செய்திகள்
வெங்கையா நாயுடு

ஒற்றுமை இருந்தால் கொரோனாவை வெல்வது சாத்தியமே - வெங்கையா நாயுடு நம்பிக்கை

Published On 2020-04-27 02:54 GMT   |   Update On 2020-04-27 02:54 GMT
ஒற்றுமை இருந்தால் கொரோனாவை வெல்வது சாத்தியமே என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

நாம் தற்போது மிக மோசமான சுகாதார பிரச்சினைகளின் மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். உலகம் முழுவதும் கொரோனா தொடர்ந்து பரவிக்கொண்டே இருக்கிறது. எந்தவொரு நாடும், ஜனக்கூட்டமும் நெருங்க முடியாதபடி ஆகிவிட்டன.

உலகத்தில் மற்ற சில நாடுகள் போல நாமும் தேசிய ஊரடங்கு உத்தரவு மூலம் கொரோனா பரவலை உடைப்பதற்காக முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். சமூக இடைவெளி, தனிநபர் சுத்தமும் இதற்காக பராமரிக்கப்படுகிறது. புதுவிதமான இந்த சமுதாய செயல்பாடுகள், நல்ல முடிவைத் தந்துள்ளன. அதாவது, புதிய தொற்றுகளும், இறப்புகளும் குறைந்துள்ளன.

இந்த எச்சரிக்கைகளை தவிர்த்தால் என்ன நடக்கும் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் எந்த ஒரு சமூகத்தையும் சுட்டிக்காட்டி பேசுவது தேவையற்றது. ஒவ்வொருவரும் கூட்டமாக கலந்திருந்து சமூக, கலாசார பண்டிகைகளை கொண்டாடுவதுதான் நமது பழக்க வழக்கமாக உள்ளது. சமுதாய இடைவெளி விடுவது நமக்கு முரண்பட்ட ஒன்று. அப்படி இருக்கும்போது நாம் சமுதாய இடைவெளி என்ற ஒரு புதுப்பாதையை தேர்வு செய்திருக்கிறோம் என்றால், சாவை வரவழைக்கும் கொரோனா பரவலை தடுப்பதற்கு இது ஒன்றுதான் வழி என்பதால்தான்.

பண்டிகை நாட்களில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல முடியாத சூழ்நிலையுடன்தான் வாழ்ந்தாக வேண்டியதுள்ளது. சமுதாய கூட்டங்கள் போன்ற சில கூடுகைகளை கொஞ்ச காலத்துக்கு தவிர்க்க வேண்டும். இது கவலையளிக்கும் நடவடிக்கைதான் என்றாலும் வேறு ஒரு மாற்று வழி இல்லையே. கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெறும் வரை இந்த புதிய மற்றும் திருப்தி அளிக்காத வழியை கடைப்பிடித்தாக வேண்டும்.

கொரோனா பற்றி யாரும் அச்சம் கொள்ளவோ, அதே நேரத்தில், அதெல்லாம் ஒன்றுமில்லை என்றோ நினைக்க வேண்டாம்.

கொரோனா தடுப்புப் பணியில் உள்ள டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள், சமூக சேவகர்கள் பலர் தொற்றுக்கு ஆட்பட்டவரோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களுக்கு வீட்டு உரிமையாளர்கள் அனுமதி மறுக்கின்றனர் என்று தகவல்கள் வருகின்றன. இது மிகவும் துரதிருஷ்டவசமானது.

டாக்டர்கள் மீது நம் தேசம் எப்போதுமே பாரம்பரியமாக மிகுந்த மரியாதை வைத்துள்ளது. எனவே மத்திய அரசு சரியான நேரத்தில் தொற்றுநோய் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, மருத்துவப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை, ஜாமீன் மறுப்பு போன்ற கடுமையான ஷரத்துகளை சேர்த்துள்ளது. இந்த நடவடிக்கை மூலம் மருத்துவ பணியாளர்கள் மீது நடத்தப்படும் வன்முறை ஒரு முடிவுக்கு வரும் என்று நம்புகிறேன்.

பயமுறுத்தும் வைரசுக்கும் மனித குலத்துக்கும் இடையில் நடக்கும் போர் இது. ஞானமாக செயல்பட்டு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டால் மட்டுமே இதில் நாம் வெற்றி பெற முடியும்.

நமது மதம் பற்றிய உணர்வுகள், பக்தி ஆகியவை நமது மனதிலும், வீடுகளிலும் இந்த ஆண்டு இருக்கட்டும். புனித ரமலான் மாதம் தொடங்கியுள்ள இந்த நேரத்தில் நாம் வீடுகளில் இருந்து நமது குடும்பத்தினருக்காகவும், நமது நண்பர்களுக்காகவும், இந்த சவாலை விரைவில் வெற்றிகொள்ள வேண்டும் என்றும் வேண்டுவோமாக. கொரோனா நம்மை பல சவால்களை சந்திக்க வைத்துவிட்டது. நமது சமுதாய, மத வாழ்க்கையை மட்டுமல்ல, பொருளாதாரம், கல்வி ஆகியவற்றையும் பாதிக்கச் செய்துவிட்டது. புதிது புதிதாக முளைக்கும் சவால்களுக்கு நாம் ஒன்று சேர்ந்து பதிலை கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த சங்கடங்கள் நீங்குவதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகளும் உள்ளாட்சி மன்றங்களும் எடுத்து வருகின்றன. இன்னும் எவ்வளவோ செய்யப்பட வேண்டியது உள்ளது. இன்னும் சில தூரம் போக வேண்டியது உள்ளது.

நாம் இணைந்து செயல்படும் நேரம் இது. நமது மனமும், இதயமும் ஒன்றாக செயல்பட வேண்டும். நாம் நம்மை பாதுகாப்பதோடு, முடிந்தால் நம்மை சுற்றி இருப்பவர்களையும் காப்பாற்ற வேண்டும். அரசியல் ரீதியான வேறுபாடுகள், கொரோனாவை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளில் குறுக்கிட அனுமதிக்க வேண்டாம். இந்த பன்முக பிரச்சினையை எதிர்கொள்வதற்கு அனைத்து மட்டங்களிலும் ஒற்றுமை இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
Tags:    

Similar News