search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anurag Thakur"

    • கேரளாவில்கூட ஓட்டு சதவீதம் எங்களுக்கு உயர்ந்து இருக்கிறது
    • நாட்டை விற்கும் காங்கிரசுக்கு ஓட்டு போட மாட்டார்கள்.

    புதுடெல்லி:

    மத்திய தகவல் ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி அனுராக்சிங் தாக்குர் டெல்லியில் 'தினத்தந்தி' உள்பட பிராந்திய மொழி பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    18-வது மக்களவைக்கான தேர்தல் நடக்கிறது. உலகமே இந்தியாவை உற்றுநோக்கிக்கொண்டிருக்கிறது. ஒரு நாட்டுக்கு தொடர்ச்சியான, நிலையான தலைமை வேண்டும். தொடர்ச்சியான, நிலையான ஆட்சி மிகவும் அவசியம். தலைவராக இருப்பவர் நேர்மையாக இருக்க வேண்டும்.

    பிரதமர் மோடி நேர்மையான, மூத்த மற்றும் முதிர்ந்த அனுபவம் மிக்க தலைவர். கடந்த 10 ஆண்டுகளில் சாலைகள், சுரங்கப்பாதைகள், ரெயில்பாதைகள் போன்ற உள்கட்டமைப்புகளை தந்திருக்கிறார். ரபேல், தேஜஸ் போன்ற விமானங்களை நாமே தயார் செய்கிறோம். ராணுவ ஆயுதங்களையும் நாமே தயாரிக்கிறோம். எனவே இந்த ஆட்சியின் தொடர்ச்சி நாட்டுக்கு தேவை.

    தமிழ்நாட்டை கடந்த தேர்தலை வைத்து ஏன் பார்க்கிறீர்கள்? இந்த தேர்தலை பாருங்கள். பா.ஜனதாவுக்கு தமிழ்நாட்டில் மிகுந்த எழுச்சி தெரிகிறது. பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் செங்கோலை வைத்தார். காசி தமிழ் சங்கமம், சவுராஷ்டிரா தமிழ் சங்கமங்கள் நடத்தினார். பேசிய இடங்களில் எல்லாம் திருவள்ளுவரின் திருக்குறளை கோடிட்டு காட்டினார். தமிழிலும் பேசுகிறார். ராமர்கோவில் சிலை பிரதிஷ்டை விழாவின்போதும், அதன்பிறகும் பலமுறை தமிழ்நாடு சென்றிருக்கிறார். தமிழ்நாடு மீது அவர் மிகுந்த கவனம் செலுத்துகிறார்.

    இந்த காரணங்களால் பா.ஜனதா அங்கு வெற்றி பெறும். தமிழ்நாட்டின் மீது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. அதிக இடங்கள் கிடைக்கும். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இரட்டை இலக்கத்தில் இடங்கள் கிடைக்கும்.

    கேரளாவில்கூட ஓட்டு சதவீதம் எங்களுக்கு உயர்ந்து இருக்கிறது. மக்கள் அங்கு அமைதியான அரசியலை விரும்புகிறார்கள். மத்தியில் நல்ல ஆட்சியால் பா.ஜனதா அங்கு வளர்ந்துள்ளது. எனவே இந்த முறை பெரிய மாற்றம் அங்கு வரும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

    இதைப்போல ஒடிசாவிலும் ஆட்சிக்கு வருவோம். ஆந்திராவில் எம்.பி.க்கள் எண்ணிக்கையும் அதிகம் ஆகும். ஆட்சியையும் பா.ஜனதா கூட்டணியே பிடிக்கும். ஜெகன்மோகன் ரெட்டிக்கு மாற்றாக மக்கள் பா.ஜனதா கூட்டணியை விரும்புகிறார்கள். தெலுங்கானாவில் முன்பு 4 இடங்களை வென்றோம். இந்த முறை 9 இடங்களை வெல்வோம்.

    நாட்டை விற்கும் காங்கிரசுக்கு ஓட்டு போட மாட்டார்கள். டீ விற்ற மோடிக்குத்தான் ஓட்டு போடுவார்கள். 2019-ல் 303 இடங்கள் தந்தனர். 2024-ல் 405 இடங்களைத் தருவார்கள்.

    பிரதமர் மோடி 4 கோடி மக்களுக்கு வீடு தந்து இருக்கிறார். 12 கோடி வீடுகளுக்கு கழிவறை தந்துள்ளார். சமையல் கியாஸ் இணைப்பு கொடுத்துள்ளார். 13 கோடி மக்களுக்கு வீட்டுக்குழாய் நீர் இணைப்பு கொடுத்துள்ளார். அதிக மருத்துவ கல்லூரிகள், ஐ.ஐ.டி.கள் தந்திருக்கிறார். அடுத்த 5 ஆண்டுகளில் இன்னும் அதிகமாக செய்வார். 'சோஷியல், டிஜிட்டல், பிசிக்கல்' என இந்த 3 நிலைகளிலும் முன்னேற்றத்தை தந்திருக்கிறார். விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்காவுக்கு சமமாக நாட்டை உயர்த்தி இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் தமிழ்நாட்டில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் பா.ஜனதாவுக்கு பாதகமாக இருக்கிறதே? என்று கேட்டதற்கு, ஜூன் 4-ந் தேதி வரை காத்திருங்கள். பா.ஜனதா 400 இடங்களுக்கு மேல் வெல்லும். அதில் தமிழகத்தின் பங்கு பெரியதாக இருக்கும் என்று கூறினார்.

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • கடந்த ஆண்டு கரும்பு கொள்முதல் விலை ஒரு குவிண்டாலுக்கு ரூ. 315 ஆக இருந்தது.

    இந்தியாவில் கரும்பு கொள்முதல் விலை 8 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விலை 2024-25 நிதியாண்டிற்கானது ஆகும். புதிய விலை உயர்வு அக்டோபர் மாதம் அமலுக்கு வரவிருக்கிறது.

    குறைந்தபட்ச ஆதார விலை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், கரும்புக்கான கொள்முதல் விலை உயர்வு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தற்போதைய அறிவிப்பின் படி கரும்பு கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ. 315-இல் இருந்து ரூ. 340 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

     


    இது தொடர்பாக பேசிய மத்திய மந்திரி அனுராக் தாக்கூர், "விவசாயிகள் நலன் மற்றும் விவசாயத்தை மேம்படுத்தும் நோக்கத்திலேயே எங்களது அரசு இயங்கி வருகிறது. வரவிருக்கும் கரும்பு சீசன் அக்டோபர் 1, 2024 அன்று துவங்குகிறது. அதன்படி அக்டோபர் 1-ம் தேதியில் இருந்து செப்டம்பர் 30, 2025 ஆண்டுவரை புதிய விலை அமலில் இருக்கும்," என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், "கடந்த ஆண்டு கரும்பு கொள்முதல் விலை ஒரு குவிண்டாலுக்கு ரூ. 315 ஆக இருந்த நிலையில், 2024-25 நிதியாண்டில் இந்த விலை ரூ. 340 ஆக உயர்த்தப்படுகிறது," என்று தெரிவித்தார்.

    • விவசாயிகள்- மத்திய அரசு இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.
    • தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டால்தான் தீர்வு காணப்படும்.

    விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனால் நேற்று முதல் டெல்லிக்குள் நுழைய முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் பஞ்சாப்-அரியானா, டெல்லி- பஞ்சாப், அரியானா மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ளன.

    விவசாயிகள் முன்னேற முடியாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் சுமார் ஆறு மாத காலத்திற்கு பேரணி நடத்தும் வகையில் உணவு தானியங்கள் மற்றும் எரிபொருட்களுடன் புறப்பட்டுள்ளனர். இதனால் 2020-21 போராட்டம் போன்று நீடித்துவிடும் என மத்திய அரசு நினைக்கிறது.

    இதனால் அவர்களை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. மத்திய மந்திரிகளுக்கும், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் எந்தவிதமான முடிவும் எட்டப்படவில்லை. விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து உடனடியாக சட்டம் நிறைவேற்றிட முடியாது என மத்திய வேளாண் மந்திரி அர்ஜுன் முண்டா தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் பேச்சுவார்த்தையும் மூலம் பிரச்சனைகள் தீர்க்கப்படும். அதனால் விவசாயிகள் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என மத்திய மந்திரி அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் கூறியதாவது:-

    கத்தாரில் தூக்குத்தண்டனை அறிவிக்கப்பட்ட இந்தியாவின் முன்னாள் கடற்படை வீரர்கள், பாதுகாக்கப்பட்டு பத்திரமாக இந்தியா அழைத்து வந்தது, உக்ரைன்- ரஷியா போரின்போது 27 ஆயிரம் இந்தியர்கள் கங்கா ஆபரேசன் நடவடிக்கையின் கீழ் இந்தியா அழைத்து வந்தது, கோடிக்கணக்கான இந்தியர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து திரும்பி வந்தது என இதுபோன்ற சாதனைகள் எல்லாம் பேச்சுவார்த்தைகள் மூலம் நடந்தவைகள்தான். என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால் நமது விவசாய சகோதரர்கள் பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என்பதுதான்.

    மத்திய மந்திரிகள் இரவு முழுவதும் விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டுக் கொண்டிருந்தபோது, அவர்களுடைய பிரதிநிதிகள் வெளியேறிவிட்டனர். அப்போது கூட பேச்சுவார்த்தை தொடர வேண்டும் என்றோம். ஆனால் அவர்கள் பேச்சுவார்த்தையில் தொடரவில்லை.

    பேச்சுவார்த்தை நீண்டு கொண்டே சென்று கொண்டிருக்கிறது. ஏனென்றால், அவர்கள் புதிய கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள்.

    உலக வணிக அமைப்பின் ஒரு பகுதியாக இந்தியா இருக்க அவர்கள் விரும்பவில்லை. இலவச வணிக ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள்.

    விவசாயக் கழிவுகள் எரிக்கப்படுவதை அவர்கள் சுற்றுச்சூழல் பாதிப்பு எனப் பார்க்கக் கூடாது. விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்கப்படுவதை மின்சார திருத்த மசோதாவிற்குள் கொணடு வரக்கூடாது என்கிறார்கள்.

    இதுதொடர்பாக நாங்கள் கமிட்டி அமைப்பதாக அவர்களிடம் தெரிவித்தோம். இல்லையெனில் வேளாண் மந்திரியுடன் நாங்கள் ஆலோசனை நடத்த முடியும் என்றோம். மாநிலங்கள் மற்றும் தொடர்புடையவர்களிடம் நாங்கள் பேச வேண்டும். உங்களுடைய அதிகப்படியான கோரிக்கைகளை நாங்கள் சந்திக்கும்போது, பேச்சுவார்த்தைகள் மூலமாகத்தான் தீர்வு காண முடியும்.

    நாட்டிற்கு இழப்பிற்கு ஏற்படும் வகையில் விவசாயிகள் வன்முறையில் ஈடுபடக்கூடாது. நீண்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இது என்னுடைய வேண்டுகோள்.

    காங்கிரஸ் ஆட்சி காலத்தைவிட பிரதமர் மோடி அரசு அதிக அளவிலான விளைபொருட்களை கொள்முதல் செய்துள்ளது. பட்ஜெட்டில் விவசாயத்துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    ராகுல் காந்தி குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்தல் சட்டமாக்கப்படும் என உறுதி அளிக்கிறார். மக்கள் வாக்களித்து அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளுக்கு மரியாதை அளிக்க மாட்டார்கள். எம்.எஸ்.பி. சட்டம் விவசாயிகளின் கோரிக்கைகளில் முக்கியமானதாக இருந்து வருகிறது.

    • மக்களின் நீண்ட நாளைய காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது.
    • 140 கோடி மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.

    சிம்லா:

    மத்திய மந்திரி அனுராக் தாக்குர் இமாசல் பிரதேசத்தின் ஹமீர்புரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    60 ஆண்டுகளாக காங்கிரஸ் செய்ய முடியாத பணியை பிரதமர் நரேந்திர மோடி அரசு 10 ஆண்டுகளில் செய்துள்ளது.

    செய்த பணிகளை மக்களிடம் கொண்டு செல்வது கட்சி தொண்டர்களின் தலையாய பொறுப்பு.

    நீண்ட நாளைய காத்திருப்பு முடிவுக்கு வந்தது. 140 கோடி மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

    தேசத்தில் பிறந்தது முதல் இன்று வரை சித்தாந்தத்தைக் கடைப்பிடித்து வரும் ஒரே அரசியல் கட்சி பா.ஜ.க. மட்டுமே என்பது நிரூபணமானது என தெரிவித்தார்.

    • ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா சாதனை படைத்ததற்கு கேலோ விளையாட்டு முக்கிய காரணம்.
    • பெரிய அளவிலான விளையாட்டு போட்டிகளை தமிழ்நாடு மிக சிறப்பாக நடத்தி வருகிறது.

    கேலோ இந்தியா விளையாட்டு போட்டி துவக்க விழாவில் கலந்து கொண்ட மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் மேடையில் உரையாற்றினார். அவர் கூறியதாவது, "இந்த தொடக்க விழாவில் பங்கேற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் பிரதமரின் முக்கிய திட்டமாகும். தற்போது சர்வதேச அளவில் இந்தியா பதக்கங்களை பெற்று முன்னிலை பெற்று வருகிறது. ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா சாதனை படைத்ததற்கு கேலோ விளையாட்டு முக்கிய காரணம் ஆகும். இப்போட்டிகளில் 100-க்கும் மேற்பட்ட பதக்கங்களை பெற்று இந்தியா சாதனை படைத்து வருகிறது.

    2030, 2036 ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்காக பிரதமர் மோடி பல முயற்சிகளை செய்து வருகிறார். விஸ்வநாதன் ஆன்ந்த், பிரக்ஞானந்தா ஆகிய செஸ் ஜாம்பவான்கள் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கின்றனர். பெரிய விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்பு தமிழ்நாட்டிற்கு எப்போதெல்லாம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் மிக சிறப்பாக தமிழ்நாடு அந்த போட்டிகளை நடத்தி இருக்கின்றது. ஹாக்கி விளையாட்டு போட்டி, ஸ்குவாஸ் கோப்பைக்கான விளையாட்டு போட்டி, செஸ் ஒலிம்பியாட் போட்டி ஆகிய போட்டிகளை மிகவும் திறமையாக நடத்தி இருக்கிறது.

    கேலோ இந்தியா என்பது பதக்கங்களை வெற்றி பெறுவதற்காக நடத்தப்படும் விளையாட்டு அல்ல, உங்களின் பெருமையை, திறமையை மேலும் மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்பை தருகின்ற ஒரு விளையாட்டு போட்டி" எனக் கூறினார். மேலும் கடந்த 10 ஆண்டுகளில் கேலோ இந்தியாவின் கீழ் செலவழிக்கப்பட்ட பட்ஜெட்டை மூன்று மடங்கு உயர்த்தியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார்.

    • துணை ஜனாதிபதி போல மிமிக்ரி செய்து, கிண்டல் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
    • அவர்கள் மன்னிப்பு கேட்பதற்கு பதிலாக குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் என்றார் மத்திய மந்திரி.

    சென்னை:

    எம்.பி.க்கள் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சியினர், பாராளுமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் போல மிமிக்ரி செய்து, கிண்டல் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

    இந்நிலையில், மத்திய மந்திரி அனுராக் தாக்குர் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ராகுல் காந்தி முதிர்ச்சி அற்றவர், தீவிரம் காட்டாதவர், ஜனநாயகமற்றவர். வீட்டிலோ அல்லது வெளியிலோ எதுவாக இருந்தாலும், இது வெட்கக் கேடான செயல்.

    அவரது செயலாலோ, பேச்சாலோ பிரதமரை பலமுறை விமர்சித்துள்ளார். ராகுல் காந்தி செய்த செயலை நாடு மன்னிக்காது.

    ஒரு எம்.பி. தவறான செயலில் ஈடுபட்டிருந்தால், அவருடன் இணைவதை விட அவரை நிறுத்தியிருக்க வேண்டும். மன்னிப்பு கேட்பதற்கு பதிலாக, குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் என தெரிவித்தார்.

    • வருமான வரித்துறையினர் சோதனையில் மூட்டை மூட்டையாக பணம் சிக்கியது.
    • 50 அதிகாரிகள், 40 மெஷின் மூலம் பணம் எண்ணப்பட்டன.

    ஒடிசாவின் பிரபல மதுபான உற்பத்தி நிறுவனமான பல்தேவ் சாஹூ குழுமத்தின் மீது வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் உற்பத்தி ஆலைகள், நிறுவனத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் இடங்களில் வருமானவரி சோதனை நடத்தப்படுகிறது.

    ஒடிசாவில் புவனேஸ்வர், சம்பல்பூர், ரூர்கேலா கந்தர்கர் மற்றும் மேற்கு வங்காளம், ஜார்க்கண்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் குறிப்பிட்ட மதுபான நிறுவனத்துடன் ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் மேல்சபை எம்.பி. தீரஜ் சாஹூவுக்கு தொடர்பு இருந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு சொந்தமான வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    கடந்த புதன்கிழமை சோதனை தொடங்கியதில் நாள்தோறும் நடத்தப்பட்ட சோதனையில் பணக்குவியல்கள் காணப்பட்டது. வெள்ளிக்கிழமை வரை நடைபெற்ற சோதனையில் வருமானவரித்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 225 கோடி பணம் போலங்கிரில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்டு எண்ணப்பட்டது. அதை தொடர்ந்து நாளுக்கு நாள் பணத்தின் எண்ணிக்கை உயர்ந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

    நேற்று முன்தினம் வரை ரூ.290 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. நாட்டில் வருமானவரி சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட மிக அதிக தொகை இதுவாகும்.

    நேற்று நடத்தப்பட்ட 5-வது நாள் சோதனை முடிவில் கைப்பற்றப்பட்ட தொகை ரூ.350 கோடியை தாண்டியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். 3 வங்கிகள், 50 அதிகாரிகள், 40 மெசின்கள் மூலம் பணம் எண்ணப்பட்டது.

    நேற்று நள்ளிரவிலும் பணத்தை எண்ணும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். ஒடிசாவில் இந்த பணி கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி மொத்தம் ரூ. 353.5 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    • காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி.யிடம் இருந்து 350 கோடி ரூபாய் பறிமுதல்.
    • மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்ட பணம் எண்ணப்பட்டு வருகிறது.

    காங்கிரஸ் எம்.பி. தீரஜ் சாகுவிற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சுமார் 350 கோடி ரூபாய்க்கும் அதிகமாக ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    பணத்தை கணக்கிடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒரே நேரத்தில் இவ்வளவு தொகை கைப்பற்றப்பட்டது இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவின் இலக்கான 400 இடங்களுடன், தற்போதைய ஊழலை மத்திய மந்திரி அனுராக் தாகூர் ஒப்பிட்டு கிண்டல் செய்துள்ளார்.

    இதுகுறித்து அனுராக் தாகூர் கூறுகையில் "மக்களிடம் இருந்து பா.ஜனதா தொடர்ந்து ஆதரவை பெற்று வருகிறது. இதற்கு பிரதமர் மோடியின் பொது நலத்திட்டம் கொள்கைதான் காரணம். அனைத்து துறைகளிலும் நாடு வளர்ச்சி அடைந்து வருகிறது.

    நாங்கள் 400 இடங்களில் வெற்றி பெறுவது குறித்து யோசித்துக் கொண்டிருக்கும்போது காங்கிரஸ் தலைவர் 400 கோடி ரூபாய்க்கும் அதிகமான ஊழலில் ஈடுபட்டுள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும் தொடக்கத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சி எப்போதும் ஊழல் மற்றும் மோசடியில் ஈடுபட்டு வருகிறது. இதனால்தான் அக்கட்சி எப்போதுமே அமக்கலாக்கத்துறை மற்றும் சிபிஐ, பணமதிப்பு இழப்பு நடவடிக்கை ஆகியவற்றிற்கு எதிராக உள்ளது" என்றார்.

    • கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.
    • அடுத்த மாதத்துடன் முடிவடையும் நிலையில் நீட்டிக்க மத்திய மந்திரி சபை ஒப்புதல்.

    கொரோனா வைரஸ் தொற்றின்போது நாடு தழுவிய ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போது ஏழை மக்கள் வாழ்வாதாரம் இன்றி சிரமப்பட்டார்கள்.

    இதனால் பிரதம மந்திரி கரிப் கல்யான் அன்ன யோஜனா என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, ஏழை மக்களுக்கு 5 கிலோ உணவு தானியம் வழங்கப்பட்டது. அதனோடு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கூடுதலாக ஐந்து கிலோ உணவு தானியங்கள் வழங்கப்பட்டது.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் பிரதம மந்திரி கரிப் கல்யான் அன்ன யோஜனா திட்டம் பலமுறை நீட்டிப்பிற்குப்பின் முடிவடைந்தது. அதன்பின் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்கப்பட்டது.

    இந்த திட்டம் வருகிற டிசம்பர் 31-ந்தேதியுடன் முடிவடைகிறது.. இந்த நிலையில் தற்போது மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் ஐந்தாண்டு ஆண்டுகளுக்கு பயனாளிகளுக்கு வழங்கப்படும்.

    நேற்று பிரதமர் மந்திரி தலைமையில் மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது. அப்போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

    மேலும், கடந்த ஐந்தாண்டுக்கு 80 கோடி பயனாளிகளுக்கு மாதந்தோறும் 5 கிலோ உணவு தானியங்கள் வழங்க 11.8 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் எனத் தெரிவித்துள்ளார்.

    • தெலுங்கானாவில் வரும் 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.
    • வாரங்கல் பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் மத்திய மந்திரி அனுராக் தாக்குர் பங்கேற்றார்.

    ஐதராபாத்:

    119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.

    இந்நிலையில், தெலுங்கானாவின் வாரங்கல் பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் மத்திய மந்திரி அனுராக் தாக்குர் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    மக்கள் மத்தியில் ஆளும் கட்சி மற்றும் கே.சி.ஆர். மீது அதிக கோபம் உள்ளது. வாரிசு அரசியலாலும் ஊழலாலும் மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.

    காளேஸ்வரம் திட்ட ஊழல் முதல் டெல்லியின் கலால் கொள்கை ஊழல் வரை கே.சி.ஆர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் வெளிவந்துள்ளன.

    கர்நாடகா மற்றும் இமாச்சல பிரதேசத்தில் போலி வாக்குறுதிகளை அளித்து காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது. ஓராண்டுக்குள் அவர்களின் அரசும், உத்தரவாதமும் தோல்வி அடைந்தது.

    காங்கிரசும், கே.சி.ஆரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள், இருவரும் ஊழல்வாதிகள் மற்றும் பொய்யான வாக்குறுதிகளை வழங்குகிறார்கள் என தெரிவித்தார்.

    • பாரம்பரிய கலைகளை வளர்த்தெடுக்கும் வித்தையை சத்குருவிடம் கற்றுக் கொள்ளலாம்.
    • இந்தாண்டு 1,000 இடங்களில் கேலோ இந்தியா விளையாட்டு மையங்கள் தொடங்கப்பட உள்ளது.

    இந்தியாவின் மாபெரும் கிராமிய விளையாட்டு திருவிழா என்ற பெருமைக்குரிய 'ஈஷா கிராமோத்சவம்' திருவிழாவின் இறுதிப் போட்டிகள் கோவை ஈஷா யோக மையத்தில் இன்று (செப்.23) மிக விமர்சையாக நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் திரு. அனுராக் தாகூர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    பரிசளிப்பு விழாவின் போது பேசும் போது, "ஈஷா கிராமோத்சவம் திருவிழாவை 2004-ம் ஆண்டு முதல் ஈஷா நடத்தி வருகிறது. இன்று நடக்கும் 15-வது கிராமோத்சவ விழாவில் நான் பங்கேற்றதை பெருமையாக கருதுகிறேன். இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் முழு நேர, தொழில்முறை விளையாட்டு வீரர்கள் கிடையாது. தின கூலி வேலைக்கு செல்பர்கள், நெசவாளர்கள், மீனவர்கள், விவசாயிகள் என பல விதமான வேலை செய்பவர்கள் தான் இப்போட்டியில் வீரர்களாக களம் கண்டு வென்றுள்ளனர். இது தான் இத்திருவிழாவின் சிறப்பு."

     

    "விளையாட்டு போட்டிகள் மட்டுமின்றி இங்கு 1,200 பேர் ஒன்று சேர்ந்து கும்மியாட்டத்தையும் ஆடி காட்டியுள்ளனர். இதுதவிர பல்வேறு கிராமிய நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகளும் இத்திருவிழாவில் நடத்தப்பட்டுள்ளது. இதை காண ஆயிரக்கணக்கில் மக்கள் வந்துள்ளீர்கள். இவை அனைத்தையும் சாத்தியப்படுத்தியுள்ள சத்குரு அவர்கள், வாழ்க்கையையே ஒரு விளையாட்டு தன்மையுடன் அணுக கூடிய கூல் குருவாக இருக்கிறார். விளையாட்டு போட்டிகள் மற்றும் கலைகளை வளர்க்கும் வித்தை அவரிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம்," என்று தெரிவித்தார்.

    மேலும் பேசிய அவர், "இந்தாண்டு 1,000 இடங்களில் கேலோ இந்தியா விளையாட்டு மையங்கள் தொடங்கப்பட உள்ளது. யோகா, களரி, மல்லர்கம்பம் உள்ளிட்ட 5 பாரம்பரிய கலைகளை கேலோ இந்தியா திட்டத்தில் சேர்த்துள்ளோம். இதேபோல், பாரம்பரிய விளையாட்டான கபடி போட்டியை ஒலிம்பிக்கில் சேர்க்கும் காலமும் கூடிய விரைவில் வரும்," என்று தெரிவித்தார்.

    இதை தொடர்ந்து சிறப்புரையாற்றிய சத்குரு, "ஈஷா கிராமோத்சவம் திருவிழா இந்தாண்டு தென்னிந்திய அளவில் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதில் 25 ஆயிரம் கிராமங்களில் இருந்து சுமார் 60 ஆயிரம் வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஜாதி, மதம், ஆண், பெண், வயது என எல்லா வேறுபாடுகளையும் கடந்து அவர்கள் ஒற்றுமையுடன் விளையாடி உள்ளனர்."

    "போட்டியிட்டு வெற்றி பெறும் நோக்கத்திற்காக நாம் இந்த கிராமோத்சவத்தை நடத்தவில்லை. இதன்மூலம், இதில் பங்கெடுத்த வீரர்கள் மற்றும் பார்வையிட்ட ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வில் உற்சாகத்தையும் கொண்டாட்டத்தையும் உருவாக்க இந்த விளையாட்டு போட்டிகளை நடத்தி உள்ளோம். வாழ்க்கையில் விளையாட்டு தன்மை இல்லாமல் போனால், வாழ்க்கை பெரும் சுமையாகிவிடும். குறிப்பாக, ஏழ்மை நிலையில் இருக்கும் கிராமப்புற மக்களின் வாழ்க்கை ஆனந்தமாகவும் உற்சாகமாகவும் இருக்க ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் அவசியம்," என்று தெரிவித்தார்.

    வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு சத்குரு மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பரிசு தொகைகள் மற்றும் பாராட்டு கேடயங்கள் வழங்கி கெளரவித்தனர். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இப்போட்டிகளை ஆயிரக்கணக்கான மக்கள் நேரில் கண்டு களித்தனர். மேலும், பார்வையாளர்கள் பங்கேற்பதற்கு பாரம்பரிய விளையாட்டு போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

    • ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க 3 இந்திய வீராங்கனைகளுக்கு சீனா அனுமதி மறுத்துள்ளது.
    • மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்குர், தனது சீன பயணத்தை ரத்து செய்துள்ளார்.

    புதுடெல்லி:

    ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் தொடங்குகின்றன. தொடக்க விழா நடைபெறுவதற்கு முன்னதாகவே கால்பந்து, கிரிக்கெட், வாலிபால், பீச் வாலிபால் உள்ளிட்ட சில போட்டிகள் தொடங்கி விட்டது.

    இதற்கிடையே, ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த 3 வீராங்கனைகளுக்கு சீனா அனுமதி மறுத்துள்ளது. 3 வீராங்கனைகள் பங்கேற்க அனுமதி மறுத்ததற்காக சீனாவிற்கு இந்தியா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் பங்கேற்கவிருந்த மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்குர், தனது சீன பயணத்தை ரத்து செய்துள்ளார்.

    இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தை சீனா உரிமை கொண்டாடி வரும் நிலையில், வீராங்கனைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    ×