செய்திகள்
குலாம் நபி ஆசாத்

குலாம் நபி ஆசாத் ஜம்மு காஷ்மீர் போகலாம், ஆனால் அரசியல் கூடாது- உச்ச நீதிமன்றம் அனுமதி

Published On 2019-09-16 07:09 GMT   |   Update On 2019-09-16 07:09 GMT
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், ஜம்மு காஷ்மீர் செல்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
புதுடெல்லி:

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது அரசியல் சட்டத்தை ரத்து செய்த பிறகு, அங்கு அரசுக்கு எதிரான போராட்டம் வெடிக்கலாம் என்பதால் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதுடன், முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். வெளி மாநிலங்களில் இருந்து எந்த அரசியல் கட்சி தலைவர்களும் செல்ல முடியாத நிலை உள்ளது.
 
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான குலாம் நபி ஆசாத், ஜம்மு காஷ்மீர் செல்ல அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தனது சொந்த மாநிலமான ஜம்மு காஷ்மீரில் உள்ள குடும்பத்தினரை சந்திப்பதற்காக செல்லவிருப்பதாக மனுவில் கூறியிருந்தார்.

அவரது மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இன்று விசாரித்தது. அப்போது, குலாம் நபி ஆசாத், ஜம்மு காஷ்மீருக்கு செல்ல அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஸ்ரீநகர், பாரமுல்லா, ஜம்மு மற்றும் அனந்த்நாக் ஆகிய பகுதிகளுக்கு குலாம் நபி சென்று தனது உறவினர்களை பார்க்கலாம் என்று நீதிபதிகள் அனுமதி அளித்தனர். அதேசமயம், ஜம்மு காஷ்மீரில் எந்த அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டாது என நிபந்தனை விதித்தனர்.
Tags:    

Similar News