செய்திகள்
கோப்புப்படம்

ரபேல் விவகாரத்தை எழுப்பி கடும் அமளி- காங்கிரஸ் எம்பிக்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை

Published On 2018-12-27 06:24 GMT   |   Update On 2018-12-27 06:24 GMT
ரபேல் விவகாரம் தொடர்பாக பேசுவதற்கு உடனே அனுமதிக்க வலியுறுத்தி அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்பிக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் எச்சரித்தார். #WinterSession #LokSabha #SumitraMahajan
புதுடெல்லி:

பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 11-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ரபேல் விவகாரம், மேகதாது அணை விவகாரம் மற்றும் மாநிலம் சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் பாராளுமன்ற இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த அமளிக்கிடையிலும் சில மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கடந்த வாரம் திங்கட்கிழமை முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின்னர் வார இறுதி நாட்கள் மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறை என தொடர்ந்து 5 நாட்கள் பாராளுமன்றத்திற்கு விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து இன்று காலை மீண்டும் பாராளுமன்றம் கூடியது.

மக்களவையில் இன்று முத்தலாக் மசோதா விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டதால் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்கும்படி கட்சி தலைமை அறிவுறுத்தியது. இதற்காக கொறடா உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.


11 மணிக்கு மக்களவை கூடியதும், ரபேல் விவகாரம் குறித்து பேசுவதற்கு தனக்கு நேரம் ஒதுக்கும்படி மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவர்  மல்லிகார்ஜுன கார்கே, சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் கேட்டார். ஆனால் இந்த விவகாரம் குறித்து பேசுவதற்கு இது சரியான நேரம் இல்லை என்று கூறிய சபாநாயகர், மதியம் 12 மணிக்கு பிறகு 2 நிமிடம் பேசுவதற்கு அனுமதி அளிப்பதாக கூறினார்.

உடனடியாக அனுமதி அளிக்காததால் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். கோஷங்கள் எழுப்பியபடி அமளியில் ஈடுபட ஆரம்பித்தனர். கோரிக்கை அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி அவையின் மையப்பகுதிக்கு சென்று முழக்கமிட்டனர். இதனால் கடும் கோபம் அடைந்த சபாநாயகர், அவையை மதிக்காமல் நடக்கும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போகிறேன் என்று கூறி எச்சரித்தார்.

அதன்பிறகும் உறுப்பினர்களின் அமளி நீடித்தது. எனவே, பகல் 12 மணி வரை அவையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். #WinterSession #LokSabha #SumitraMahajan
Tags:    

Similar News