செய்திகள்
கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் ஆட்டோவில் ஏற்றப்பட்ட டாக்டர்

அரசுக்கு எதிராக பேசிய டாக்டர் மனநல மருத்துவமனையில் அனுமதி- போலீஸ் நடவடிக்கையால் சர்ச்சை

Published On 2020-05-21 10:37 GMT   |   Update On 2020-05-22 01:55 GMT
அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்த ஆந்திர மாநில டாக்டர் மீது காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கை மற்றும் அவரை மனநல மருத்துவமனையில் சேர்த்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
விசாகப்பட்டினம்:

ஆந்திர மாநிலத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு போதிய அளவில் என்95 முகக்கவசங்கள் மற்றும் பாதுகாப்பு உடைகள் வழங்கப்படவில்லை என்றும், மருத்துவர்கள் ஒரே முகக்கவசத்தை 15 நாட்கள் வரை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளதாகவும், 20 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்ட மயக்க மருந்து நிபுணரான டாக்டர் சுதாகர் ராவ் கடந்த ஏப்ரல் மாதம் குற்றம்சாட்டினார். 

இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்த நிலையில், பொய்யான தகவல்களை பரப்புவதாக கூறி  அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தனது செயலுக்கு அவர் வருத்தம் தெரிவித்தும், சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து செய்யப்படவில்லை.



இந்த சூழ்நிலையில், டாக்டர் சுதாகர் மீது கடந்த சனிக்கிழமை காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கை மற்றும் இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. 

ஒரு வீடியோவில் டாக்டர் சுதாகர்  ராவ், மேல்சட்டையில்லாமல் தனது காருக்குள் இருந்தபடி போலீசாரை நோக்கி கூச்சலிடுகிறார்.  



ஒரு வீடியோவில், போலீசார் ஒருவரின் மொபைல் போனை, டாக்டர் சுதாகர் ராவ் தூக்கி வீசியதாக கூறி, உடைந்துபோன அந்த போனை அந்த போலீஸ்காரர் காண்பிக்கிறார். 

இன்னொரு வீடியோவில், டாக்டர் சுதாகரின் கைகளை பின்னால் கட்டி, ஒரு கான்ஸ்டபிள் அவரை அடிக்கிறார். கடைசி வீடியோவில் டாக்டரை குண்டுக்கட்டாக தூக்கி ஆட்டோவில் ஏற்றுகின்றனர். 

முன்னதாக அங்கு கூடிய பத்திரிகையாளர்களிடம் பேசும் டாக்டர் சுதாகர், தன்னை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி காரிலிருந்து வெளியேற்றியதாகவும், செல்போன் மற்றும் பர்சை பறித்துக்கொண்டு அடித்ததாகவும் குற்றம்சாட்டினார்.

ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள டாக்டர் சுதாகர் ராவ் மீது காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கை பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. நிலைமையை மாநில அரசு கையாளும் விதத்தை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தனர். காவல்துறையினர் கடுமையாக நடந்துகொள்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. 

இதனிடையே, டாக்டரை தாக்கியதாக காவலர் ஒருவரை சஸ்பெண்ட் செய்து  விசாகப்பட்டினம் காவல் ஆணையர் ஆர்.கே மீனா உத்தரவிட்டுள்ளார்.  

இந்த சம்பவம் பற்றி காவல் துறையினர் கூறுகையில், குடிபோதையில் நெடுஞ்சாலையில் ஒருவர் அத்துமீறி நடந்துகொள்வதாக வந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அங்கு சென்றதாகவும், அங்கு சென்ற பிறகுதான் அது டாக்டர் சுதாகர் ராவ் என்பது தெரிந்ததாகவும் கூறுகின்றனர். 

போலீசார் வைத்திருந்த பேரிகார்டை அகற்றியதுடன், மது பாட்டிலை தெருவில் வீசியதாகவும், அப்பகுதி வழியாக சென்றவர்கள் அவரை பிடித்து கட்டி வைத்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அவர் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என கருதி, விசாகப்பட்டினம் மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுபற்றி காவல் ஆணையர் ஆர்.கே.மீனா கூறுகையில், “போலீசாரிடம் டாக்டர் ராவ் முரட்டுத்தரனமாக நடந்துகொண்டார். அவர் ஒரு கான்ஸ்டபிளிடமிருந்து மொபைல் போனைப் பறித்து எறிந்துள்ளார். அவர் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்.  எனவே அவர் முதலில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் அடிப்படை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது, அவரை ஒரு மனநல காப்பகத்திற்கு மாற்ற வேண்டும் என்று அங்கிருந்த டாக்டர்கள் அறிவுறுத்தினர்’ என்றார். 

ஆனால் டாக்டர் சுதாகர் ராவுக்கு மனநல பாதிப்பு எதுவும் இல்லை என்றும், மருத்துவமனைகளில் பாதுகாப்பு உபகரணங்கள் பற்றாக்குறை தொடர்பாக அவர் பேசியதில் இருந்து தொடர்ந்து மிரட்டல்கள் வந்ததாகவும் அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். 
Tags:    

Similar News