செய்திகள்

மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பு நீக்கத்துக்கான நோக்கம் நிறைவேறவில்லை - ரிசர்வ் வங்கி அம்பலம்

Published On 2018-11-08 23:29 GMT   |   Update On 2018-11-08 23:29 GMT
மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பு நீக்கத்துக்கான நோக்கம் நிறைவேறவில்லை என்பதை ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரங்கள் அம்பலப்படுத்தி இருக்கின்றன. #RBI #Demonetisation #NoteBan
புதுடெல்லி:

கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, மக்களிடம் பணப்புழக்கத்தை (ரொக்க பரிமாற்றம்) குறைப்பதற்காகவும் பணமதிப்பு நீக்க நடவடிக்கை அமல்படுத்தப்பட்டதாக மத்திய அரசு கூறியது. ஆனால் இந்த நோக்கம் நிறைவேறவில்லை என்பதை ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரங்கள் அம்பலப்படுத்தி இருக்கின்றன.



கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அதே ஆண்டு நவம்பர் 4-ந் தேதி நாட்டில் இருந்த பணப்புழக்கத்தின் மதிப்பு ரூ.17.90 லட்சம் கோடி ஆகும். ஆனால் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 26-ந் தேதி நிலவரப்படி இந்த மதிப்பு ரூ.19.60 லட்சம் கோடியாக இருந்தது. அந்தவகையில் 9.5 சதவீதம் உயர்வைத்தான் அடைந்து இருக்கிறது.

இதைப்போல பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏ.டி.எம். மூலம் பணம் எடுப்பது குறைந்து, டிஜிட்டல் பரிமாற்றம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதிலும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ரூ.2.54 லட்சம் கோடியை மக்கள் ஏ.டி.எம்.கள் மூலம் எடுத்துள்ளனர். ஆனால் கடந்த ஆகஸ்டு மாதத்தில் ரூ.2.75 லட்சம் கோடி ஏ.டி.எம். மூலம் எடுக்கப்பட்டு இருக்கிறது. இதுவும் 8 சதவீதம் உயர்ந்து இருக்கிறது.

அதேநேரம் செல்போன் மூலமான பணப்பரிமாற்றம் மட்டும் அரசின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமைந்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபரில் ரூ.1.13 லட்சம் கோடியாக இருந்த செல்போன் பணப்பரிமாற்றம், கடந்த ஆகஸ்டு மாதத்தில் ரூ.2.06 லட்சம் கோடியாக அதிகரித்து இருக்கிறது.

மேற்கண்ட தகவலை ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News