செய்திகள்
மந்திரி சுதாகர்

மருத்துவ மாணவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும்: மந்திரி சுதாகர்

Published On 2021-02-11 01:50 GMT   |   Update On 2021-02-11 01:50 GMT
கர்நாடகத்தில் மருத்துவ மாணவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.
பெங்களூரு :

பெங்களூருவில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் மூச்சுத்திணறல் பிரச்சினைக்கான தீவிர சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கலந்து கொண்டு, அந்த தீவிர சிகிச்சை பிரிவை திறந்து வைத்து பேசும்போது கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய பத்தே மாதங்களில் கொரோனா தடுப்பூசி நமக்கு கிடைத்துள்ளது. மருத்துவ கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தாமாக முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அவ்வாறு தடுப்பூசி போட்டுக் கொண்டால் மற்றவர்களுக்கு தடுப்பூசி மீது நம்பிக்கை ஏற்படும். தடுப்பூசி பெற சிலர் தேர்வை காரணமாக கூறுகிறார்கள்.

ஆனால் தேர்வுக்கும், தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் கிடையாது. தடுப்பூசி பெற்றவர்களுக்கு எந்த எதிர்மறையான பாதிப்புகளும் ஏற்படவில்லை. மருத்துவத்துறையில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். சில மாநிலங்களில் தடுப்பூசி பெறாதவர்களுக்கு சம்பளம் வழங்க முடியாது என்று கூட அறிவித்துள்ளனர்.

இந்தியாவின் தடுப்பூசியை 25 நாடுகள் கேட்டுள்ளன. நமது பிரதமர் மோடி தடுப்பூசியை இலவசமாக வழங்குகிறார். அதை பெறுவதில் யாரும் தயக்கம் காட்டக்கூடாது.கொரோனா பரவிய பிறகு, சுகாதாரத்திற்கு மக்கள் கொடுக்கும் முன்னுரிமை அதிகரித்துள்ளது. மருத்துவத்துறையில் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கர்நாடகத்தில் தற்போது ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளின் எண்ணிக்கையை 30 ஆயிரமாக உயர்த்தியுள்ளோம். முன்பு இதன் எண்ணிக்கை 7,500 ஆக இருந்தது. வருகிற பட்ஜெட்டிலும் சுகாதாரத்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று முதல்-மந்திரியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

கொரோனா பரவத்தொடங்கிய நேரத்தில் விக்டோரியா மருத்துவமனை சிறப்பான முறையில் சேவையாற்றியுள்ளது. வாணிவிலாஸ் ஆஸ்பத்திரி, 200 கொரோனா கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் பார்த்துள்ளது. இதற்காக அந்த மருத்துவமனைகளை பாராட்டுகிறேன்.

இவ்வாறு சுதாகர் கூறினார்.
Tags:    

Similar News