செய்திகள்
வைரல் புகைப்படம்

கொரோனாவை எதிர்கொள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி இப்படி அறிவித்தாரா?

Published On 2020-03-17 04:28 GMT   |   Update On 2020-03-17 04:28 GMT
இந்தியாவில் கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி இப்படி அறிவித்ததாக சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகி வருகிறது.



கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் படிப்படியாக வேகம் பிடிக்கும் நிலையில், மத்திய அரசு பொது மக்களுக்கு முகக்கவசங்களை இலவசமாக வழங்குவதாக ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் தளங்களில் தகவல் வைரலாகி வருகிறது.

வைரல் தகவல்களில் வலைப்பக்கம் ஒன்றின் இணைய முகவரி இடம்பெற்று இருக்கிறது. அதனை க்ளிக் செய்து பொது மக்கள் தங்களின் விவரங்களை பதிவிட்டால், இலவச முகக்கவசங்களை பெற முடியும் என கூறப்பட்டு இருக்கிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பிரதமர் நரேந்திர மோடி ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் முகக்கவசங்களை இலவசமாக வழங்க முடிவு செய்திருக்கிறார். கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரியை க்ளிக் செய்து, ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் இலவமாக அணிந்து கொள்ளலாம் என வைரல் குறுந்தகவலில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

வைரல் தகவலில் உள்ள இணைய முகவரியை க்ளிக் செய்யும் போது, பிரதமர் மோடி புகைப்படத்துடன், முகக்கவசங்கள் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இத்துடன் உள்ள பட்டியலில் பயனர் பெயர், மொபைல் நம்பர், முகவரி மற்றும் அஞ்சல் குறியீட்டு எண் உள்ளிட்டவற்றை பதிவிட கோருகிறது.



இணைய படிவத்தை பூர்த்தி செய்ததும், அந்த பதிவினை பத்து பேருக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்ப கோருகிறது. இவ்வாறு செய்ததும், மற்றொரு வலைதளம் திறக்கிறது. அதில் கேம்கள் மற்றும் லாட்டரியில் பங்கேற்க கோரும் தகவல் இடம்பெற்று இருக்கிறது. 

இணைய முகவரியை க்ளிக் செய்ததில், அது போலியான வலைத்தளம் என்பது தெரியவந்துள்ளது. இவை விளம்பர நோக்கிற்காக உருவாக்கப்பட்டு இருக்கின்றன. ஸ்வச் பாரத் வலைதளத்தில் முகக்கவசங்களை இலவசமாக வழங்குவது பற்றி எவ்வித தகவலும் இடம்பெறவில்லை.  

அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி பொது மக்களுக்கு முகக்கவசங்களை இலவசமாக வழங்குவதாக கூறும் தகவல்களில் உண்மை இல்லை என்பது உறுதியாகி விட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைதளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சில சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

Tags:    

Similar News