செய்திகள்

காட்டுமிராண்டி போல் பேசாதீர்கள் - அமித் ஷாவுக்கு மம்தா எச்சரிக்கை

Published On 2019-01-30 11:19 GMT   |   Update On 2019-01-30 11:19 GMT
ஓவியங்களை விற்று பணம் பெற்றது தொடர்பான சர்ச்சையில் பா.ஜ.க. தலைவர் அமித் ஷா காட்டுமிராண்டித்தனமாக பேசுவதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். #MamatadaresPM #Mamata
கொல்கத்தா:

மேற்கு வங்காளம் மாநிலம், கிழக்கு மிட்னப்பூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, ‘மிகசிறந்த கலைஞர்கள் வரைந்த ஓவியங்களாக இருந்தாலும் அவை பத்தாயிரம், இருபதாயிரம், ஒரு லட்சம் அல்லது பத்து லட்சம் ரூபாய் வரைதான் விலை போகும்.

ஆனால், உங்கள் முதல் மந்திரி மம்தா பானர்ஜி வரைந்த ஓவியங்கள் மட்டும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விலை போகிறது. பிரபல சீட்டு கம்பெனி அதிபர்கள் அவற்றை வாங்குகிறார்கள்.


இப்படிப்பட்ட சீட்டு கம்பெனி அதிபர்கள் மீதான மோசடி வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது, தனது ஓவியங்களை கோடிக்கணக்கான ரூபாய்க்கு வாங்கும் அவர்களை கைது செய்யுமாறு உங்கள் முதல் மந்திரி எப்படி உத்தரவிடுவார்? என கேள்வி எழுப்பி இருந்தார்.

அமித் ஷாவின் இந்த கருத்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அவர்மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், பிர்பம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, நான் ஓவியங்களை விற்று பணம் பெற்றேன். எனது கணக்கில் ஒரே ஒரு பைசா வந்து சேர்ந்தது என்பதை பிரதமர் மோடி நிரூபிக்க முடியுமா? என்று நேரடியாக கேள்வி எழுப்பினார்.

கொஞ்சம்கூட மரியாதை இல்லாமல் பா.ஜ.க. தலைவர்கள் காட்டுமிராண்டித்தனமாக பேசுவதாகவும் மம்தா குற்றம்சாட்டியுள்ளார்.

இதேபோல், கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது மேற்கு வங்காளம் மாநிலம், ராம்பூரில் பிரச்சாரம் செய்த நரேந்திர மோடி, “மம்தாவின் ஓவியங்கள் வழக்கமாக ரூ.4 லட்சம், 8 லட்சம் அல்லது 15 லட்சங்கள் வரைதான் விற்பனையாகின்றன. ஆனால், ஒரே ஒரு ஓவியம் மட்டும் ரூ.1.8 கோடிக்கு விற்றதன் காரணம் என்ன? இவ்வளவு தொகை கொடுத்து இந்த ஓவியத்தை வாங்கியது யார்? திடீரென உங்கள் திறனை அவர்கள் கண்டறிந்தது எப்படி?” எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.

மோடியின் குற்றச்சாட்டுக்கு அப்போது பதில் அளித்த மம்தா, தனது ஓவியம் கோடிக்கணக்கில் விலை போனதை மறுத்ததுடன், மோடியை ‘பேய்’ என கடுமையாக விமர்சனம் செய்திருந்தது நினைவிருக்கலாம். #MamatadaresPM #Mamata
Tags:    

Similar News