செய்திகள்

கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் - புதிய மந்திரிகளாக இருவர் பதவியேற்பு

Published On 2019-06-14 11:51 GMT   |   Update On 2019-06-14 11:51 GMT
கர்நாடக மந்திரிசபை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் சுயேச்சை எம்.எல்.ஏ.க்களான நாகேஸ், ஆர்.சங்கர் ஆகியோர் மந்திரிகளாக பதவியேற்றனர்.
பெங்களூரு:

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.  

மந்திரி பதவி கிடைக்காமல் அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை ஆபரேஷன் தாமரை மூலம் இழுத்து ஆட்சியை பிடிக்க பா.ஜனதா முயற்சிப்பதாக கூட்டணி தலைவர்கள் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர். மேலும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் படுதோல்வி அடைந்ததால் ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதாவினர் முயற்சிப்பார்கள் என்ற தகவல் வெளியானது.



இதையடுத்து, கூட்டணி ஆட்சியை காப்பாற்ற அதிருப்தி எம்.எல்.ஏ.க்களான ரமேஷ் ஜார்கிகோளி, மகேஷ் கமட்டள்ளி, பி.சி.பட்டீல் உள்ளிட்டோரை சமாதானப் படுத்தும் முயற்சியில் முதல்-மந்திரி குமாரசாமி, சித்தராமையா, பரமேஸ்வர் உள்ளிட்ட தலைவர்கள் ஈடுபட்டனர். 

இதுதொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் முதல்-மந்திரி குமாரசாமி ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து, மந்திரிசபையை விரிவாக்கம் செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டது. 



அதன்படி, சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு செல்வதை தடுக்க, முதற்கட்டமாக அவர்கள் 2 பேருக்கும் மந்திரி பதவி வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில், கடந்த 12-ந் தேதி மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நடிகர் மற்றும் எழுத்தாளர் கிரீஷ் கர்னாட் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கப்பட்டதால், கடந்த 12-ந் தேதி மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறவில்லை.

இந்நிலையில்,  நீண்ட இழுபறிக்கு பின்பு கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் இன்று நடைபெற்றது. இதில் சுயேச்சை எம்.எல்.ஏ.க்களான நாகேஸ், ஆர்.சங்கர் ஆகியோர் மந்திரிகளாக பதவியேற்றனர். அவர்களுக்கு கவர்னர் வஜூபாய் வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார். 
Tags:    

Similar News