செய்திகள்
ராகுல் காந்தி

மக்களவையில் கோஷமிட்ட ராகுல் காந்தி

Published On 2019-07-10 01:53 GMT   |   Update On 2019-07-10 01:53 GMT
கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் தொடர்பாக, மக்களவையில் ராகுல் காந்தி கோஷமிட்டார். தற்போதைய மக்களவையில் ராகுல் காந்தி கோஷம் எழுப்பியது இதுவே முதல்முறை ஆகும்.
புதுடெல்லி :

பாராளுமன்ற மக்களவையில் நேற்று மதிய நேரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளே நுழைந்தார். அப்போது, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கர்நாடக கூட்டணி அரசுக்கான நெருக்கடி விவகாரத்தை எழுப்பி பேசிக் கொண்டிருந்தார்.

தங்கள் கூட்டணி எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா இழுக்க முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். ஆனால் அவர் தொடர்ந்து பேச சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி மறுத்தார். இவ்விவகாரம் குறித்து கடந்த திங்கட்கிழமை விவாதிக்கப்பட்டதாகவும், ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பதில் அளித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சபாநாயகரின் பதிலால் திருப்தி அடையாக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மீண்டும் அப்பிரச்சினையை எழுப்ப முயன்றார். மேலும், ஒரு துண்டு காகிதத்தில் சில கோஷங்களை எழுதி, அதை தனக்கு பின்னால் இருந்த காங்கிரஸ் எம்.பி.க்களிடம் வழங்கினார். அந்த கோஷங்களை அவர்கள் எழுப்பத் தொடங்கினர்.

‘சர்வாதிகாரம் ஒழிக’, ‘குதிரைபேர அரசியலை நிறுத்துங்கள்’ என்ற கோஷங்களை எழுப்பினர். அவர்களுடன் சேர்ந்து ராகுல் காந்தியும் கோஷம் போட்டார். ஆனால், அவரது குரல், மற்றவர்களது குரலைப்போல் பெரிதாக கேட்கவில்லை. கோஷத்தின் கடைசி வார்த்தையை மட்டுமே அவர் உச்சரித்தார்.

காங்கிரஸ் எம்.பி.க்கள், சபையின் மையப்பகுதிக்கு சென்றும் கோஷமிட்டனர். “சபைக்கு சுவரொட்டியை கொண்டுவரக்கூடாது” என்று சபாநாயகர் எச்சரித்தார். அதற்கு “அது எங்கள் உரிமை” என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் பதில் அளித்தனர்.

“அது உங்கள் உரிமை அல்ல” என்று சபாநாயகர் கூறினார். “நாடு உங்களை கவனித்துக் கொண்டிருக்கிறது” என்றும் அவர் கூறினார்.

தற்போதைய மக்களவையில் ராகுல் காந்தி கோஷம் எழுப்பியது இதுவே முதல்முறை ஆகும்.
Tags:    

Similar News