செய்திகள்
தமிழறிஞர் சீனிவாச ஆச்சாரியாவின் பணியை பாராட்டிய பிரதமர்

மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டிய தமிழர்கள்

Published On 2020-12-27 08:25 GMT   |   Update On 2020-12-27 08:25 GMT
பிரதமர் மோடி இன்று தனது மன் கி பாத் உரையில், தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியை, சிறுமி உள்ளிட்ட சிலரது பணிகளை பாராட்டினார்.
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதுடன், மக்களுடன் கலந்துரையாடுகிறார். அவ்வகையில் இந்த ஆண்டின் இறுதி ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் இன்று பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது, கோவையைச் சேர்ந்த காயத்ரி என்ற சிறுமி, தனது தந்தையுடன் சேர்ந்து விலங்குகளுக்கான வீல் சேர் ஒன்றை வடிவமைத்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். அந்த சிறுமிக்கு தனது பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

இதேபோல் தமிழகத்தைச் சேர்ந்த ஹேமலதா என்ற ஆசிரியை, கொரோனா காலகட்டத்தில் புதுமையான முறையில் மாணவர்களுக்கு பாடங்களை நடத்தியதாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். அனிமேசன் முறையில் எளிதாக புரியும் வகையில்  பாடங்களை அவர் வடிவமைத்ததாக கூறினார். ஆசிரியையின் இந்த முயற்சி மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் மோடி தெரிவித்தார்.

மேலும், சீனிவாச ஆச்சாரியா என்ற 92 வயது அறிஞரின் பணியையும் பிரதமர் மோடி பாராட்டினார். சீனிவாச ஆச்சாரியா, தான் எழுதிய பழமையான புத்தகங்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் உன்னதமான பணியில் ஈடுபட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார்.
Tags:    

Similar News