செய்திகள்

காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவை நீக்குவோம்- அமித்ஷா பேச்சு

Published On 2019-04-27 09:54 GMT   |   Update On 2019-04-27 09:54 GMT
பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவை நீக்குவோம் என்று தேர்தல் பிரசாரத்தில் அமித்ஷா பேசியுள்ளார். #amitshah #pmmodi #bjp #kashmir370

மெதினிநகர்:

பா.ஜனதா தலைவர் அமித்ஷா ஜார்க்கண்ட் மாநிலம் பல்லாமு மாவட்டம் மெதினிநகரில் இன்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசியதாவது:-

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது அரசியல் சட்டப் பிரிவு உள்ளது. மோடி மீண்டும் பிரதமராகும் போது அந்த சட்டப் பிரிவை நீக்குவோம்.

இந்தியாவில் இருந்து காஷ்மீரை பிரிக்க பாகிஸ்தான் விரும்புகிறது. ஆனால் நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம். துப்பாக்கி குண்டுகளுக்கு அஞ்ச மாட்டோம். அதை தடுப்போம்.

நாட்டின் பாதுகாப்பு வி‌ஷயத்தில் எந்த ஒரு சமரசமும் செய்து கொள்ள மாட்டோம். முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது பாகிஸ்தான் பயங்ரவாத இயக்கத்தை பயன்படுத்தி இந்தியா மீது தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வந்தது.

10 ஆண்டுகளில் காங்கிரஸ் தலைமயிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ராணுவ வீரர்களின் தலைகள் துண்டிக்கப்பட்டன. அந்த சம்பவத்தை எப்போதும் மறக்க முடியாது.

காஷ்மீருக்கு தனி பிரதமர் வேண்டும் என்று தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்து இருக்கிறார். ஒரு நாட்டுக்கு எப்படி 2 பிரதமர் இருக்க முடியும்.


பிரதமர் மோடியால் நாட்டின் பாதுகாப்பு பலம் பெற்று வருகிறது. அவருக்கு பா.ஜனதா எல்லா வகையிலும் உறுதுணையாக இருக்கும்.

இவ்வாறு அமித்ஷா பேசினார். #amitshah #pmmodi #bjp #kashmir370

Tags:    

Similar News