செய்திகள்
திருவனந்தபுரத்தில் போராட்டம் நடத்தியவர்களை போலீசார் விரட்டியடித்த காட்சி

போராட்டத்தின்போது கடும் மோதல்- காயமடைந்த சபரிமலை கர்ம சமிதி உறுப்பினர் உயிரிழப்பு

Published On 2019-01-03 04:50 GMT   |   Update On 2019-01-03 04:50 GMT
பந்தளத்தில் போராட்டம் நடத்திய இந்து அமைப்பினருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த சபரிமலை கர்ம சமிதி உறுப்பினர் உயிரிழந்தார். #SabarimalaProtest #KeralaShutdown #ProtesterDies
பந்தளம்:

கேரளாவைச் சேர்ந்த 50 வயதுக்குட்பட்ட இரண்டு பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசனம் செய்தது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. சபரிமலைக்கு 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் இந்து அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த போராட்டத்தின்போது வன்முறை வெடித்துள்ளது.

சபரிமலை கர்ம சமிதி சார்பில் பந்தளத்தில் உள்ள மார்க்சிஸ்ட் அலுவலகம் அருகே போராட்டம் நடைபெற்றபோது, அங்கிருந்த மார்க்சிஸ்ட் தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டக்காரர்களுக்கும், மார்க்சிஸ்ட் கட்சியினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது சபரிமலை கர்ம சமிதியைச் சேர்ந்த சந்திரன் உன்னிதான் (55) என்பவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் இருந்து கற்களை வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த சந்திரன் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று அவர் இறந்துபோனார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே கேரளாவில் இன்று சபரிமலை கர்ம சமிதி அமைப்பு சார்பில்  முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. பெண்களை தரிசனம் செய்ய அனுமதித்ததைக் கண்டித்து, காங்கிரஸ் சார்பில் இன்று கருப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்று நடைபெறவிருந்த பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. #SabarimalaProtest #KeralaShutdown #ProtesterDies 
Tags:    

Similar News