செய்திகள்

நானும் காவலாளி - நாடு முழுவதும் 500 பகுதிகளை சேர்ந்த மக்களுடன் மோடி கலந்துரையாடல்

Published On 2019-03-19 12:24 GMT   |   Update On 2019-03-19 12:24 GMT
நாடு முழுவதும் உள்ள 500 பகுதி மக்களுடன் நானும் காவலாளி என்ற தலைப்பில் பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார். #PMModi #Chowkidar
புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. ரபேல் ஒப்பந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். ‘காவலாளி ஒரு திருடன்’ என்று விமர்சித்தார்.
  
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘நானும் காவலன்தான்’ என்கிற புதிய பிரசார வீடியோவை வெளியிட்டார்.

மேலும் அந்த பதிவில் ‘‘உங்கள் காவலன் தேசத்துடன் துணை நிற்கிறார். நான் தனி ஆள் கிடையாது. யாரெல்லாம் ஊழல், சமூக கொடுமைகளை எதிர்த்து போராடுகிறார்களோ அவர்கள் எல்லோரும் காவலன்தான்’’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

தனது டுவிட்டர் பக்கத்தின் பெயரையும் பிரதமர் மோடி மாற்றியுள்ளார். (சவுகிதார்) ‘காவலன் நரேந்திர மோடி’ என்று மாற்றம் செய்துள்ளார்.

இதேபோல் பா.ஜனதா தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய மந்திரிகள், பாஜகவை சேர்ந்த முதல் மந்திரிகள், மாநில மந்திரிகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பாஜக பிரமுகர்களும் தங்களது டுவிட்டர் கணக்குகளில் தங்களது பெயர்களுக்கு முன்னால் ‘காவலாளி’ (சவுகிதார்) என்ற அடைமொழியை இணைத்துள்ளனர்.

இந்நிலையில், நானும் ஒரு காவலாளி என்ற அடைமொழியை வீடியோ பிரசாரமாக முன்னெடுத்துச் செல்ல பிரதம்ர் மோடி திட்டமிட்டுள்ளார்.

அவ்வகையில், முதல்கட்டமாக வரும் 31-ம் தேதி நாடு முழுவதும் உள்ள 500 பகுதிகளில் பா.ஜ.க. தொண்டர்கள் மற்றும் பொது மக்களிடையே வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார் என பா.ஜ.க. தெரிவித்துள்ளது. #PMModi #Chowkidar
Tags:    

Similar News