செய்திகள்
பாதுகாப்பு பணியில் போலீசார்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆனது - மம்தா நிதியுதவி அறிவிப்பு

Published On 2019-10-30 10:38 GMT   |   Update On 2019-10-30 10:38 GMT
ஜம்மு காஷ்மீரின் குல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆனது. பலியான தொழிலாளர்கள் குடும்பத்துக்கு மம்தா பானர்ஜி தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தார்.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள குல்காம் மாவட்டத்தில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் நேற்று வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் திடீரென அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 5 தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மூர்ஷிதாபாத்தை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான தொழிலாளர்கள் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

மேற்கு வங்காளத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பயங்கரவாத தாக்குதலில் பலியானதை அறிந்த அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி, தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். மேலும், பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News