செய்திகள்

அரியானாவில் ‘செல்பி’ மோகத்தால் ஓடும் ரெயிலில் சிக்கி 3 வாலிபர்கள் பலி

Published On 2019-05-02 00:04 GMT   |   Update On 2019-05-02 00:08 GMT
‘செல்பி’ மோகத்தால் ஓடும் ரெயிலில் சிக்கி 3 வாலிபர்கள் பலியான சம்பவம் அரியானாவில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #SelfieCrazy #Selfi #Haryana
சண்டிகார்:

‘செல்பி’ மோகம், புற்றுநோய் போல இளம்தலைமுறையினர் இடையே பரவி வருகிறது. ‘செல்பி’ படம் எடுக்க வேண்டும் என்றால் இவர்கள் இடம், காலம், சூழல் எதையும் பார்ப்பது இல்லை.

அதுவும் இப்போது கடலில் இறங்கி குளித்துக்கொண்டே ‘செல்பி’ எடுப்பது, ஓடும் ரெயில் அல்லது பஸ் முன் ‘செல்பி’ எடுப்பது என ஆபத்தோடு கை குலுக்குவதற்கு அவர்கள் தயங்குவதே இல்லை.

இது சமயங்களில் உயிருக்கு உலை வைத்து விடுகிறது. இப்படி அரியானாவில் நடந்த ஒரு சம்பவம், நெஞ்சை உலுக்குவதாக அமைந்துள்ளது.

அங்கு பானிப்பட்டில் வசித்து வந்த சன்னி, சாமன், உத்தரபிரதேசத்தை சேர்ந்த கிஷன், டெல்லியை சேர்ந்த தினேஷ் ஆகிய 4 பேரும் உறவினர்கள். 18 முதல் 20 வயது வரையிலானவர்கள்.

இவர்கள் கடந்த திங்கட்கிழமையன்று டெல்லி-அம்பாலா வழித்தடத்தில் உள்ள பூங்காவுக்கு சென்றனர். அங்கு சிறிது நேரம் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டிருந்தனர். அந்த பூங்காவின் பின்புறம் இருந்த ரெயில் தண்டவாளத்தில் நின்று ‘செல்பி’ படம் எடுக்கலாம் என அவர்களுக்கு ஆசை வந்தது.

அதைத் தொடர்ந்து அவர்கள் அங்கு சென்று ரெயில் தண்டவாளத்தில் சிறிது நேரம் அமரலாம் என கருதி உட்கார்ந்தனர். அப்போது அந்த தண்டவாளத்தில் அதிவேகமாக ஒரு ரெயில் வந்து கொண்டிருந்ததை கவனித்து பதற்றம் அடைந்தனர். அவர்களில் சன்னி, கிஷன், சாமன் ஆகிய மூவரும் அந்த தண்டவாளத்தில் இருந்து இடது புறம் இருந்த தண்டவாளத்துக்கு தாவினர். தினேஷ் மட்டும் வலது புறம் இருந்த தண்டவாளத்தில் குதித்தார்.

ஆனால் மூன்று பேரும் ஒன்றாக குதித்த தண்டவாளத்தில் டெல்லி-கல்கா பயணிகள் ரெயில் அதிவேகமாக வந்து கொண்டிருந்ததை அவர்கள் கவனிக்க தவறினர். அந்த ரெயில் அவர்கள் மீது மோதித்தள்ளியது. இதில் அவர்கள் உடல் துண்டு, துண்டானது. அந்த உடல் பாகங்கள் 20 மீட்டர் தொலைவில் போய் விழுந்தன.

அதே நேரத்தில் வலது புற தண்டவாளத்தில் குதித்ததால் தினேஷ் தெய்வாதீனமாக உயிர் தப்பினார். ஆனால் தன்னுடன் சற்றுமுன் வரையில் சிரித்துப்பேசிக்கொண்டிருந்த உறவு வாலிபர்கள் 3 பேரும், கண் இமைக்கும் நேரத்தில் ஓடும் ரெயில் மோதி துண்டு துண்டாகிப்போனது கண்டு மனம் உடைந்து போனார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ரெயில்வே போலீசார் விரைந்து வந்து 3 பேரது உடல் பாகங்களையும் சேகரித்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் அரியானாவில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ‘செல்பி’ மோகத்தில் திரிகிற இளைய தலைமுறையினருக்கு பாடமாகவும் ஆகி உள்ளது.  #SelfieCrazy #Selfi #Haryana

Tags:    

Similar News