செய்திகள்

சத்தீஷ்கர் முன்னாள் முதல்-மந்திரி அஜித் ஜோகி குடும்பத்தில் 4 பேர் தேர்தலில் போட்டி

Published On 2018-10-21 11:24 GMT   |   Update On 2018-10-21 11:24 GMT
சத்தீஷ்கர் முன்னாள் முதல்-மந்திரியான அஜித் ஜோகியின் குடும்பத்தினர் 4 பேர் 3 கட்சிகள் சார்பில் வர இருக்கும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார்கள். #AssemblyElection

ராய்ப்பூர்:

மத்திய பிரதேசத்தில் இருந்து சத்தீஷ்கர் மாநிலம் 2000-ம் ஆண்டு உருவானது. அம்மாநிலத்தின் முதல்- மந்திரி பொறுப்பை முதலில் வகித்தவர் அஜித் ஜோகி.

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி அஜித் ஜோகியும், அவரது மகன் அமித் ஜோகியும் காங்கிரஸ் கட்சியை விட்டு 6 ஆண்டுகளுக்கு முன்பு நீக்கப்பட்டனர்.

இதை தொடர்ந்து அவர் 2016-ம் ஆண்டு ஜனதா காங்கிரஸ் சத்தீஷ்கர் (ஜே.சி.சி.) என்ற கட்சியை தொடங்கினார்.

முன்னாள் முதல்-மந்திரியான அஜித் ஜோகியின் குடும்பத்தினர் 4 பேர் 3 கட்சிகள் சார்பில் வர இருக்கும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார்கள். 90 தொகுதிகளை கொண்ட சத்தீஷ்கர் சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக நவம்பர் 12 மற்றும் 20-ந் தேதிகளில் தேர்தல் நடக்கிறது.

அஜித் ஜோகியின் மனைவி ரேணு தற்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். அவர் காங்கிரசில் இருந்து விலகி தனது கணவர் கட்சியில் சேர மறுத்துவிட்டார்.

ஹோண்டா தொகுதியில் மீண்டும் போட்டியிட டிக்கெட் கேட்டுள்ளார். அவர் காங்கிரஸ் வேட்பாளராக மீண்டும் நிறுத்தப்படுகிறார்.


அஜித் ஜோகியின் மருமகள் ரிச்சா. அவர் தனது மாமனாரின் கட்சியில் இருந்து விலகி பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து உள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளராகவும் அவர் நிறுத்தப்பட்டுள்ளார். அகல்தரா தொகுதியில் ரிச்சா போட்டியிடுகிறார்.

அஜித் ஜோகியும், அவரது மகன் அமித்தும் ஜனதா காங்கிரஸ் சத்தீஷ்கர் கட்சி சார்பில் போட்டியிட உள்ளனர்.

இதில் அஜித் ஜோகி போட்டியிடுவாரா? என்பது இன்னும் உறுதியாகவில்லை. அஜித் ஜோகி குடும்பத்தில் 4 பேர் 3 கட்சிகளில் உள்ளனர். அவர்கள் தேர்தல் களத்தில் நிற்கிறார்கள்.

மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் அஜித் ஜோகி கூட்டணி அமைத்து போட்டியிகிறார். ஜனதா காங்கிரஸ் சத்தீஷ்கர் கட்சி 55 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் 33 இடங்களிலும் போட்டியிடுகின்றன. #AssemblyElection

Tags:    

Similar News