செய்திகள்

510 படுக்கைகளுடன் இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரி, மருத்துவமனை - அரியானாவில் மோடி திறந்து வைத்தார்

Published On 2019-02-12 15:01 GMT   |   Update On 2019-02-12 15:01 GMT
அரியானா மாநிலம், பரிதாபாத் நகரில் 595 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். #PMdedicatesESICmedicalcollege #sESIChospital
சண்டிகர்:

அரியானா மாநிலம், பரிதாபாத் நகரில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் 595 கோடி ரூபாய் செலவில் இ.எஸ்.ஐ. (தொழிலாளர் வைப்பு நிதி) மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டுள்ளது.

அவசர சிகிச்சை பிரிவு, வெளி நோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளுக்கான தனிப்பிரிவுகள், அதிநவீன அறுவை சிகிச்சை அரங்கங்கள், ரத்த மறுசுழற்சி சிகிச்சை வசதிகள், ஸ்கேன், நோய் குறியியல் பரிசோதனை கூடம், ரத்த வங்கி, தீவிர சிகிச்சைக்கான தனிப்பிரிவு, டாக்டர்கள், நர்சுகளுக்கான குடியிருப்புகள் மற்றும் மருத்துவ கல்லூரி மாணவ-மாணவியர்களுக்கான தனித்தனி விடுதிகள் ஆகியவை இந்த மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க இன்று அரியானா வந்த பிரதமர் நரேந்திர மோடி 510 உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த இ.எஸ்.ஐ. மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியை திறந்து வைத்தார்.



நாட்டில் உள்ள அனைத்து மக்களும் உயர்தரமான மருத்துவ சிகிச்சை பெற்று ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு செயலாற்றி வருகிறது. இன்று திறக்கப்பட்டுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் மூலம் இந்த பிராந்தியத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பயனடைவார்கள் என இந்த திறப்புவிழாவில் பேசிய பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

அரியானா மாநில முதல் மந்திரி மனோகர் லால் கத்தார், கவர்னர் சத்யடியோ நாராயண் ஆரியா மற்றும் மத்திய குடிநீர், வடிகால்துறை மந்திரி உமா பாரதி உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். #PMdedicatesESICmedicalcollege #sESIChospital 
Tags:    

Similar News