செய்திகள்
கொரோனா மரணம் தொடர்பான வரைபடம்

உலகிலேயே இந்தியாவில்தான் கொரோனா உயிரிழப்பு குறைவு -சுகாதாரத் துறை

Published On 2020-10-14 08:41 GMT   |   Update On 2020-10-14 08:41 GMT
ஒரு மில்லியன் மக்களில் ஏற்பட்ட கொரோனா மரணங்கள் இந்தியாவில்தான் மிக குறைவாக இருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72.39 லட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 63,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 730 பேர் மரணம் அடைந்துள்ளனர். கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,10,586 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 63 லட்சத்தை கடந்துள்ளது. 

புதிய நோய்த்தொற்று எண்ணிக்கையை விட அதிக நபர்கள் குணமடைவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது. அத்துடன் உலக அளவிலும் கொரோனா மீட்பில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 

கொரோனா பாதிப்பில் உலக அளவில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருந்தபோதிலும், உயிரிழப்பு மிக குறைவாக உள்ளது. ஒரு மில்லியன் மக்களில் மிகக் குறைந்த அளவில் இருப்பதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பான வரைபடத்தையும் வெளியிட்டுள்ளது. அதில், உலக அளவில் ஒரு மில்லியன் மக்களில் 138 பேர் கொரோனாவுக்கு பலியாகியிருப்பதாகவும், இந்தியாவில் மிக குறைந்த அளவாக 79 பேர் இறந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக அளவாக பிரேசில் நாட்டில் 706 பேரும், அமெரிக்காவில் 642 பேரும், பிரிட்டனில் 631 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதேபோல் ஒரு மில்லியன் மக்களில் எத்தனை பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது? என்பது தொடர்பான புள்ளிவிவர பட்டியலையும் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில், குறைந்த அளவிலான நோய்த்தொற்று எண்ணிக்கையுடன் (5199) இந்தியா உள்ளது. 23911 நோய்த்தொற்றுகளுடன் பிரேசில் முதலிடத்தில் உள்ளது.
Tags:    

Similar News