செய்திகள்
எடியூரப்பா

கர்நாடகத்தில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமல்?: எடியூரப்பா பரபரப்பு தகவல்

Published On 2020-12-23 02:38 GMT   |   Update On 2020-12-23 02:38 GMT
இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் கர்நாடகத்தில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? என்ற கேள்விக்கு முதல்-மந்திரி எடியூரப்பா பதிலளித்துள்ளார்.
பெங்களூரு :

இங்கிலாந்தில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

இங்கிலாந்து உள்பட பல்வேறு உலக நாடுகளிலும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாகவும், அது முந்தைய வைரசை விட ஆபத்தானது என்றும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பிரதமர் மோடியே எச்சரிக்கை விடுத்துள்ளார். அதனால் அந்த வைரஸ் கர்நாடகத்தில் பரவுவதை தடுக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும். புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பெங்களூரு மாநகராட்சி, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது.

பொதுமக்களின் நலனே முக்கியம். அதனால் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட அனுமதி கிடையாது. அரசின் விதிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். புத்தாண்டை யாரும் கொண்டாடக்கூடாது. உங்களின் ஆரோக்கியம் உங்களது கைகளில் தான் உள்ளது. அரசு பிறப்பிக்கும் உத்தரவுகளை சரியான முறையில் கடைப்பிடித்து அதன்படி நடக்க வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம். மேலும் அவர்களுக்கு கட்டாய வீட்டு தனிமையும் அமல்படுத்தப்பட்டுள்ளது. தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதனால் பொதுமக்கள் யாரும் பயப்பட தேவை இல்லை. மராட்டிய மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கர்நாடகத்தில் தற்போதைக்கு மீண்டும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

முன்னதாக ஒரு தனியார் நிறுவனம் தயாரித்துள்ள பேட்டரி ஆட்டோ சேவையை முதல்-மந்திரி எடியூரப்பா தொடங்கி வைத்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், இதுபோன்ற பேட்டரி ஆட்டோக்களால் சுற்றுச்சூழல் மாசு அடைவது தடுக்கப்படும், இது சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனம்’’ என்று கூறினார்.
Tags:    

Similar News