செய்திகள்
சித்தராமையா

ஆபரேஷன் தாமரையின் பிதாமகன் எடியூரப்பா: சித்தராமையா கடும் விமர்சனம்

Published On 2019-11-27 02:03 GMT   |   Update On 2019-11-27 02:03 GMT
ஆபரேஷன் தாமரையின் பிதாமகன், எடியூரப்பா என்று தேர்தல் பிரசாரத்தின்போது சித்தராமையா கடுமையாக தாக்கி பேசினார்.
பெங்களூரு :

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலையொட்டி முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா நேற்று ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூர் தொகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது:-

கர்நாடகத்தில் முன்பு எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்தபோது, பள்ளி குழந்தைகளுக்கு இலவச சைக்கிள் கொடுத்தார். அதைவிட்டால் வேறு எதையும் அவர் வழங்கவில்லை. ஆபரேஷன் தாமரையின் பிதாமகன் எடியூரப்பா. கடந்த 2008-ம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 7 எம்.எல்.ஏ.க்களை அவர் இழுத்தார். இப்போது 17 எம்.எல்.ஏ.க்களை ஆபரேஷன் தாமரை மூலம் பா.ஜனதாவில் சேர்த்துக் கொண்டார்.

கர்நாடகத்தில் எடியூரப்பாவுக்கு நேர்ந்த கதியே மராட்டியத்தில் தேவேந்திர பட்னாவிசுக்கு ஏற்படும். 24 மணி நேரத்தில் பா.ஜனதா அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. முன்பு எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ராஜினாமா செய்தார். அதே போல் தேவேந்திர பட்னாவிசும் ராஜினாமா செய்வார்.

2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ராணிபென்னூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கே.பி.கோலிவாட் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டார். நான் பிரசாரத்திற்கு வராததால், தோல்வி ஏற்பட்டதாக கே.பி.கோலிவாட் கருதினார். ஆனால் அப்போது தனிப்பட்ட காரணங்களால் பிரசாரத்திற்கு வர முடியாமல் போனது.



இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர், சுமார் 55 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி. கிழக்கில் சூரியன் உதிப்பது எந்த அளவுக்கு உறுதியோ, அதே போல் கே.பி.கோலிவாட்டும் உறுதியாக வெற்றி பெறுவார். கர்நாடகத்தில் 15 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கிறது. இடைத்தேர்தலை நாங்கள் யாரும் விரும்பவில்லை. 17 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர்.

இந்த 17 பேர் ராஜினாமா செய்ததற்கு பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, முதல்-மந்திரி எடியூரப்பா ஆகியோர் தான் காரணம். கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் 17 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகராக இருந்த ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் நாங்கள் பல்வேறு மகான்களின் ஜெயந்தியை அரசு விழாவாக கொண்டாடினோம். ஆனால் திப்பு ஜெயந்திக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?.

எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்தபோது திப்பு ஜெயந்தி விழாவை நடத்தினார். ஜெகதீஷ் ஷெட்டர் முதல்-மந்திரியாக இருந்தபோது, திப்பு சுல்தான் பற்றிய புத்தகத்திற்கு முன்னுரை எழுதினார். ஆனால் அவர்கள் தற்போது திப்பு ஜெயந்தியை எதிர்க்கிறார்கள். பா.ஜனதா தலைவர்கள் இரட்டை நிலைப்பாட்டை அனுசரிப்பது ஏன்?.

நான் முதல்-மந்திரியாக இருந்தபோது, விவசாய கடனை தள்ளுபடி செய்தேன். எனது அப்பன் வீட்டில் இருந்து பணத்தை எடுத்து வந்து கடனை தள்ளுபடி செய்யவில்லை. உங்களின் பணத்தை உங்களுக்காக செலவு செய்து விவசாய கடனை தள்ளுபடி செய்தேன். ஜெகதீஷ் ஷெட்டர் முதல்-மந்திரியாக இருந்தபோது விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அந்த கடன் தள்ளுபடிக்கு தேவையான நிதியை நான் ஒதுக்கீடு செய்தேன்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.
Tags:    

Similar News