search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Venkaiah naidu"

    • இளம் அரசியல்வாதிகள் அரசியலில் சேருங்கள். ஆக்கப்பூர்வமாக இருங்கள்.
    • ஆனால் அடிக்கடி கட்சி மாறாதீர்கள் என முன்னாள் துணை ஜனாதிபதி தெரிவித்தார்.

    மும்பை:

    எம்.ஐ.டி அரசுப் பள்ளி மற்றும் எம்.ஐ.டி உலக அமைதிப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய 13-வது பாரதிய சத்ர சன்சாத் தொடக்க விழாவில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    இளம் அரசியல்வாதிகள், மாணவர்கள் அரசியலில் சேருங்கள். அதில் ஆக்கப்பூர்வமாகவும், கவனத்துடனும் இருங்கள். ஆனால் அடிக்கடி கட்சி மாறாதீர்கள்.

    இப்போதெல்லாம் யார் எந்தக் கட்சியில் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதே கடினமாக இருக்கிறது. நாடு முழுவதும் சென்று சில நபர்கள் பெயரைக் குறிப்பிட்டு அவர்கள் கட்சியைக் கூறுகிறேன். அங்கிருக்கும் மற்றவர்கள், நீங்கள் குறிப்பிடும் நபர் தற்போது அந்தக் கட்சியில் இல்லை என என்னிடம் திருத்திக் கூறுகின்றனர். ஜனநாயகத்துக்கே இது வெட்கக்கேடானது.

    கட்சி தலைவர் ஆணவமாகவோ, சர்வாதிகாரியாகவோ மாறினால் கட்சிக்குள் விவாதித்து முடிவு எடுங்கள். அதுவே வழி. இல்லை என்றால் அரசியலின் மீதான மரியாதையை மக்கள் இழக்க நேரிடும். எம்.எல்.ஏ.க்கள் அடிக்கடி கட்சி மாறினால் மக்கள் அரசியல் ஆர்வத்தையும் இழக்க நேரிடும். அது ஜனநாயகத்துக்கு கேடாகவும் அமைந்துவிடும். எம்.எல்.ஏ.க்கள் மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டும் என தெரிவித்தார்.

    • தங்களது சொல் நயமும், ஈர்ப்பும் எப்போதும் ஒளிவீசிக் கொண்டு இருந்து வந்துள்ளது.
    • சிறப்பான நாளில் தாங்கள் நல்ல உடல் நலத்துடனும் மகிழ்ச்சியுடனும் திகழ விழைகிறேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடுவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.

    அரசியல் கட்சி எல்லைகளைக் கடந்து அனைவரிடமும் நட்பு பாராட்டும் உங்கள் திறத்துடன், தங்களது சொல் நயமும், ஈர்ப்பும் எப்போதும் ஒளிவீசிக் கொண்டு இருந்து வந்துள்ளது.

    இந்தச் சிறப்பான நாளில் தாங்கள் நல்ல உடல் நலத்துடனும் மகிழ்ச்சியுடனும் திகழ விழைகிறேன்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

    • ஒவ்வொருவரும் தாய்மொழிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் தாய் மொழியிலேயே பேச வேண்டும்.
    • பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா தற்போது வரை நிலுவையில் உள்ளது.

    சென்னை:

    இந்தியாவின் 13-வது துணை ஜனாதிபதியாக இருந்த வெங்கையா நாயுடுவுக்கு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பாராட்டு விழா நடந்தது.

    மத்திய மந்திரி எல்.முருகன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி, முன்னாள் அமைச்சர் ஹண்டே, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி., உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினார்.

    பாராட்டுக்கு நன்றி தெரிவித்து வெங்கையாநாயுடு பேசியதாவது:-

    நாட்டில் அரசியல், நீதித்துறை, கல்வி, பொருளாதாரம் போன்றவற்றில் சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும். அதிலும், குறிப்பாக நீதிபதிகளை நீதிபதிகளே நியமிக்கும் கொலிஜியம் முறை கூடாது.

    அதேவேளையில் அரசும் நீதிபதிகளை நியமனம் செய்யக்கூடாது. இதற்காக நீதித்துறை ஆணையம் என ஒரு தனி அமைப்பை உருவாக்க வேண்டும். இதுதொடர்பாக விரிவான விவாதம் தேவைப்படுகிறது.

    குற்றப்பின்னணி உள்ளவர்கள் அரசியலுக்கு வருவதை தடுக்க வேண்டும். இதற்கான சீர்திருத்தத்தை கொண்டுவர வேண்டும்.

    குற்றப்பின்னணி உள்ளவர்களின் வழக்குகள் நீண்டகாலமாக கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. அவர்கள் பதவியில் இருந்து கொண்டு அனைத்து பலன்களையும் அனுபவித்த பின்புதான் அந்த வழக்குகளில் தீர்வு காணப்படுகிறது.

    எனவே, இதுபோன்ற வழக்குகளுக்காக சிறப்பு அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு குறிப்பிட்ட காலத்துக்குள் தீர்வு காணப்பட வேண்டும். 2009-ம் ஆண்டு தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள் கூட தற்போது வரை நிலுவையில் இருப்பது அவமானத்துக்கு உரியது.

    ஒவ்வொருவரும் தாய்மொழிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் தாய் மொழியிலேயே பேச வேண்டும். எல்லா மொழியும் தேசிய மொழிதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    எந்த மொழியையும் திணிப்பது தவறு. மொழி திணிப்பிற்கு எதிரானவன் நான். தமிழ்மொழியும் தேசிய மொழிதான். தமிழ்நாட்டில் உள்ள வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழ் மொழியை கற்க வேண்டும். அதற்கு அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    காலனி ஆதிக்கத்தில் இருந்த கல்வி முறையை முடிவுக்கு கொண்டு வந்து புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும்.

    எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பேரவையின் மாண்பை காக்கும் வகையில் கண்ணியத்துடன் பேச வேண்டும். ஜனநாயகத்தை காக்கும் வகையில் தங்களது கருத்துக்களை நியாயமான முறையில் எடுத்துரைக்க வேண்டும். உரிய தீர்வு கிடைக்கவில்லை என்றால் வெளிநடப்பு செய்ய வேண்டுமே தவிர, கூச்சல் குழப்பத்தில் ஈடுபடக்கூடாது.

    பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா தற்போது வரை நிலுவையில் உள்ளது. ஆண்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைக்காது என அதற்கு எதிர்ப்பு தெரிவித்து என்னிடம் முறையிட்டனர். இதனை மேலும் தாமதம் செய்யாமல், இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் ஆந்திர மாநில எம்.பி. பீடா மஸ்தான் ராவ் யாதவ் மற்றும் திராவிடர் தேசம் கட்சி தலைவர் கிருஷ்ணாராவ், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ், தொழில் அதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் உள்ளிட்ட ஏராளமானோர் வெங்கையாநாயுடுவுக்கு பொன்னாடை, பூங்கொத்து, புத்தகம் போன்றவற்றை பரிசாக வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

    • தமிழக ரசிகர்கள் அதுவும் குறிப்பாக சென்னைவாசிகள் இசையை மிகவும் நேசிக்கக்கூடியவர்கள்.
    • காலையில் எழுந்து சூரிய உதயத்தை பார்க்க வேண்டும் என்பதையே மறந்து போகிறோம். சூரியனை பார்க்க வேண்டும்.

    சென்னை:

    தெலுங்கு சினிமாவில் பின்னணி பாடகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட மறைந்த கண்டசாலா வெங்கடேஸ்வரராவ் நூற்றாண்டு பிறந்த விழா, சென்னை ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் நேற்று மாலை நடந்தது. அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்த விழாவில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

    விழாவில் பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி, கலை இயக்குனர் தோட்டா தரணி, டிரம்ஸ் சிவமணி, நாட்டிய கலைஞர்கள் நந்தினி ரமணி, சுதாராணி ரகுபதி, அவசரலா கன்யாகுமாரி, தாயன்பன் உள்ளிட்டோருக்கு கலா பிரதர்ஷினி கண்டசாலா புரஸ்கார் விருதை வெங்கையா நாயுடு வழங்கினார்.

    மேலும் கண்டசாலா எழுதிய பகவத் கீதை நூல் நாட்டிய வடிவலான தொகுப்பாக யூ-டியூப்பில் வெளியிடப்பட்டது. இந்த யூ-டியூப் தளத்தையும், பழைய பாடல் தொகுப்பில் கண்டசாலா பாடல் இணைப்புக்கான புதிய தொகுப்பையும் வெங்கையா நாயுடு வெளியிட்டு பேசியதாவது:-

    தெலுங்கு சினிமா உலகில் 2 தலைமுறை ரசிகர்களை ஈர்த்த பெருமை கண்டசாலா வெங்கடேஸ்வரராவுக்கு உண்டு. அவரது படைப்புகளை, தொகுப்புகளை இளம் தலைமுறையினர் நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டும். தனது மயக்கும் குரலால் ரசிகர்கள் மனதை கட்டிப்போட்டு வைத்திருந்த கலைஞர் அவர்.

    உலகளவில் அவரது குரலுக்கு அந்த ஈர்ப்பு சக்தி இருந்தது. அவரது பாடல்களும், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடல்களும் என்றுமே என்னால் மறக்கமுடியாதவை. கண்டசாலாவின் குரலுக்கு எப்போதுமே ஓய்வு கிடையாது. மனதை மகிழ்ச்சியாக்கும் வல்லமை அந்த குரலுக்கு இருக்கிறது. அவரது காலம் தெலுங்கு சினிமாவின் பொற்காலம். தமிழ் உள்பட பிறமொழிகளிலும் தனது பங்களிப்பை அளித்துள்ளார்.

    தமிழக ரசிகர்கள் அதுவும் குறிப்பாக சென்னைவாசிகள் இசையை மிகவும் நேசிக்கக்கூடியவர்கள். பாரம்பரியம் நமக்கு மிக முக்கியமானவை. அதற்காக பாரம்பரியத்தை மதமாக பார்த்துவிட கூடாது. பாரம்பரியம் நமது வாழ்க்கை முறையை சார்ந்தது. அது மதம் ஆகாது.

    'அம்மா' என்ற வார்த்தையை சொல்லும்போது எவ்வளவு ஆனந்தமான உணர்வு நம்மில் ஏற்படுகிறது. ஆனால் நாம் நாகரிகமாக நினைத்து 'மம்மி' என்று அழைக்கிறோம். தாய்மொழியில் நம் அன்னையை அழைக்கும்போது கிடைக்கும் அந்த உணர்வு, பிற மொழிகளில் நிச்சயம் கிடைக்காது. எப்போதும் தாய்மொழிக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். முதலில் தாய்மொழி. அடுத்தது சகோதர மொழி. பின்னர்தான் வேற்றுமொழி. தாய்மொழியின் சிறப்பு அளவிட முடியாதது. நாகரிகம் என்ற பெயரில் நமது அடையாளத்தை மறக்கக்கூடாது.

    எனவே தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுங்கள். பிள்ளைகளுக்கு தாய்மொழியின் அவசியத்தை கற்றுக்கொடுங்கள். தாய்மொழியிலும் இசை கலந்திருக்கிறது. தாய் பாடும் தாலாட்டு அளப்பரிய இசை. இப்போது தாலாட்டை எங்கே கேட்க முடிகிறது. அதையெல்லாம் மறந்து போய்க்கொண்டு இருக்கிறோம். குழந்தை பருவத்தில் நாம் செய்யும் அனைத்து செயல்களிலுமே இசையின் தாக்கம் இருக்கும்.

    காலையில் எழுந்து சூரிய உதயத்தை பார்க்க வேண்டும் என்பதையே மறந்து போகிறோம். சூரியனை பார்க்க வேண்டும். அப்போது நம்மிடையே உற்சாகம் ஏற்படுவதை உணர முடியும். இதையெல்லாம் செய்யாமல் யூ-டியூப்பில் மூழ்கி கிடக்கிறோம். எனவே இதையெல்லாம் நாம் உணர்ந்து செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக விழாவில் பங்கேற்ற வெங்கையா நாயுடுவுக்கு தஞ்சாவூர் ஓவியங்கள் பரிசளிக்கப்பட்டன.

    விழாவில் தமிழக அரசின் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ், கண்டசாலா வெங்கடேஸ்வரராவின் மனைவி சாவித்ரி, சகோதரர் ரவி மற்றும் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

    • சென்டிரல் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது.
    • பயணிகளின் உடமைகள் சோதனையிட்ட பிறகே அனுமதிக்கப்பட்டனர்.

    சென்னை :

    முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று சென்னை வருகிறார். அவர் வருகையையொட்டி சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் நிலையத்தில் பாதுகாப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

    அதன் ஒரு பகுதியாக இன்ஸ்பெக்டர் சசிகலா தலைமையிலான ரெயில்வே போலீசார், இன்ஸ்பெக்டர் பத்மாகர் தலைமையிலான ரெயில்வே பாதுகாப்பு படையினர் ஆகியோர் நேற்று மாலை ரெயில் நிலையம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    போலீசார் மோப்ப நாய் உதவியுடன் நுழைவு வாயில்களில் ரெயில் பயணிகளின் உடமைகளை சோதனையிட்டு அதன் பிறகே ரெயில் நிலையத்துக்குள் செல்ல அனுமதித்தனர். இதனால் ரெயில் நிலையம் முழுவதும் பரபரப்புடன் காணப்பட்டது.

    • இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள படம் 'சீதா ராமம்'.
    • இதில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்துள்ளார்.

    இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்த படம் 'சீதா ராமம்'. இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்துள்ளார். மேலும், ராஷ்மிகா மந்தனா, சுமந்த் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    சீதா ராமம்

    தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் உருவான இப்படம் ஆகஸ்ட் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, "சீதா ராமம்" படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், " நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பத் துறைகளின் ஒருங்கிணைப்பில், ஒரு அழகான காட்சி உருவாகியுள்ளது. எளிமையான காதல் கதையைப்போல் இல்லாமல் , வீரமிக்க சிப்பாய் பின்னணியுடன், பலவிதமான உணர்வுகளை வெளிக்கொணரும் இந்தப் படம், அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    சீதா ராமம்

    மேலும், மற்றொரு பதிவில், "நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல படத்தைப் பார்த்த உணர்வைத் தந்தது சீதா ராமம். போர் ஓசையின்றி கண்களுக்கு இதமான இயற்கையின் அழகை வெளிப்படுத்தியதற்கு இயக்குனர் ஹனு ராகவபுடி, தயாரிப்பாளர் அஷ்வினி தத், ஸ்வப்னா மூவி மேக்கர்ஸ் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்" என்று தெலுங்கில் குறிப்பிட்டுள்ளார்.

    • அந்த பதவி கிடைக்காததால் நான் அதிருப்தி அடையவில்லை.
    • பதவியில் அமர்ந்த நாள் முதல் யார் மீதும் எனக்கு எந்தக் கோபமும் இல்லை.

    கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து இந்தியாவின் 13-வது குடியரசு துணைத் தலைவராக பணியாற்றிய வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் 10ந் தேதியுடன் நிறைவு பெற்றதையொட்டி, பாராளுமன்ற மாநிலங்களவையில் நேற்று அவருக்கு பிரியாவிடை கொடுக்கப்பட்டது

    அப்போது பேசிய மாநிலங்களவைத் தலைவரான வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளதாவது:

    நாட்டின் குடியரசுத் தலைவராக வேண்டும் என்று நான் ஆசைப்பட்டதில்லை, அந்த பதவி கிடைக்காததால் நான் அதிருப்தி அடையவில்லை. இந்த பதவியில் அமர்ந்த நாள் முதல் யார் மீதும் எனக்கு எந்தக் கோபமும் இல்லை. நான் மக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பேன், அவர்களுடன் தொடர்ந்து பழகுவேன்.

    பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் விவாதிக்கவும், விவாதிப்பதற்கு இடையூறு செய்யாமல் இருக்க வேண்டும் என்றே மக்கள் எதிர்பார்க்கிறார்கள். பாராளுமன்ற உறுப்பினர்கள் கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும்.

    அரசியல்வாதிகளைப் பற்றிய இயல்பான உணர்வு எல்லா இடங்களிலும் குறைந்து வருகிறது, அவர்களை பற்றி மதிப்பு குறைந்து வருவதே இதற்குக் காரணம். அதை மனதில் வைத்து உங்களால் முடிந்ததைச் செய்ய முயற்சிக்க வேண்டும்.

    பாராளுமன்றம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். இப்போது மாணவர்கள், கிராமப்புற மக்கள் மற்றும் பிற பகுதி மக்கள் பாராளுமன்ற நடவடிக்கைகளைப் பார்க்கிறார்கள். அதனால்தான் சில நேரங்களில் நான் கண்டிப்புடன் இருக்கி வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • வரும் 10-ம் தேதியுடன் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஓய்வு பெறுகிறார்.
    • மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

    புதுடெல்லி:

    இந்தியாவின் 13-வது துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து பணியாற்றி வருகிறார். அவரது பதவிக்காலம் வரும் 10-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

    இந்நிலையில், பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்று வெங்கையா நாயுடுவுக்கு பிரியாவிடை கொடுக்கப்பட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

    நமது துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை சபாநாயகருமான வெங்கையா நாயுடு இந்த அவையிலிருந்து விடை பெறுகிறார். அவருக்கு நன்றி தெரிவிக்க இங்கு வந்துள்ளோம். இந்த அவைக்கு இது மிகவும் உணர்ச்சிகரமான தருணம். இந்த அவையின் வரலாற்று தருணங்கள் அவரது அழகான இருப்புடன் தொடர்புடையவை.

    உங்கள் அனுபவங்கள் தேசத்தை இன்னும் பல ஆண்டுகளாக வழிநடத்தும். வெங்கையா நாயுடுவைப் பற்றிய போற்றுதலுக்குரிய விஷயங்களில் ஒன்று, இந்திய மொழிகள் மீது அவருக்கு இருந்த நாட்டம். அவர் சபைக்கு தலைமை தாங்கிய விதத்தில் இது பிரதிபலித்தது.

    நாட்டின் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, சபாநாயகர் மற்றும் பிரதமர் அனைவரும் சுதந்திர இந்தியாவில் பிறந்தவர்கள் மற்றும் நாம் அனைவரும் மிகவும் சாதாரண பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்பதால் இந்த முறை அத்தகைய தனி சிறப்புவாய்ந்த சுதந்திர தினத்தை நாம் கொண்டாட இருக்கிறோம் என தெரிவித்தார்.

    இந்தியா, செனகல் நாடுகளின் 60 ஆண்டுகள் தூதரக உறவை வலுப்படுத்தும் வகையில் துணை ஜனாதிபதி பயணம் அமைந்துள்ளது என வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் டுவீட் செய்துள்ளார்.
    டக்கர்:

    இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அரசுமுறை பயணமாக ஆப்பிரிக்க நாடுகளான காபோன், செனகல் மற்றும் மத்திய கிழக்கு நாடான கத்தாருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

    காபோன் நாட்டில் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு செனகல் நாட்டின் டக்கர் நகரத்திற்குச் சென்றாா் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு. அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், செனகல் நாட்டின் அதிபா் மேக்கி சாலுடன் அவா் சந்தித்தாா். விவசாயம், சுகாதாரம், பாதுகாப்பு, ரயில்வே, எரிசக்தி, கலாச்சாரம் போன்ற துறைகளில் இருநாடுகளின் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. நாளை வரை அங்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறாா்.

    இந்தியா, செனகல் இடையே கலாசார பரிமாற்றம், இளைஞர் விவகாரங்களில் ஒத்துழைப்பு மற்றும் அதிகாரிகளுக்கு விசா இல்லாத நடைமுறை ஆகிய 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

    இந்திய குடியரசுத் துணைத்தலைவர் ஒருவர் காபோன் நாட்டுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
    லிப்ரெவில்லி: 

    குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு காபோன், செனகல் மற்றும் கத்தார் ஆகிய 3 நாடுகளில் வரும் 7-ம் தேதி வரை அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். 

    இதன் முதல்கட்டமாக, டெல்லியில் இருந்து நேற்று தனி விமானம் மூலம் காபோன் நாட்டின் லிப்ரெவில்லி நகர விமான நிலையம் சென்ற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. 

    காபோன் பிரதமர் ரோஸ் கிறிஸ்டியன் ஒசோகா ரபோண்டா மற்றும் அந்நாட்டின் நிதி மந்திரி மைக்கேல் மௌசா அடாமோ ஆகியோர் வெங்கையா நாயுடு மற்றும் அவரது மனைவியை விமான நிலையத்திற்கு வந்து வரவேற்றனர். 

    இந்நிலையில், காபோன் அதிபர் அலி பாங்கோ ஒண்டிம்பாவை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று சந்தித்தார். அப்போது இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

    அதைத் தொடர்ந்து, காபோன் பிரதமர் ரோஸ் கிறிஸ்டியன் ஒசோகா ரபோண்டாவை துணை ஜனாதிபாதி வெங்கையா நாயுடு இன்று மாலை சந்தித்தார். இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 

    மேலும், காபோன் தொழில்துறையினருடன் கலந்துரையாடும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, இந்திய வம்சாவளியினரையும் சந்திக்கிறார். 
    காபோன், செனகல் மற்றும் கத்தார் நாடுகளில் இந்திய குடியரசுத் துணைத்தலைவர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இது.
    லிப்ரெவில்லி: 

    குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, கபோன், செனகல் மற்றும் கத்தார் ஆகிய மூன்று நாடுகளில் வரும் 7 ந் தேதி வரை அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். 

    முதல் கட்டமாக டெல்லியில் இருந்து நேற்று தனி விமானம் மூலம் கபோன் நாட்டின் லிப்ரெவில்லி நகர விமான நிலையத்திற்கு சென்று இறங்கிய வெங்கையா நாயுடுவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. 

    காபோன் பிரதமர் ரோஸ் கிறிஸ்டியன் ஒசோகா ரபோண்டா மற்றும் அந்நாட்டின் நிதி மந்திரி மைக்கேல் மௌசா அடாமோ ஆகியோர் வெங்கையா நாயுடு மற்றும் அவரது மனைவியை விமான நிலையத்திற்கு வந்து வரவேற்றனர். 

    இந்த பயணத்தின் போது, காபோன் பிரதமர், அதிபர் உள்பட அந்நாட்டு தலைவர்களுடன் குடியரசு துணைத் தலைவர் இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். 

    மேலும் காபோன் தொழில்துறையினருடன் கலந்துரையாடும் அவர், இந்திய வம்சாவளியினரையும் சந்திக்கிறார். 

    2வது கட்டமாக ஜூன் 1 முதல் 3 வரை செனகல் நாட்டிற்கு செல்லும் வெங்கையாநாயுடு, அந்நாட்டு அதிபர் மெக்கி சால் உடன் பேச்சுவார்த்தை நடத்துவதுடன், செனகல் தேசிய சட்டப்பேரவை சபாநாயகர் முஸ்தபா நியாசேவையும் சந்திக்கவுள்ளார்.

    தமது பயணத்தின் நிறைவாக ஜூன் 4 முதல் 7-ந் தேதி வரை கத்தார் செல்லும் வெங்கையாநாயுடு, அந்நாட்டின் துணை அதிபர் ஷேக் அப்துல்லா பின் ஹமத் அல் தானியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். 

    பயணத்தின் நிறைவு நாளான்று, கத்தாரில் உள்ள இந்திய சமுதாயத்தினர் அளிக்கம் வரவேற்பு நிகழ்ச்சியிலும், அவர் பங்கேற்கவுள்ளார். 

    மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணை மந்திரி டாக்டர் பாரதி பிரவீன் பவார் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுஷில்குமார் மோடி, விஜய் பால் சிங் தோமர், பி ரவீந்திரநாத் ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழுவும் குடியரசு துணைத் தலைவருடன் மூன்று நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டுள்ளது. 

    இந்த மூன்று நாடுகளிலும் இந்திய குடியரசுத் துணைத்தலைவர் ஒருவர் மேற்கொள்ளும் முதலாவது பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்ததில் பெருமை அடைகிறேன். கலைஞர் சிலை மிகவும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
    சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் சிலை திறக்கப்பட்டுள்ளது.

    ரூ.1.7 கோடி மதிப்பில் 12 அடி பீடத்தில், 16 அடிக்கு மு. கருணாநிதி சிலையை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.

    பின்னர் இந்நிகழ்ச்சியில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வரவேற்புரையாற்றினார்.

    தொடர்ந்து, நிகழ்ச்சியில் நவீன தமிழ்நாட்டின் சிற்பி என்கிற தலைப்பில் காணொலி ஒளிபரப்பப்பட்டது.

    மு.கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசு வழங்கினார்.

    இதையடுத்து, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்ததில் பெருமை அடைகிறேன். கலைஞர் சிலை மிகவும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

    கருணாநிதி சிறந்த நிர்வாகத் திறமை கொண்டவர். இந்தியாவின் பெருமைமிகு முதலமைச்சர்களில் கலைஞரும் ஒருவர். என் இளம்வயதில் கலைஞரின் உரைகளால் ஈர்க்கப்பட்டு இருக்கின்றேன்.

    கலைஞர் கைது செய்யப்பட்டபோது ஜனநாயகத்திற்காக வாதாடினேன். பன்முகத் தன்மை, அர்ப்பணிப்பு, உழைப்பு என பல்வேறு ஆற்றல் நிறைந்தவர் கலைஞர்.

    என்னுடைய பொது வாழ்வில் கலைஞர் கருணாநிதியுடனான உறவு மறக்க முடியாத இனிமையானது. எந்த கட்சியாக இருந்தாலும் எல்லோரும் நாட்டில் உள்ள மக்களுக்காக உழைக்கிறோம்.

    கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும் தமது தரப்பு கருத்தை முன்வைப்பதில் கலைஞர் தனித்திறன் கொண்டவர். சொலல் வல்லன் சோர்விலன் அவனை இகழ்வெல்லல் யார்க்கும் அரிது என்ற குரலுக்கு பொருந்துபவர் கலைஞர்.

    தமிழ் சினிமாவின் புதிய போக்கை தொடங்கி வைத்தவர் கலைஞர்.

    மாநிலங்கள் வளர்ச்சி அடைந்தால் நாடும் வளர்ச்சி அடையும். மாநிலங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்ற உணர்வோடு உழைக்க வேண்டும். மக்களை நடுநாயகமாக கொண்ட அரசியலை முன்னெடுத்தவர் கலைஞர் கருணாநிதி.

    தாய்மொழி, தாய்நாடு ஆகியவையே மிகவும் முக்கியமானது. தாய்மொழியே இதயத்தின் உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தும். எந்த மொழியை எதிர்க்காவிட்டாலும் எனது மொழியை ஆதரிப்பேன்.

    வெளிநாடுகளுக்கு மாநாட்டிற்கு சென்றாலும் பாரம்பரிய உடையிலேயே செல்கிறேன்.  இந்தியாவின் பன்முகத்தன்மையை ஏற்று அங்கீகரிக்க வேண்டும்.

    மக்களின் முன்னேற்றத்திற்காக உழவர் சந்தை, தொழில் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டுவந்தவர் கலைஞர்.

    தமிழ்த் தாய் வாழ்த்தை அரசு விழாக்களில் நடைமுறைப்படுத்தியவர் கலைஞர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதையும் படியுங்கள்.. எந்நாளும் மகிழ்ந்து போற்றும் நாள் இந்நாள்- முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
    ×