செய்திகள்

இது புதிய இந்தியா என்பதை பிச்சை எடுக்கும் பாகிஸ்தான் புரிந்து கொள்ள வேண்டும் - மோடி ஆவேசம்

Published On 2019-02-15 09:35 GMT   |   Update On 2019-02-15 10:06 GMT
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய சதிகாரர்கள் தண்டிக்கப்படுவார்கள். இது புதிய இந்தியா என்பதை பிச்சை எடுக்கும் பாகிஸ்தான் புரிந்து கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். #PMModi #CRPF #PulwamaAttack
லக்னோ:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் மத்திய பாதுகாப்பு படையினர் மீது நேற்று நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 40 வீரர்கள் பலியான நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இன்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி முன்னர் எப்போதும் இல்லாத வகையில் பாகிஸ்தானை மிகவும் கடுமையாக தாக்கிப் பேசினார்.



‘புல்வாமா தாக்குதலில் தங்களது இன்னுயிரை நீத்த நமது வீரம்மிக்க படையினரின் தியாகம் ஒருபோதும் வீணாகப் போகாது. நமது பாதுகாப்பு படையினரின் வீரதீரத்தை நாடு பல சந்தர்ப்பங்களில் கண்டுள்ளது. அவர்களின் துணிச்சல் மற்றும் தீரத்தில் சந்தேகப்படும் ஒருவர்கூட இந்த நாட்டில் இருக்க முடியாது.

பாகிஸ்தானின் நோக்கத்துக்கு இந்திய மக்கள் தகுந்த பதிலடி தருவார்கள். உலகின் மிகப்பெரிய நாடுகள் எல்லாம் இந்தியாவுடன் இணைந்து எங்களுக்கு ஆதரவாக இருக்கின்றன. புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து எனக்கு பல நாடுகளின் தலைவர்களிடம் இருந்து வந்துள்ள இரங்கல் செய்திகளின் மூலம் அவர்கள் இச்சம்பவம் தொடர்பாக வருத்தம் மட்டும் கொள்ளவில்லை. கடுமையான கோபத்திலும் உள்ளனர். பயங்கரவாதத்துக்கு முடிவுகட்டியே தீர வேண்டும் என்பதற்கு அவர்கள் அனைவருமே ஆதரவாக இருக்கின்றனர்.

புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய சதிகாரர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள். இது புதிய இந்தியா என்பதை பாகிஸ்தான் மறந்து விட்டது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் கையில் பிச்சைப் பாத்திரத்துடன் உலக நாடுகளின் உதவிக்காக நாடுநாடாக ஏறி, இறங்கி வருகிறது’ என ஜான்சி மாவட்டத்தில் பேசிய பிரதமர் மோடி ஆவேசமாக கூறினார். #PMModi #CRPF #PulwamaAttack
Tags:    

Similar News