செய்திகள்
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி

ஜம்முவில் மழையால் நிலச்சரிவு: அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்

Published On 2019-07-31 11:40 GMT   |   Update On 2019-07-31 12:25 GMT
ஜம்முவில் மழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும், அமர்நாத் யாத்திரையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஜம்மு:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு மாவட்டத்தில் கடல்மட்டத்தில் இருந்து சுமார் 3,880 மீட்டர் உயரத்தில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசனம் செய்ய நாடு முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான யாத்தீரிகர்கள் வருவது வழக்கம்.

இந்த ஆண்டின் யாத்திரை காலம் கடந்த ஜூன் 30-ம் தேதி தொடங்கியது. மொத்தம் 46 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டு, வரும் ஆகஸ்ட் 15-ம் தேதியுடன் யாத்திரை  முடிவடைகிறது. மேலும், இதுவரை 3.32 லட்சத்துக்கும் அதிகமான யாத்திரீகர்கள் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர். பலர் தரிசனத்துக்காக ஜம்மு மாவட்டத்தில் உள்ள மலையடிவார முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஜம்மு மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. இதனால் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது.  

இதையடுத்து, மோசமான வானிலை காரணமாக ஜம்முவில் உள்ள பல்டெல் மற்றும் பகல்காம் வழித்தடங்களில் மலையடிவார முகாமில் இருந்து யாத்திரீகர்கள் புறப்பட்டு செல்ல தடை விதிக்கப்பட்டதால் அமர்நாத் யாத்திரை இன்று முதல் ஆகஸ்ட் 4ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், மழை காரணமாக நிலச்சரிவால் தடைபட்டுள்ள ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுச்சாலையை சீரமைக்கும் பணியில் மீட்பு குழுவினருடன் இணைந்து  ராணுவ வீரர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News