செய்திகள்
வங்கி கணக்கில் இருந்து பணத்தை சுருட்ட நவீன மோசடி

வங்கி கணக்கில் இருந்து பணத்தை சுருட்ட நவீன மோசடி: சி.பி.ஐ. எச்சரிக்கை

Published On 2020-05-20 04:00 GMT   |   Update On 2020-05-20 04:00 GMT
கொரோனா வைரஸ் தொற்றுநோயை பயன்படுத்தி, வங்கிகளில் உள்ள வாடிக்கையாளர்களின் பணத்தை திருட நவீன தொழில்நுட்ப மோசடி ஒன்று ஓசைப்படாமல் அரங்கேறி வருவதாக சி.பி.ஐ. எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுடெல்லி :

கொரோனா வைரஸ் தொற்றுநோயை பயன்படுத்தி, வங்கிகளில் உள்ள வாடிக்கையாளர்களின் பணத்தை திருட நவீன தொழில்நுட்ப மோசடி ஒன்று ஓசைப்படாமல் அரங்கேறி வருகிறது. இது ‘பாங்கிங் ட்ரோஜன் செர்பரஸ்’ என்று அழைக்கப்படுகிறது.

இதன்படி, ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிற வாடிக்கையாளர்களுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். (குறுந்தகவல்) அனுப்பப்படும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பை (லிங்க்) பதிவிறக்கம் செய்ய சொல்வார்கள். குறிப்பிட்ட லிங்கை பதிவிறக்கம் செய்தால், கொரோனா வைரசை எதிர்கொள்வதற்கு உங்கள் வங்கி கணக்கில் ஒரு பெரிய தொகை செலுத்தப்படும் என்பது போன்று கவர்ந்திழுக்கிற வகையில் ஆசையை தூண்டும் வார்த்தைகள் இடம்பெற்றிருக்கும். ஆனால் உண்மையில் அது வாடிக்கையாளர்களுக்கு தீங்கு விளைவிக்கும் மோசடி சாப்ட்வேர் ஆகும்.

நீங்கள் அதை பதிவிறக்கம் செய்து விட்டால், அந்த ஸ்மார்ட் போன் கட்டுப்பாடு, எஸ்.எம்.எஸ். அனுப்பிய மோசடி நபரின் கைக்கு சென்று விடும். அதைக் கொண்டு வாடிக்கையாளரின் கிரெடிட் கார்டு எண், டெபிட் கார்டு எண் உள்ளிட்ட அனைத்து ரகசிய தகவல்களையும் அவர்கள் எளிதாக திருட முடியும். அதுமட்டுமல்ல, வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் இருப்பவர்களையும் அவர்கள் தங்கள் வசப்படுத்த முடியும். நினைத்ததை சாதிக்கவும் இயலும்.

வங்கியில் பணத்தை சுரண்டுவது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்கு அது வழிநடத்தி விடும். இது சர்வதேச அளவில் இப்போது பரவி வருவதாக ‘இன்டர்போல்’ (சர்வதேச போலீஸ் அமைப்பு) எச்சரித்துள்ளது. அதன்பேரில் மாநில அரசுகளையும், யூனியன் பிரதேசங்களையும், போலீஸ் துறையினரையும் சி.பி.ஐ. உஷார்படுத்தி உள்ளது. ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறவர்கள் கவர்ச்சியான குறுந்தகவல்களை நம்பி மோசம் போய்விடாமல் உஷாராக இருக்க வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News