செய்திகள்

கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கருக்கு புற்றுநோய் முற்றிவிட்டது: மந்திரி தகவல்

Published On 2019-03-04 05:30 GMT   |   Update On 2019-03-04 05:30 GMT
கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கருக்கு புற்றுநோய் முற்றி கடைசி கட்ட நிலையில் இருப்பதாக மந்திரி விஜய் சர்தேசாய் கூறியுள்ளார். #VijaiSardesai #ManoharParrikar
பனாஜி:

கோவா மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதல்- மந்திரியாக உள்ள மனோகர் பாரிக்கர் புற்று நோயால் பாதிக்கப்பட்டார்.

பரிசோதனையில் அவர் கணைய  புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதன்பின்  அமெரிக்காவுக்கு சென்று  சிகிச்சை பெற்று விட்டு திரும்பினார். ஆனாலும் மனோகர் பாரிக்கரின் உடல் நிலையில் முன்னேற்றம்  ஏற்படவில்லை. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்ற மனோகர் பாரிக்கர்  உடல்நிலை பாதிப்புடனேயே பட்ஜெட் தாக்கல் செய்தார்.



இந்த நிலையில் மனோகர் பாரிக்கருக்கு புற்றுநோய் முற்றி கடைசி கட்ட நிலையில் இருப்பதாக மந்திரி விஜய் சர்தேசாய் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

முதல்வர் மனோகர் பாரிக்கரை இன்று சந்தித்து நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியதற்காக நன்றி தெரிவிக்க உள்ளேன். மனோகர் பாரிக்கருக்கு தற்போது புற்றுநோய் முற்றி இருக்கிறது. நோய் பாதிப்பு இருந்தாலும் அவர் மக்களுக்காக பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என்றார்.

மனோகர்  பாரிக்கர் உடல்நிலை பற்றி தகவல் தெரிவித்த 2-வது மந்திரி விஜய் சர்தேசாய் ஆவார். அதற்கு முன்பு சுகாதார அமைச்சர் விஷ்வஜித் ரானேகான் முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர்  புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #VijaiSardesai #ManoharParrikar
Tags:    

Similar News