன. சபையை செயல்பட விடக்கூடாது என்ற முடிவோடுதான் அவர்கள் வந்துள்ளனர் என்பது எதிர்க்கட்சிகளின் இந்த அணுகுமுறையில் இருந்து தெரிகிறது' என குற்றம் சாட்டினார்.

    மேற்கு வங்காள உள்ளாட்சி தேர்தல் வன்முறை மற்றும் சத்தீஷ்கார், ராஜஸ்தானில் நடைபெறும் துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் காரணமாக எதிர்க்கட்சிகள் மனதில் கவலை இருக்கலாம் என்றும் அவர் சாடினார்.

    இதைப்போல மணிப்பூர் பிரச்சினையில் பாராளுமன்றத்தை முடக்கிய எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜனதாவும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

    இது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறும்போது, 'இன்று நாம் ஜூலை மாதத்தில் இருக்கிறோம். ஆனால் மே முதல் வாரத்தில் நடந்த ஒரு சம்பவம், பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முந்தைய நாள் டுவிட்டரில் வெளியாகி இருக்கிறது. இதன் மர்மம் தொடர்பாக எனது மனதில் பல கேள்விகள் எழுகின்றன' என தெரிவித்தார்.

    மேலும் அவர், 'மணிப்பூர் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இதனால் நாங்கள் அனைவரும் கவலையில் ஆழ்ந்துள்ளோம். ஆனால் இந்த விவகாரத்தை விவாதிக்க தயாராக இருக்கிறோம் என மத்திய மந்திரிகள் பாராளுமன்றத்தில் அறிவித்தபோதும், காங்கிரசும், எதிர்க்கட்சிகளும் விவாதத்துக்கான விதிகளுக்கு வாதம் செய்கிறார்கள். அப்படியானால் இந்த சம்பவங்கள் உங்களுக்கு முக்கியமில்லை, விதிகள்தான் முக்கியமா' என்றும் கேள்வி எழுப்பினார்.

    • மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் கொட்டும் பனியில் உற்சாகமாக கிரிக்கெட் விளையாடினார்.
    • அனுராக் தாகூர் விளையாடும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    ஸ்ரீநகர்:

    கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகள் காஷ்மீரில் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கும் விளையாட்டு போட்டிகள் பிப்ரவரி 10-ந்தேதி வரை கடும் பனிப்பொழிவு நிலவும் குல்பர்கில் நடைபெறுகிறது.

    இதில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரத்து 600 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

    முன்னதாக போட்டிகளை முன்னிட்டு, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் கொட்டும் பனியில் உற்சாகமாக கிரிக்கெட் விளையாடினார்.

    அனுராக் தாகூர் விளையாடும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • கடந்த 2014-ம் ஆண்டு முதல் கலவரத்தின் மூலமாக நிகழும் வன்முறைகள் 80 சதவீதம் குறைந்துள்ளது.
    • ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத நடவடிக்கை 168 சதவீதம் குறைந்துள்ளது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை மந்திரி அனுராக் தாகூர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    பிரதமர் நரேந்திர மோடி அரசு பயங்கரவாதத்திற்கு எதிரான ஜீரோ சகிப்புத்தன்மை கொள்கையைக் கொண்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட தீவிரமான நடவடிக்கைகள் உறுதியான பலனைத் தந்துள்ளன.

    உரி தாக்குதலுக்கு எதிராக 2016-ம் ஆண்டு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது. 2019-ம் ஆண்டு நிகழ்ந்த புல்வாமா குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பதிலடியாக பாலகோட் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது.

    கடந்த 2014-ம் ஆண்டு முதல் கலவரத்தின் மூலமாக நிகழும் வன்முறைகள் 80 சதவீதம் குறைந்துள்ளது. பொதுமக்களின் இறப்பு விகிதம் 89 சதவீதமாக குறைந்துள்ளது, 6,000 போராளிகள் சரணடைந்துள்ளனர்.

    பிரதமர் மோடி ஆட்சியின் கீழ் ஜம்மு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத நடவடிக்கை 168 சதவீதம் குறைந்துள்ளது. பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளிக்கும் குற்றம் 94 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை இடதுசாரி தீவிரவாத நடவடிக்கைகள் இருமடங்கு, அதாவது 265 சதவீதம் குறைந்துள்ளன.

    பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியின் கீழ் வடகிழக்கு மாநிலங்களில் அமைதிக்கான புதிய சகாப்தம் தொங்கியுள்ளது என தெரிவித்தார்.

    பிசிசிஐ முன்னாள் தலைவரும் பாஜக எம்.பி.யுமான அனுராக் தாகூர் மக்களவை பாஜக தலைமை கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார். #AnuragThakur #BJP #MansoonSession #LokSabha
    புதுடெல்லி:

    இமாச்சலப்பிரதேசம் ஹிமாபுர் தொகுதி எம்.பி.யாக உள்ள அனுராக் தாகூர் பாஜகவின் இளைஞரணி தலைவராகவும் இருந்து வந்தார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருந்த அவர் சமீபத்தில் அப்பொறுப்பில் இருந்து விலகினார்.

    இந்நிலையில், நாளை பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் பாஜகவின் தலைமை கொறடாவாக அனுராக் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார். பாஜக தலைமை கொறடாவாக இருந்த ராகேஷ் சிங் மத்திய பிரதேச மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதால், அவர் பதவியில் இருந்து விலகினார். 

    ஒரு கட்சியின் கொறடாவின் உத்தரவுக்கு ஏற்ப அக்கட்சி எம்பிக்கள் அவையில் செயல்பட முடியும். கொறடாவின் உத்தரவை மீறி செயல்பட்டால் உறுப்பினர்களின் பதவியை பறிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 
    ×