செய்திகள்
சஞ்சய் ராவத்

முதல்வர் பதவியை பெறுவதில் சிவசேனா வெற்றி பெறும்- சஞ்சய் ராவத்

Published On 2019-11-05 05:07 GMT   |   Update On 2019-11-05 05:07 GMT
மகாராஷ்டிராவில் முதல்வர் பதவியை பெறுவதில் சிவசேனா கட்சி வெற்றி பெறும் என அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
மும்பை:

மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணிக்கு பெரும்பான்மை இருந்தும், ஆட்சியமைப்பதில் இழுபறி நீடிக்கிறது. ஆட்சி அதிகாரத்தில் 50-50 பார்முலாவுடன், சுழற்சி முறையில் முதல்வர் பதவி தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையில் சிவசேனா உறுதியாக இருக்கிறது. ஆனால் முதல்வர் பதவியை சிவசேனாவுக்கு விட்டுக்கொடுக்க பாஜக முன்வராததல் அரசியல் குழப்பம் தொடர்கிறது.

எனினும், மகாராஷ்டிராவில் பாஜக விரைவில் புதிய ஆட்சியமைக்கும் என முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 



இது ஒருபுறமிருக்க, பாஜக ஒத்துவராவிட்டால் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியமைக்க சிவசேனா தீவிரம் காட்டி வருகிறது. நேற்று கவர்னர் பகத் சிங் கோஷ்யாரியை அக்கட்சியின் தலைவர்கள் சந்தித்துப் பேசினர்.

இந்நிலையில், மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் தொடர்பாக சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் இன்று கூறியதாவது:-

மகாராஷ்டிரா மாநில முதல்வர் பதவியை பெறுவதில் சிவசேனா கட்சி தான் வெற்றி பெறும். முதல்வர் பதவியை முழுமையாக பாஜகவுக்கு விட்டுத் தரும் பேச்சுக்கே இடமில்லை. மகாராஷ்டிராவின் அரசியல் மாறிக்கொண்டே இருக்கிறது, நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். 

மகாராஷ்டிராவில் தற்போது நிலவுவது குழப்பம் அல்ல, நீதி மற்றும் உரிமைக்காக நடக்கும் போராட்டம். இந்த போராட்டத்தில் எங்களுக்குத்தான் வெற்றி கிடைக்கும். 

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News