செய்திகள்
துரியோதன் ஐகோல் எம்.எல்.ஏ, ரவீந்திரா ஸ்ரீகண்டய்யா எம்.எல்.ஏ.

கர்நாடகத்தில்மேலும் 2 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா

Published On 2020-09-23 01:59 GMT   |   Update On 2020-09-23 01:59 GMT
கர்நாடகத்தில் மக்கள் பிரதிநிதிகள் 80-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இந்நிலையில் மேலும் 2 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
பெங்களூரு :

கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மந்திரிகள் உள்பட மக்கள் பிரதிநிதிகள் 80-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதில் பெரும்பாலோனார் குணமடைந்து விட்டனர். இந்த நிலையில் கர்நாடகத்தில் மேலும் 2 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

பெலகாவி மாவட்டம் ராய்பாக் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் துரியோதன் ஐகோல். இவர் நேற்று முன்தினம் பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கிய கர்நாடக சட்டசபை கூட்டத்தொடரில் கலந்து கொள்ள வந்தார். அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனால் அவர் சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. மேலும் டாக்டரின் அறிவுரையின்படி பெங்களூருவில் உள்ள வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டு துரியோதன் ஐகோல் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுபோல மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தொகுதியில் இருந்து கர்நாடக சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டவர் ரவீந்திரா ஸ்ரீகண்டய்யா. ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்தவர். இந்த நிலையில் ரவீந்திரா ஸ்ரீகண்டய்யா, அவரது தாய் பர்வதம்மா, மனைவி கீதா ஆகியோர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். இதனால் அவர்கள் தங்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி இருந்தனர். இதில் 3 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

இதையடுத்து ரவீந்திரா ஸ்ரீகண்டய்யா எம்.எல்.ஏ.வின் தாய் பர்வதம்மா சிகிச்சைக்காக பெங்களூரு மணிப்பால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ரவீந்திரா ஸ்ரீகண்டய்யா எம்.எல்.ஏ.வும், அவரது மனைவி கீதாவும் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பர்வதம்மா முன்னாள் எம்.எல்.ஏ. என்பது குறிப்பிடத்தக்கது
Tags:    

Similar News