செய்திகள்
மக்கள் தொகை

2027-ம் ஆண்டுக்குள் மக்கள் தொகையில் இந்தியா முதலிடத்தை பிடிக்கும் - ஐ.நா.

Published On 2019-07-11 05:57 GMT   |   Update On 2019-07-11 07:05 GMT
2027-ம் ஆண்டுக்குள் இந்தியா, உலக மக்கள் தொகை எண்ணிக்கையில் முதல் இடத்தை பிடிக்கும் என்று ஐ.நா. சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

உலக மக்கள் தொகை எண்ணிக்கையில் தற்போது இந்தியா, சீனாவுக்கு அடுத்தப்படியாக 2-வது இடத்தில் இருக்கிறது.

இன்னும் எட்டே ஆண்டுகளில் அதாவது 2027-ம் ஆண்டுக்குள் இந்தியா, உலக மக்கள் தொகையில் முதல் இடத்தை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐ.நா.சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

உலக மக்கள் தொகை தற்போது 770 கோடியாக உள்ளது. 2050-ம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையின் எண்ணிக்கை மேலும் 200 கோடி அதிகரித்து விடும்.

அதாவது 2050-ம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகை 970 கோடியாக அதிகரித்து விடும். அதற்கு அடுத்த சில ஆண்டுகளில் உலக மக்கள் தொகை ஆயிரம் கோடியை கடந்து விடும்.



மக்கள் தொகை அதிகரிப்பு விகிதம் உலக அளவில் இந்தியாவிலும், நைஜிரியாவிலும் தான் மிக அதிகமாக உள்ளது. இன்னும் 8 ஆண்டுகளில், 2027-ல் இந்தியா உலக மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்து விடும்.

2050-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மக்கள் தொகை 273 கோடியாக உயர்ந்து விடும். நைஜீரியா நாட்டின் மக்கள் தொகை 200 கோடியாக அதிகரித்து விடும்.

இந்தியாவிலும் நைஜீரியாவிலும் பெண்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், இந்த இரு நாடுகளிலும் அடுத்த 30 ஆண்டுகளில் மக்கள் தொகை அதிகரிப்பது, மிக, மிக அதிக அளவில் இருக்கும்.

இவ்வாறு ஐ.நா. சபை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News