செய்திகள்
பிரியங்கா காந்தி

லக்னோவில் பரபரப்பு - போலீசார் தாக்கியதாக பிரியங்கா குற்றச்சாட்டு

Published On 2019-12-29 02:46 GMT   |   Update On 2019-12-29 02:46 GMT
உத்தர பிரதேசத்தில் கைதான முன்னாள் போலீஸ் அதிகாரியை சந்திக்க சென்ற தன்னை போலீசார் தாக்கியதாக காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டினார்.
லக்னோ:

உத்தர பிரதேச மாநிலம் லக்னோ நகரில் கைதான முன்னாள் போலீஸ் அதிகாரி எஸ்.ஆர்.தாராபுரியை சந்திக்க நேற்று காரில் சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை போலீசார் இருமுறை தடுத்து நிறுத்தினார்கள்.

இதனால் பிரியங்கா காந்தி காரில் இருந்து இறங்கி தாராபுரியின் வீட்டுக்கு நடந்து சென்று அவரது குடும்ப உறுப்பினர்களை சந்தித்துப் பேசினார்.

அதன்பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, காரில் இருந்து இறங்கிய தன்னை போலீசார் சூழ்ந்து கொண்டு தடுக்க முயன்றதாகவும், அப்போது தான் தாக்கப்பட்டதாகவும், ஒரு பெண் போலீஸ் தனது கழுத்தைப் பிடித்ததாகவும், இன்னொரு பெண் போலீஸ் தன்னை தள்ளிவிட்டதாகவும், இதனால் தான் கீழே விழுந்ததாகவும் தெரிவித்தார்.

பிரியங்கா காந்தியின் இந்த குற்றச்சாட்டை பெண் போலீஸ் அதிகாரி அர்ச்சனா சிங் மறுத்துள்ளார்.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சுஷ்மிதா தேவ்,  லக்னோ நகரில் பிரியங்கா காந்தி போலீசாரால் தாக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார். மேலும், உத்தர பிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டதால் அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News